தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/எனக்கே சொந்தம்!

எனக்கே சொந்தம்!

எனக்கே சொந்தம்!


PUBLISHED ON : நவ 09, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 09, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

முன்னொரு காலத்தில், காட்டில் கொடிய புலி ஒன்று வாழ்ந்து வந்தது. கண்ணில் பட்ட விலங்குகளை எல்லாம் கொன்று தின்றது.

ஒருசமயம் குரங்குக்குட்டி ஒன்று அதனிடம் சிக்கிக் கொண்டது. சிறிதும் இரக்கம் காட்டாமல், அந்தக் குட்டியைத் தின்றது புலி.

மரத்தின் மேலிருந்த குரங்கு ஒன்று இந்தக் கொடுமையைப் பார்த்தது. கீழே குதித்த அது, கோபத்துடன் புலியை முறைத்துப் பார்த்தது. அதன் கோபத்தை புலி பொருட்படுத்தவில்லை.

''ஏ! குரங்கே! இந்தக் காட்டில் எதையும் கொன்று தின்ன எனக்கு உரிமை உண்டு. என் எதிரே வர சிறுத்தைகளும், கரடிகளும் அஞ்சும். என் வயிறு நிரம்பி உள்ளதால், நீ பிழைத்தாய். இங்கிருந்து ஓடிவிடு,'' என்று மிரட்டியது.

கோபம் அடங்காத குரங்கு, அந்தப் புலியின் மீது பாய்ந்து, அதன் முதுகை கடித்து விட்டு, ஓட்டம் பிடித்தது.

''குரங்கே! என்னையே கடித்துவிட்டாயா? எங்கே சென்றாலும் உன்னைக் கொல்லாமல் விடமாட்டேன்,'' என்ற புலி அதைத் துரத்தத் தொடங்கியது.

வேகமாக ஓடிய குரங்கு, ஆற்றங் கரையை அடைந்தது. அங்கிருந்த கூடை ஒன்றை எடுத்துக் கையில் வைத்துக் கொண்டு, மீன் பிடிப்பது போல நடித்தது.

கோபத்துடன் புலி அங்கு வந்தது.

''குரங்கே! என்னைக் கடித்து விட்டா ஓடி வந்தாய்? உன்னை இப்பொழுதே கொன்று தின்கிறேன்,'' என்று உறுமியது.

அந்தப் புலியை இப்பொழுதுதான் பார்ப்பது போல நடித்தது குரங்கு.

''புலியாரே! நீங்கள் என்ன சொல்கிறீர்கள் எனக்கு ஒன்றும் விளங்கவில்லையே... இந்தக் காட்டைப் பற்றி உங்களுக்குத் தெரியாதா? இங்கே பல வகையான குரங்குகள் உள்ளன. சில குரங்குகள் புலியைக் கடித்து விட்டு ஓடும்; சில குரங்குகள் மீன் பிடிக்கும்; நான் மீன் பிடிக்கும் வகையைச் சேர்ந்த குரங்கு. இந்த ஆற்றில் ஏராளமான மீன்கள் உள்ளன. அவை கூட்டமாக வந்து இந்தக் கூடையில் விழும். அதற்காகக் காத்திருக் கிறேன்,'' என்றது குரங்கு.

மீன்களைப் பிடித்துத் தானே உண்ண வேண்டும் என்று நினைத்தது புலி.

''குரங்கே! இந்தக் காடே எனக்குச் சொந்தம். எல்லா மீன்களும் எனக்கே உரியன. மரியாதையாகக் கூடையை என்னிடம் தந்துவிட்டு ஓடிவிடு,'' என்று கோபத்துடன் உறுமியது.

புலி ஏமாந்துவிட்டது என்பதை அறிந்த குரங்கு, கூடையை அதனிடம் தந்துவிட்டு, ஓட்டம் பிடித்தது.

அந்தக் கூடையை ஆற்று நீரில் பிடித்தபடி நின்றது புலி. நிறைய மீன்கள் கூடைக்குள் விழும் என்று காத்திருந்தது.

நீண்ட நேரம் ஆயிற்று. ஒரு மீனும் கூடைக்குள் விழவில்லை. புலிக்கு உண்மை புரிந்தது.

'என்னைக் கடித்த அதே குரங்குதான் இது. இங்கும் மீன் பிடிப்பதாக நடித்து என்னை ஏமாற்றி உள்ளது. என் கையில் சிக்காமல் எங்கே ஓடிவிடும்' என்று, கோபத்துடன் குரங்கைத் தேடி அலைந்தது.

அந்தக் குரங்கு ஒரு மரத்தில் அமர்ந்து பழங்களைத் தின்று கொண்டிருந்தது. புலி அதைப் பார்த்தது.

''குரங்கே! முதலில் என்னைக் கடித்தாய். பிறகு மீன் பிடிப்பதாக நடித்து ஏமாற்றினாய். இனி என்னிடமிருந்து உன்னால் தப்பிக்க முடியாது,'' என்று கோபத்துடன் உறுமியது.

''காட்டு அரசே! நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? உங்களை நான் இதற்கு முன் பார்த்ததே இல்லையே. என்னை நன்றாகப் பாருங்கள். உங்களை ஏமாற்றிய குரங்கு நானா?

''இங்கே உள்ள குரங்குகளைப் பற்றி உங்களுக்குத் தெரியாதா? சில குரங்குகள் புலியைக் கடிக்கும்; சில குரங்குகள் ஆற்றில் மீன் பிடிக்கும்; சில குரங்குகள் மரத்தில் உள்ள பழங்களை உண்ணும்; நான் பழங்களை உண்ணும் குரங்கு. எங்களுக்கு வேறு எதுவும் தெரியாது!'' என்றது.

தன் கையிலிருந்த பழத்தைப் சுவைத்து உண்பது போல நடித்தது.

குரங்கைத் தேடி அலைந்ததால், மிகுந்த பசியுடன் இருந்தது புலி. குரங்கு பழத்தைச் சுவைப்பதைப் பார்த்ததும், அதன் நாவிலும் எச்சில் ஊறியது.

இதைப் பார்த்த குரங்கு தப்பிக்க வாய்ப்பு கிடைத்தது என்று மகிழ்ந்தது. பழுத்த பழங்கள் இரண்டைப் புலியிடம் எறிந்தது.

சுவையான அந்தப் பழங்களைத் தின்றது புலி. மரத்தில் உள்ள எல்லாப் பழங் களையும் தானே தின்ன வேண்டும் என்று நினைத்தது.

''ஏ! குரங்கே! காட்டில் உள்ள மரங்கள், பழங்கள் அனைத்தும் எனக்கே சொந்தம். இங்கிருந்து ஓடிவிடு. இல்லையேல் உன்னைக் கொன்று விடுவேன்!'' என்று மிரட்டியது.

'மரத்தில் இருந்த பழங்களை எல்லாம் தின்று விட்டேன். காய்கள்தான் உள்ளன. அவை பழுக்கப் பல நாட்கள் ஆகும். புலியை ஏமாற்ற என்ன செய்வது' என்று சிந்தித்தது குரங்கு.

பணிவாக அது<, ''அரசே! உங்கள் கட்டளையை மீறுவேனா? இப்பொழுதே இங்கிருந்து சென்றுவிடுகிறேன். இந்த மரத்தின் பழங்களுக்கு விந்தையான இயல்பு உள்ளது. பழுத்தவுடன் அவை பொன்னிறமாகி விடும். உடனே அந்தப் பழங்களைச் சாப்பிட வேண்டும். இல்லையேல், பழங்கள் மறைந்து விடும். அதனால்தான் நான் பழங் களையே பார்த்துக் கொண்டிருக்கிறேன். சிறிது ஏமாந்தாலும் ஒரு பழமும் உங்களுக்குக் கிடைக்காது,'' என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றது.

அந்த மரத்தின் அடியில் அமர்ந்தது புலி. மரத்திலிருந்த காய்களையே கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தது.

நீண்ட நேரம் ஆயிற்று. ஒரு காயும் பழுக்கவில்லை. பசியால் துடித்த அது ஒரு காயைப் பறித்துக் கடித்தது. கசப்புத் தாங்க முடியாமல் அதைப் துப்பியது.

''அந்தக் குரங்கு மூன்றாவது முறையாக என்னை ஏமாற்றிவிட்டது. எங்கே இருந்தாலும் அதைக் கண்டுபிடித்துக் கொன்று போடுவேன்,'' என்று உறுமியபடியே அலைந்தது புலி.

தன்னைத் தேடிப் புலி வருவதைப் பார்த்தது குரங்கு. பெரிய குளவிக் கூடு இருந்த மரத்தில் ஏறி அமர்ந்தது.

அங்கு வந்த புலி கோபத்துடன் குரங்கைப் பார்த்தது.

-1 தொடரும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us