PUBLISHED ON : அக் 26, 2012

முன்னொரு காலத்தில் ஒரு பெரிய காடு இருந்தது. அதில், எல்லா வகையான விலங்குகளையும் கடவுள் படைக்க ஆரம்பித்தார்.
''எங்களுக்குள் தலைவர் வேண்டும். அப்போதுதான் நாங்கள் ஒற்றுமையாக வாழ முடியும்!'' என்று விலங்குகள் கேட்டுக் கொண்டன.
அதுவும் உண்மைதான் என்று உணர்ந்து கொண்ட கடவுள், அவர்களுக்கு யாரைத் தலைவராக நியமிக்கலாம் என்று ஆலோசனை செய்தார். அப்போது சந்திரன் கடவுளிடம் சொன்னான்.
''கடவுளே, இந்த விலங்குகளுக்குரிய தலைவன் யார் என்பதை நீங்கள் உடனடியாகத் தீர்மானிக்க வேண்டாம். ஒவ்வொரு விலங்கின் தன்மையையும் உத்தேசித்துக் கண்காணித்து அடுத்த மாதத்தில் ஒருநாள் பதவியில் அமர்த்துங்கள்!'' என்றான்.
கடவுளுக்கும் அது சரியெனப்பட்டது. உடனே அவர் நிலவைப் பார்த்து, ''ஊர் உலகம் எல்லாம் உறங்கிக் கொண்டிருக்கும் இரவு வேளையில் கூட அஞ்சாது காடு மேடு என்று சுற்றித் திரிபவன் நீதான். இந்த நேரத்தில்தான் விலங்குகள் எல்லாமே இரை தேட வெளியே வரும்.
அப்போது நீ அவற்றை கண்காணித்து யார் சிறந்தவரோ, அவரைத் தலைவராக ஆக்கி விடு. இந்தப் பணியினை நான் உன்னிடம் ஒப்படைக்கிறேன்!'' என்றார்.
சந்திரனும் சம்மதித்தான்.
அன்றையத் தினத்திலிருந்து எல்லா விலங்குகளையும் கண்காணிக்கத் துவங்கினான். தலைவர் இல்லாததால் விலங்குக் கூட்டம் தறிகெட்டு ஆடத் தொடங்கியது. அதையும் கவனித்தான் சந்திரன்.
அவன் பார்வையில் மயிலின் தோற்றம் பெரிதும் பாதித்தது. எவ்வளவு அழகு இதற்கு? பொறுமையாகவும் இருக்கிறது. கம்பீரமாகவும் உள்ளது. அதை விடத் தேனினும் இனிய குரல். இதற்காகவே இதைத் தேர்ந்தெடுக்கலாம் என்று முடிவு செய்தான்.
சந்திரன், கடவுளிடம் மயிலை சிபாரிசு செய்தான்.
கடவுள் சிரித்துக் கொண்டே, ''உன் விருப்பம் போலச் செய்,'' என்று கூறினார்.
சந்திரனும் பூமிக்கு வந்து காட்டில் நுழைந்து எல்லா விலங்குகளையும் அழைத்து ''இன்று முதல் மயிலை உங்களுக்கெல்லாம் அரசன் ஆக்குகிறேன். அதன் சொல்லை மீறி யாரும் நடக்கக் கூடாது. உங்களுக்கு என்ன பிரச்னை என்றாலும் அதை நீங்களாகத் தீர்த்துக் கொள்ளக் கூடாது. மயிலிடம் சென்று சொல்லித் தக்க தீர்வு காண வேண்டும்!'' என்று கூறினான்.
எல்லா மிருகங்களும் சம்மதித்தன.
அப்போது ஒரு பாம்பு மட்டும் சீறியது.
''மயில் எங்களை விட என்ன உயர்வு?'' என்று கேட்டது.
''மயில் பேரழகு படைத்தது இல்லையா?'' என்றான் சந்திரன்.
''ஏன், அதை விட நல்ல பாம்பாகிய நான் பேரழகாக இல்லையா, இது ஒரு தலைப்பட்சத் தேர்வு!'' என்றது பாம்பு.
''மயிலிடம் பொறுமை இருக்கிறது. உன்னிடம் அது இல்லை. ஆகவே, தான் மயிலைத் தேர்ந்தெடுத்தேன்!'' என்றான்.
''நான் மயிலின் ஆட்சியை வெறுக் கிறேன்!'' என்று கூறியது நல்ல பாம்பு.
''அதைப் பற்றி எனக்கு அக்கறை இல்லை. எல்லா விலங்குகளும் சம்மதித்து விட்டன. நீயும் சம்மதிப்பதைத் தவிர வேறு வழியில்லை!'' என்றான் சந்திரன்.
பாம்பு பதிலேதும் சொல்லவில்லை. இந்த நேரத்தில் சிறுத்தையும், புலியும் வெளியே சென்றிருந்தன. மயில் ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.
இத்தகவல்கள் பாம்பின் மூலம் சிறுத்தைக்கும், புலிக்கும் அறிவிக்கப் பட்ட போது, அவை இரண்டும் கொதித்து எழுந்தன.
''மயிலுக்கு என்ன உடல் வலு இருக்கிறது. ஆபத்தில் உள்ளவர்களை அதனால் காப்பாற்ற முடியுமா?'' என்று கேட்டன.
''முடியாது!'' என்ற பாம்பு, இது சந்திரன் ஆணை என்பதால் கட்டுப்பட வேண்டி இருக்கிறது என்று கூறியது.
சிறுத்தையும், புலியும் யோசித்தன.
என்றாவது ஒருநாள் மயில் காட்டு ராஜா என்ற தலைமைப் பதவியிலிருந்து நீக்கப்பட்டால் அதன் முதல் எதிரிகளாக நாம்தான் இருக்க வேண்டும் என்று நிச்சயம் செய்து கொண்டன.
அத்துடன் அவை கலைந்து சென்றன.
புதிய பதவி பெற்ற மயில் மிகவும் கர்வப்பட்டது. அதிகாரங்கள் பலவற்றைச் செய்தது. தனக்கென்று நிறையப் பணியாளர்களை அமர்த்திக் கொண்டது. அதற்காக ஓர் உயர்ந்த ஆசனம் செய்யப் பட்டது. அந்த ஆசனத்தில் தலைப்பகுதி யில் பூரணச் சந்திரன் உருவம் பொறிக்கப் பட்டிருந்தது. அந்த ஆசனத்தில் அமர்ந்த அது தன் அரசுரிமையை நிலைநாட்டிக் கொண்டிருந்தது.
மயிலிடம் தொடர்ந்து பல பிரச்னைகள் வந்து கொண்டிருந்ததாலும், அது சிறந்த நீதிபதி என்று பலர் பாராட்டியதாலும், அது பெரும் கர்வம் கொண்டது.
ஒரு சமயம், தன்னைப் பார்க்க வந்திருந்த நிலவிடம், ''நான் திருமணம் செய்து கொள்ள நிச்சயித்திருக்கிறேன். உனக்கு ஒரு மகள் இருப்பதாக அறிகிறேன். எனக்கு நீ பெண் தருவாயா?' என்று கேட்டது.
சந்திரன் அழகான ஒரு பெண் மயிலை வளர்த்துக் கொண்டிருந்தான். அதற்கு அவன் மாப்பிள்ளை தேடிக் கொண்டிருந் தான். அது விஷயமாகக் கேட்கவே, அவன் அங்கு வந்திருக்கிறான்.
அதற்குச் சிரமமே இல்லாமல் மயிலே பெண் கேட்டவுடன் சந்திரன் தன் மகளுக்கும், அந்த மயிலுக்கும் திருமணம் செய்து வைத்தான். திருமணத்தில் விருந்துகள் பரிமாறப்பட்டன.
வந்தவர்கள் மயிலின் அழகைப் புகழ்ந்து பேசினர். இதனால் மயிலின் கர்வம் தலைக்கேறியது. நான் வானத்துக் கடவுளான சந்திரனின் மகளையே திருமணம் செய்து கொண்டதால், இனி தானும் ஒரு கடவுள்தான் என்று நினைத்துக் கொண்டது மயில்.
அந்த எண்ணத்தை உடனடியாகச் செயலாக்கியது மயில்.
''நான் கடவுளின் மருமகனாகி விட்டதால், இனி நீங்கள் அனைவரும் என்னைக் கடவுளாகத் தான் கருத வேண்டும் தவிர சாதாரண விலங்காகவோ, காட்டுராஜா என்றோ கருதக்கூடாது. இனி என்னைக் கடவுளே என்றுதான் அழைக்க வேண்டும்!'' என்று உத்தரவிட்டது.
மிருகங்கள் திகைத்துப் போயின... தன் எதிர்ப்பைக் காட்ட புஸ்ஸென்று சீறியது பாம்பு.
இதைக் கண்டு பொறுக்க முடியாத மயில் பாய்ந்து சென்று அந்தப் பாம்பைக் கவ்விக் குதறித்துண்டு துண்டுகளாக்கி அதை உண்டது.
''என்னை எதிர்ப்பவர்கள் எவராக இருந்தாலும் அவர்களுக்கு நேரிடும் கதி இதுதான்!'' என்று மயில் கோபமாகக் கூறியது.
விலங்குகள் நடுநடுங்கிப் போயின.
''இனி என் ஆகாரம் பாம்புகள்தான்! வேறு எதுவும் வேண்டாம்.'' என்று சப்புக் கொட்டியது மயில்.
இதை எல்லாம் கவனித்த சந்திரன், ''பதவி ஆணவம் உன் கண்களை மறைத்து விட்டது. அதனால் இவ்வளவு ஆட்டம் போட்டு விட்டாய். எல்லாருக்கும் மேலே கடவுள் இருக்கிறார். உனக்குப் பதவி தந்ததால் நான் கடவுள் அல்ல. நீ வீணாகக் கடவுளின் கோபத்துக்கு ஆளாகி விட்டாய்!'' என்று கூறும் போதே விண்ணிலிருந்து அந்தச் சத்தம் கேட்டது.
''கடவுள் என்று அகந்தை கொண்டு நான் படைத்த இன்னொரு உயிரினமான பாம்பையே கொன்று தின்ன மயிலே! இன்று முதல் உனக்கு அழிவு ஆரம்பமாகி விட்டது. எந்த நாவு இவ்வாறு ஆணவமாகப் பேசியதோ, எந்த நாவு பாம்பின் இறைச்சியை ஆகாரமாக உட் கொண்டதோ அந்த நாவு படைத்த வாயிலிருந்து வரும் சத்தம் இனி தேன் போன்ற இனிமையை யாருக்கும் தராது. கர்ண கொடூரமான, கேட்கச் சகிக்காத சத்தமாக மாறிப் போகட்டும். நீ இனியும் கொடிய பாம்புகளையே தின்று, நீயும் விஷமாகிப் போவாயாக!''
உடனே மயில் தன் இனிமையான பேச்சை இழந்தது. கேட்க முடியாத படு மோசமாக அதன் குரல் வளமை ஆனது.
''எந்த அழகால் நீ கர்வப்பட்டாயோ அந்த அழகுக்காவே மனிதர்கள் உன்னை வேட்டையாடுவர். இன்று முதல் காட்டு ராஜா என்ற பதவியிலிருந்து நீ நீக்கப்பட்டாய். உனக்குப் பதிலாகச் சிங்கம் அந்தப் பதவியை ஏற்கட்டும்!'' என்றார்.
உடனே சந்திரனால் சூட்டப்பட்ட கிரீடம் மறைந்து போனது. தலைவர் பதவியை இழந்த மயில் அழுதது.
இதைப் பார்த்துக் கொண்டிருந்த சிறுத்தையும், புலியும் அதன்மேல் பாய்ந்து, கிழித்துக் கொன்று தின்றன.
பதவி ஆசை வந்தால் கர்வம் கூடாது. அப்படி இருந்தால் மயிலின் நிலைமைத்தான்.
***
