PUBLISHED ON : அக் 26, 2012

இதுவரை: ஹெர்குலிசை எப்படியாவது கொன்றுவிட வேண்டும் என்பதற்காக, கஷ்டமான போட்டிகளை வைத்தான் யுரிஸ்தியசு. இனி-
சூழ்ச்சி நிறைந்த யுரிஸ்தியசு அவனைப் பார்த்துப் புன்னகை செய்தான்.
''மாவீரன் ஹெர்குலிசே! கடவுளின் கட்டளைப்படிதான் நான் உனக்குச் சோதனைகள் வைக்கிறேன். நீ இவற்றில் வெற்றி பெற்றால், உன் புகழ் உலகம் எங்கும் நிலைத்து நிற்கும்,'' என்று இனிமையாகப் பேசினான்.
''அரசே! உள்ளத்தில் நஞ்சும், உதட்டில் தேனும் வைத்திருக்கிறாய். உன் இனிமையான பேச்சை கேட்க நான் வரவில்லை. நீ எனக்கு வைக்கும் முதலாவது சோதனை என்ன? அதைச் சொல்,'' என்று கர்ஜனை செய்தான்.
'என்ன சோதனை வைத்தால் இவன் திரும்பி வர மாட்டான்' என்று சிந்தித்தான் யுரிஸ்தியசு.
''ஹெர்குலிசே! ஆர்கோலிசு நாட்டு நிமி காட்டில், கொடிய சிங்கம் ஒன்று உள்ளது. நீ அதைக் கொன்று அதன் தோலை எடுத்து வரவேண்டும். இதுதான் முதல் சோதனை,'' என்றான்.
மைசின் நகரத்திலிருந்து புறப்பட்டான் ஹெர்குலிஸ். பல நாட்கள் இடைவிடாமல் நடந்த அவன், நிமி காட்டை அடைந்தான்.
அவனை வரவேற்ற ஆயன், ''ஐயா! இரவாகி விட்டது. என் குடிசையில் தங்கி உணவு உண்டு காலையில் புறப்படலாம்!'' என்று அன்புடன் அழைத்தான்.
அவன் அழைப்பை ஏற்றான் ஹெர்குலிஸ். உணவு உண்டு அவன் குடிசையிலேயே படுத்தான்.
குடிசைக்கு வெளியே ஆயனும், அவன் தாயும் படுத்திருந்தனர். அவர்கள் பேசும் குரல் ஹெர்குலிசுக்குக் கேட்டது.
''அம்மா! நடந்தது நடந்து விட்டது. அதையே நினைத்து அழுது புலம்புவதால் என்ன பயன்?'' என்றான்.
''மகனே! மாடுகளை இழந்ததையாவது தாங்கிக் கொள்வேன். என் அன்பு மருமகள் உன் மனைவி கொடிய சிங்கத்திற்கு இரையாகி விட்டாளே... அதை என்னால் எப்படித் தாங்க முடியும்?''
''அம்மா! நற்பண்புகள் நிறைந்தவள் என் மனைவி. யார் உள்ளமும் வருந்தாமல் நடப்பவள். அவளைக் கொன்று தின்ற சிங்கத்திற்கு இன்னும் சாவு வரவில்லையே,'' என்று புலம்பினான் ஆயன்.
இருவரின் அழுகுரலும் கேட்டது.
இதைக் கேட்ட ஹெர்குலிஸ் உள்ளம் துடித்தான்.
அப்போது அவன் தேவாதி தேவனை மறந்தான். யுரிஸ்தியசுவை மறந்தான். தனக்கு வைக்கப்பட்ட சோதனையை மறந்தான்.
'மக்களுக்குக் கொடுமை செய்யும் அந்தச் சிங்கத்தை எப்படியாவது கொல்ல வேண்டும். மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும்' என்பதே அவன் எண்ணமாக இருந்தது.
குடிசையை விட்டு வெளியே வந்த அவன். அழுது கொண்டிருந்த அவர்களைப் பார்த்தான்.
''அந்தச் சிங்கத்தைக் கொல்லவே நான் இங்கு வந்துள்ளேன். என் பெயர் ஹெர்குலிஸ். உங்கள் உதவி இருந்தால், என்னால் அந்தச் சிங்கத்தைக் கொல்ல முடியும். உங்களுக்கு அந்தச் சிங்கத்தைப் பற்றி என்னென்ன தெரியுமோ சொல்லுங்கள். அப்போதுதான் என்னால் அதைக் கொல்ல முடியும். இனி யாரும் இங்கே உங்களைப் போல அழக் கூடாது'' என்றான்.
அவன் பேச்சிலும், தோற்றத்திலும் நம்பிக்கை கொண்டான் ஆயன்.
''ஐயா! உங்களின் வீரச் செயல்களைப் பற்றிக் கேள்விப்பட்டுள்ளேன். அந்தக் கொடிய சிங்கம் மிகவும் வலிமை வாய்ந்தது. எந்த ஈட்டியாலும், அம்பாலும் அதன் உறுதியான தோலைத் துளைக்க முடியாது.
''காட்டின் நடுவில் உள்ள ஒரு குகையில் அது வாழ்கிறது. இரவு நேரத்தில் அது வெளியே வரும். அதன் கண்ணில் பட்ட யாரும் இதுவரை உயிருடன் இருந்தது இல்லை. இங்குள்ள எல்லாரும் அந்தச் சிங்கத்திற்கு அஞ்சி நடுங்கியபடியே வாழ்கின்றனர். அதன் கர்ஜனையைக் கேட்டு ஆடு, மாடுகள் உணவு உண்பது இல்லை. எலும்பும், தோலுமாக உள்ளன,'' என்றான்.
''விரைவில் நல்ல செய்தியை எதிர் பாருங்கள்,'' என்ற ஹெர்குலிஸ் அங்கிருந்து புறப்பட்டான்.
பொழுது விடிந்தது. காட்டிற்குள் நடந்தபடியே இருந்தான் அவன். மீண்டும் இருட்டத் தொடங்கியது. சிங்கத்தைத் தேடி இன்னும் எவ்வளவு தொலைவு நடக்க வேண்டுமோ என்று நினைத்தான்.
வானத்தில் விண் மீன்கள் ஒளி வீசின. தொலைவில் எழுந்த சிங்கத்தின் கர்ஜனை அவனுக்குக் கேட்டது. அருகிலிருந்த புதரில் மறைந்து கொண்டான்.
எப்படியும் சிங்கம் அந்த வழியாக வரும் என்று நினைத்தான். வில்லில் அம்பு பூட்டி பொறுமையுடன் காத்திருந்தான்.
நேரம் நகர்ந்து கொண்டே இருந்தது. அவன் எதிர்பார்த்தது போலவே, அந்தச் சிங்கம் புதர் அருகே வந்தது.
நாலா பக்கமும் தலையைத் திருப்பி அது மோப்பம் பிடித்தது. ஒளிந்திருந்த அவன் அந்தச் சிங்கத்தை நன்றாகப் பார்த்தான்.
நன்கு கொழுத்துப் பயங்கரமாகக் காட்சி அளித்தது. அதன் கழுத்தில் பிடரி மயிர் அடர்ந்து வளர்ந்து இருந்தது. அதன் வால் தரையில் புரண்டது. அது தன்னை தாக்குவதற்கு முன், அதை தான் தாக்க வேண்டும் என்று நினைத்தான் ஹெர்குலிஸ்.
விரைவாகச் செயல்பட்ட அவன், அதன் மீது இரண்டு அம்புகளை எய்தான். அந்த அம்புகள் அதன் உடலைத் துளைக்கவில்லை. அப்படியே பட்டுத் தெறித்தன. தன் மீது அம்புகள் பாய்ந்ததைப் பார்த்தது சிங்கம், புதருக்குள் யாரோ இருக்கிறார்கள் என்பதை அறிந்துக் கோபம் கொண்டது.
அந்தக் காடே அதிரும்படி பயங்கரமாகக் கர்ஜனை செய்தது. புதரை நோக்கி அடி எடுத்து வைத்தது. இதைப் பார்த்த ஹெர்குலிஸ் புதரை விட்டு வெளியே வந்தான். தன் கையிலிருந்த கதையால் சிங்கத்தின் தலையில் ஓங்கி அடித்தான்.
அந்தக் கதை பல துண்டுகளாகிக் கீழே விழுந்தது.
வலியால் துடித்த சிங்கம் சிறிது பின்வாங்கியது. தன்னை அடித்தவன் யார் என்று பார்த்தது.
'சிங்கம் தாக்கத் தயாராகி விட்டது. எப்போது வேண்டுமானாலும் தன் மேல் பாயலாம். கவனமாக இருக்க வேண்டும்' என்று நினைத்தான்.
அதன் அசைவுகளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
அவனைக் கோபத்துடன் முறைத்துப் பார்த்த சிங்கம், கர்ஜனை செய்தபடி அவன் மீது வேகமாகப் பாய்ந்தது.
இதை எதிர்பார்த்த அவன் அதன் பாய்ச்சலிலிருந்து குனிந்து தப்பித்துக் கொண்டான். தன் கைகள் இரண்டையும் நீட்டி அதன் கழுத்தை இறுகப் பிடித்துக் கொண்டான்.
அவன் பிடியிலிருந்து விடுபட சிங்கம் போராடியது.
அவனையும் இழுத்துக் கொண்டு தரையில் விழுந்தது. மேலும், கீழும் புரண்டது. தன் கால் நகத்தால் அவனைப் பிராண்டியது.
இதனால் அவனின் உடலெங்கும் ரத்தம் வழிந்தது. மாவீரனைக் காயங்கள் என்ன செய்யும்? சிங்கத்தின் கழுத்தை அவன் விடவே இல்லை.
அதன் கர்ஜனைக்கு எதிராக அவனும் உறுமிக் கொண்டிருந்தான். அவர்கள் போராட்டம் நீண்ட நேரம் நடந்தது.
- தொடரும்.
