PUBLISHED ON : நவ 09, 2012

இதுவரை: ஹைட்ரா என்ற பொல்லாத பாம்பை கொல்லப் போராடினான் ஹெர்குலிஸ். இனி-
அந்த பாம்பின் ஒவ்வொரு தலையிலும் கதையால் ஓங்கி அடித்துக் கொண்டிருந்தான். அதன் தலை நசுங்கிக் கூழானது. உடனே, அந்த இடத்தில் இரண்டு தலைகள் தோன்றின. அவற்றையும் அவன் கதையால் நசுக்கினான்.
இப்படியே நீண்ட நேரம் அவன் போராடிக் கொண்டிருந்தான்.
'அந்தப் பாம்பை அம்புகளாலும், கதையாலும் கொல்ல முடியாது. வேறு வழியில்தான் முயற்சி செய்ய வேண்டும்' என்று நினைத்தான் ஹெர்குலிஸ். மடுவை விட்டு வெளியே வந்தான்.
அங்கிருந்த ஒரு மரத்தின் நிழலில் அயோலசுவுடன் ஓய்வு எடுத்தான். எப்படி அந்தப் பாம்பைக் கொல்வது என்று சிந்தித்தபடியே இருந்தான்.
நல்ல வழி ஒன்று அவனுக்குத் தோன்றியது.
அருகிலிருந்த காய்ந்து போன பெரிய மரம் ஒன்றை வெட்டி வீழ்த்தினான்.
''அயோலசு! இதன் கிளைகளை வெட்டித் தனித்தனியே வை,'' என்று அங்கிருந்து புறப்பட்டான் ஹெர்குலிஸ்.
அருகிலிருந்த ஊரை அடைந்தான். அங்கிருந்த கருமான் ஒருவனைச் சந்தித்தான்.
கருமானிடம், ''நீண்ட இரும்புக் கம்பி ஒன்று செய்ய வேண்டும். அதன் முனைப்பகுதி தட்டையாகவும், பெரியதாகவும் இருக்க வேண்டும்,'' என்றான்.
ஹெர்குலிஸ் சொன்னது போலவே, கருமானும் செய்து தந்தான். அந்தக் கம்பியை எடுத்துக் கொண்டு, அயோலசுவிடம் வந்தான் ஹெர்குலிஸ்.
அங்கே குவிக்கப்பட்டு இருந்த காய்ந்த விறகுகளில் தீ மூட்டினான். தீ நன்றாக எரிந்தது. அதில், இரும்புக் கம்பியின் முனைப் பகுதியை வைத்தான். தட்டையான அந்தப் பகுதி பழுக்கக் காய்ந்தது.
என்ன செய்ய வேண்டும் என்பதை அயோலசுவிடம் விளக்கமாகச் சொன்னான்.
கையில் வாளுடன் முன்னால் சென்றான் ஹெர்குலிஸ். பழுக்கக் காய்ந்த இரும்புக் கம்பியைத் தூக்கியபடி பின் தொடர்ந்தான் அயோலசு.
அந்த மடுவிற்குள் குதித்தான் ஹெர்குலிஸ்.
இரண்டாவது நாளாக அவனுக்கும், பாம்புக்கும் கடுமையான போர் நடந்தது. கவனமாகவும், வேகமாகவும் செயல் பட்டான். தன் வாளால் பாம்பின் ஒரு தலையை வெட்டி வீழ்த்தினான்.
இதற்காகவே, கரையில் தயாராக நின்று கொண்டிருந்தான் அயோலசு. தலை வெட்டுப்பட்ட பாம்பின் கழுத்தில் இரும்புக் கம்பியை வைத்தான். அதன் தட்டையான பகுதி பாம்பின் கழுத்து முழுவதையும் பொசுக்கியது. அதனால் அங்கே புதிய தலை முளைக்கவில்லை.
இப்படியே பாம்பின் எட்டுத் தலைகளையும் வெட்டி வீழ்த்தினான். புதிய தலை முளைக்காதபடி சூடு வைத்துக் கொண்டிருந்தான் அயோலசு.
ஹெர்குலிசுக்கும், பாம்பிற்கும் இப்படியே நீண்ட நேரம் போர் நடந்தது. சாவில்லாத அதன் ஒன்பதாவது தலையை வெட்டி மடுவில் வீழ்த்தினான். அந்த தலை மேலே எழாதவாறு பெரிய பாறை ஒன்றை அதன் மேல் வைத்தான்.
தலை ஏதும் இல்லாத அந்தப் பாம்பின் உடலை வெட்டி எறிந்தான். பிறகு அதன் கொடிய நஞ்சைத் தன் அம்புகளின் முனையில் தேய்த்துக் கொண்டான் ஹெர்குலிஸ்.
கொடிய ஹைட்ரா நாகம் கொல்லப்பட்டதை நாட்டு மக்கள் அறிந்தனர். மாவீரன் ஹெர்குலிஸைப் புகழ்ந்து பேசினர்.
அரசன் யுரிஸ்தியசுவைச் சந்தித்த ஹெர்குலிஸ், ''நீ சொன்னது போல ஹைட்ரா பாம்பைக் கொன்று விட்டேன். அடுத்து நான் செய்ய வேண்டியது என்ன?'' என்று கேட்டான்.
'இரண்டாவது சோதனையிலும் இவன் வெற்றி பெற்று விட்டானே. வேறு என்ன கடினமான சோதனை வைப்பது' என்று சிந்தித்தான் யுரிஸ்தியசு.
வஞ்சகனான அவனுக்கு யாராலும் செய்ய முடியாத கடினமான வேலை ஒன்று தோன்றியது.
இனிய குரலில் அவன், ''ஹெர்குலிஸ்! ஆர்கேடிய நாட்டு மலை அடிவாரத்தில் கலைமான் ஒன்று உள்ளது. அதன் கொம்புகள் பொன்னால் ஆனவை. அதன் குளம்புகள் பித்தளையால் ஆனவை. அதன் உடல் இரவிலும் ஒளி வீசும்; பகலிலும் ஒளி வீசும். அழகு என்றால் அவ்வளவு அழகு அந்த மான். அதன் அழகில் மயங்காதவர் யாரும் இல்லை. நீ அதைப் பிடித்து வர வேண்டும். இதுதான் நீ செய்ய வேண்டிய மூன்றாவது வேலை,'' என்றான்.
கலைமானைப் பிடிப்பது எளிய வேலை என்று நினைத்தான் ஹெர்குலிஸ்.
ஆர்கேடிய நாட்டை அடைந்த அவன் அங்கே இருந்தவர்களிடம் கலைமானைப் பற்றி விசாரித்தான்.
''அந்தக் கலைமானைப் பிடிப்பது யாராலும் இயலாத செயல். எத்தனை நாட்கள் ஓடினாலும் அது களைப்பே அடையாது. அதற்குப் பித்தளை குளம்புகள் உள்ளதால், எந்த மலையிலும் எளிதாக ஏறும். கடலாலும் அதைத் தடுக்க முடியாது. கடலுக்குள் பாய்ந்து வேகமாக நீந்தும். அது மட்டுமல்ல. வேட்டைத் தேவதையான ஆர்ட்டிமிசு அந்த மானைத் தன் உயிர் போல நேசிக்கிறாள். யாராவது அதற்குத் துன்பம் தந்தால் போதும், தேவதையின் கோபத்திற்கு ஆளாகி அழிய நேரிடும்,'' என்றனர்.
இதைக் கேட்டு ஹெர்குலிஸ் சிறிதும் அஞ்சவில்லை.
''இப்போது சென்றால் அந்த மானை எங்கே பார்க்கலாம்? அதைச் சொல்லுங்கள்,'' என்று கேட்டான்.
''காட்டின் நடுவே மலை அடிவாரம் உள்ளது. அங்கே ஆர்ட்டிமிசின் கோயில் உள்ளது. அந்த மான் கோயிலைச் சுற்றித்தான் எங்காவது மேய்ந்து கொண்டிருக்கும்,'' என்றனர்.
அங்கிருந்து புறப்பட்ட அவன் அடர்ந்த காட்டிற்குள் நீண்ட தொலைவு நடந்தான். ஆர்ட்டிமிசு கோயிலை அடைந்தான்.
மானைப் பிடிக்க வேண்டும் என்பதே அவன் எண்ணமாக இருந்தது. இரவு, பகல் பாராது அங்கேயே சுற்றி வந்து கொண்டிருந்தான்.
¬டிகாலை நேரம். சிறிது தொலைவில் வெளிச்சம் ஒன்று வருவது தெரிந்தது. உற்று பார்த்த போதுதான் அந்தக்கலைமான் வருகிறது என்பதை அறிந்து கொண்டான்.
அதைப் பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அங்கேயே ஒளிந்துக் கொண்டான்.
அருகில் வந்த கலைமான் அவனைப் பார்த்து விட்டது. அவ்வளவுதான். காற்றை விட வேகமாக ஓடத் தொடங்கியது.
ஹெர்குலிசும் அதைத் துரத்தத் தொடங்கினான். தன் பார்வையிலிருந்து அது மறையாத வண்ணம் அதற்கு இணையாக ஓடிக் கொண்டிருந்தான்.
இரண்டு நாட்களாக அந்தக் காட்டைச் சுற்றி சுற்றி வந்தது மான். தன்னைத் துரத்தி வருகிறானா, என்று அடிக்கடி திரும்பிப் பார்த்தபடி ஓடியது.
காட்டைச் சுற்றி வந்து அவனை ஏமாற்ற முடியாது என்பதை உணர்ந்தது. மலையின் மேல் வேகமாக ஏறத் தொடங்கியது. ஹெர்குலிசும் அதைப் பின் தொடர்ந்து மலையில் ஏறினான்.
மலைப் பாதைகளில் தாவித் தாவி மின்னலென ஓடியது. வாய்ப்பு கிடைத்த போது மரம், செடி, புதர்களுக்கு இடையேயும் தாவி ஓடியது.
ஹெர்குலிசும் கையில் வில்லுடன் அதைத் துரத்தியபடியே இருந்தான். இருவரின் ஓட்டமும் நிற்கவில்லை. நாட்கள், வாரங்களாக, மாதங்களாக ஆயின.
மலை, காடுகளை விட்டுக் கடற்கரையை அடைந்தது அது... இனி அதைப் பிடித்து விடலாம் என்று நினைத்தான் ஹெர்குலிஸ்.
ஆனால், அதுவோ கடலில் குதித்தது. வேகமாக நீந்தத் தொடங்கியது. அதைத் தப்பவிடக் கூடாது என்று நினைத்த அவனும் கடலில் குதித்தான். வேகமாக நீந்திக் கொண்டே அதைப் பின் தொடர்ந்தான்.
ஒரு கடலைத் தாண்டியதும், இன்னொரு கடலுக்குள் நீந்தத் தொடங்கியது. அவனும் அதை விடவில்லை. இருவரும் இப்படியே பல கடல்களைக் கடந்தனர். உலகத்தையே சுற்றி முடித்தனர்.
மீண்டும் ஆர்கேடிய காட்டுப் பகுதிக்கே அவர்கள் வந்தனர்.
ஹெர்குலிசின் பார்வையில் படும் தொலைவில்தான் எப்போதும் மான் இருந்தது. இருந்தும், அவனால் அதைப் பிடிக்க முடியவில்லை. இப்படியே ஓராண்டிற்கும் மேல் காலம் சென்றது.
சலிப்பு அடைந்தான் ஹெர்குலிஸ். இனியும் கால தாமதம் செய்யக் கூடாது என்ற முடிவுக்கு வந்தான்.
- தொடரும்.
