தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/ஹெர்குலிஸ்!

ஹெர்குலிஸ்!

ஹெர்குலிஸ்!


PUBLISHED ON : அக் 12, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 12, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

முன்னொரு காலத்தில் ஆர்கேசு நாட்டு இளவரசனாக அம்பிட்ரியன் என்பவன் இருந்தான். அவனுக்கும், தேபசு நாட்டு இளவரசி அலக்மேனா வுக்கும் திருமணம் நடந்தது. அவர்கள் இருவரும் இனிமையாக இல்லறம் நடத்தி வந்தனர். கடவுளர்களின் தலைவனான ஜீயஸ், அலக்மேனாவிடம் அன்பு கொண்டார். அவர் அருளால் அவளுக்கு ஹெர்குலிஸ் என்ற மகன் பிறந்தான். அலக்மேனாவின் கனவில், தேவன் ஜீயஸ் தோன்றினார்.

''என் அருளால் பிறந்தவன் ஹெர்குலிஸ். வலிமையும், பேராற்றலும் நிறைந்தவனாக விளங்குவான். அவன் வீரத்தால் மனித குலமே உயர்வு அடையப் போகிறது. பூவுலகில் அவன் பேரும், புகழும் பெறப் போகிறான். தேவர்களும் வணங்குமாறு ஒலிம்பிய மலையில் தெய்வமாக வீற்றிருக்கப் போகிறான்,'' என்று சொல்லி மறைந்தார்.

இதை அறிந்தாள் ஜீயஸின் மனைவி ஹீரா. 'பூவுலகில் பிறந்த ஒருவன் தேவர்களைப் போலப் பேரும், புகழும் பெறுவதா? ஒலிம்பிய மலையில் தேவனாக வீற்றிருப்பதா?' என்று கோபம் கொண்டாள். 'பேரும், புகழும் அடையவிடாமல் ஹெர்குலிஸைத் தடுப்பேன். என் சோதனைகளிலிருந்து அவனால் வெற்றி பெற முடியுமா? அதையும் பார்த்து விடுவோம்' என்று நினைத்தாள்.

ஹெர்குலிஸ் பத்து மாதக் குழந்தையாக இருந்தான். அப்போதே அவன் வலிமையும், துடிப்பும் நிறைந்தவனாக விளங்கினான்.

ஒருநாள் இரவு வழக்கம் போல ஹெர்குலிசும், இபிக்ளசும் தொட்டிலில் தூங்கிக் கொண்டு இருந்தனர். தாய் அலக்மேனா கணவனுடன் இன்னொரு அறையில் தூங்கிக் கொண்டு இருந்தாள். குழந்தையாக இருக்கும் போதே ஹெர்குலிஸைக் கொன்று விடவேண்டும். பெரியவனானால் கொல்வது கடினம் என்று நினைத்தாள் ஹீரா.

கொடிய நஞ்சுள்ள பாம்புகள் இரண்டை அழைத்தாள்.

''ஹெர்குலிஸைக் கொன்று விட்டு வாருங்கள்,'' என்று கட்டளையிட்டாள்.

அந்தப் பாம்புகள் இரண்டும் ஹெர்குலிஸின் தொட்டில் அருகே வந்தன. அப்போது அவன் நன்கு தூங்கிக் கொண்டிருந்தான்.

ஹெர்குலிஸைப் பார்த்த அவை அவனைக் கொத்துவதற்காகப் படம் எடுத்தன. அவற்றின் மூச்சுக் காற்று புயல் காற்றை விட சீற்றமாக இருந்தன.

அருகில் ஏதோ ஓசையைக் கேட்ட இபிக்ளசு கண் விழித்தான். கொடிய பாம்புகளைப் பார்த்த அவன் நடுங்கினான். அப்படியே தொட்டிலிலிருந்து விழுந்தான்.

அருகே எழுந்த ஓசைகளால், ஹெர்குலிஸின் தூக்கம் கலைந்தது. கண் விழித்துப் பார்த்தான். படம் எடுத்துக் கொண்டிருந்த பாம்புகள் இரண்டும் அவன் கண்ணில் பட்டன. அந்தப் பாம்புகள் அவனுக்கு விளையாட்டுப் பொருள்களாகத் தோன்றின. அவற்றுடன் விளையாட நினைத்தான்.

தன் இரண்டு கைகளையும் நீட்டினான். அந்த இரண்டு பாம்புகளின் கழுத்தையும் பிடித்துக் கொண்டான்.

அவனின் பிடியிலிருந்து விடுபட அந்தப் பாம்புகள் போராடின. தங்கள் வால்களை நெளித்து அவனை வளைக்க முயன்றன. அவற்றால் முடியவில்லை.

நேரம் ஆக, ஆக அவன் பிடி இறுகிக் கொண்டே வந்தது. வேதனை தாங்க முடியாமல் அந்தப் பாம்புகள் துடித்தன. தங்கள் வால்களால் தரையில் அடித்தபடி பெருமூச்சு விட்டன.

இந்தப் பேரோசையைக் கேட்டு அலக்மேனாவும், அம்பிட்ரியனும் விழித்துக் கொண்டனர்.

'குழந்தைகள் படுத்திருக்கும் அறையிலிருந்து இப்படி ஓசை கேட்கிறதே. அவர்களுக்கு என்ன நேர்ந்ததோ தெரிய வில்லை' என்று அவர்கள் இருவரும் கலங்கினர். அலறியபடியே அந்த அறையை நோக்கி ஓடி வந்தனர்.

இரண்டு பெரிய பாம்புகள் ஹெர்குலிஸைச் சூழ்ந்து இருப்பதைப் பார்த்து, ஹெர்குலிஸை அவை கடிப்பதாக நினைத்தனர்.

'பாம்புகளின் அருகே சென்றால் நம்மையும் கொன்று விடுமே... குழந்தைகளைக் காப்பாற்ற வழி தெரிய வில்லையே' என்று தயங்கிய படியே நின்றனர்.

''ஐயோ! மகனே! உன்னைக் காப்பாற்ற வழி இல்லையே,'' என்று இருவரும் அலறினர்.

குழந்தை ஹெர்குலிஸின் பிடி இறுகிக் கொண்டே வந்தது. பாம்புகளின் துடிப்பு முழுமையாக அடங்கியது.

தன் பிடியைத் தளர்த்தியது குழந்தை. உயிர் இல்லாத இரண்டு பாம்புகளும் கீழே விழுந்தன.

குழந்தைக்கு எந்த ஆபத்தும் இல்லை என்பதை அறிந்தாள் அலக்மேனா. ஓடி வந்து அவனைத் தூக்கிக் கொண்டாள். குழந்தை ஹெர்குலிஸ் கொடிய பாம்பு களைக் கொன்ற செய்தி நகரம் எங்கும் பரவியது.

'குழந்தையாக இருக்கும் போதே இவன் இரண்டு பாம்புகளைக் கொன்று விட்டானே. பெரியவனானால் என்னென்ன வீரச் செயல்கள் செய்வானோ?' என்று எல்லாரும் ஹெர்குலிஸைப் புகழ்ந்து பேசத் தொடங்கினர்.

தான் அனுப்பிய பாம்புகள் கொல்லப்பட்டதை அறிந்தாள் ஹீரா.

கோபத்தால் துடித்த அவள், ''ஹெர்குலிசே! நான் யார் என்பதை உனக்குக் காட்டுகிறேன். உன்னை ஒழிக்காமல் ஓய மாட்டேன்,'' என்றாள்.

'அடுத்து என்ன செய்வது? எப்படி ஹெர்குலிஸைக் கொல்வது' என்று சிந்தித்தபடி இருந்தாள்.

ஆண்டுகள் பல ஓடின-

கிரேக்க நாட்டின் சிறந்த ஆசிரியர்கள் பலர் ஹெர்குலிசுக்கு கல்வி கற்றுத் தந்தனர். வீரக் கலைகளைத் தெரிந்து கொள்வதில் அவன் மிகுந்த ஆர்வம் காட்டினான். வாள் போர், குத்துச் சண்டை, ஈட்டி எறிதல், வில் வித்தை, குதிரை ஏற்றம் போன்றவற்றில் வல்லவன் ஆனான்.

அவனுக்கு இணையாகப் போர் செய்பவர்கள் யாரும் இல்லை என்ற நிலை ஏற்பட்டது.

வீரமும், துணிவும் கொண்ட இளைஞனாக இருந்தான் அவன். அச்சம் என்பதை அவன் அறியவே இல்லை. வீர தீர சாகச செயல்களில் நாட்டம் உடையவனாக விளங்கினான்.

ஒருநாள் அவன் மலைப் பாதை ஒன்றின் வழியாகச் சென்று கொண்டிருந்தான். நீண்ட பயணத்தால் களைப்பு அடைந்த அவன் ஒரு மரத்தின் நிழலில் படுத்தான். அப்படியே தூங்கி விட்டான்.

தூக்கத்தில் கனவு ஒன்று கண்டான்.

அந்த கனவில் ஹெர்குலிஸ் ஓரிடத்தில் நின்று கொண்டிருந்தான். அவன் எதிரே இரண்டு பாதைகள் பிரிந்து சென்றன.

அதில், ஒரு பாதை பார்க்க மிக அழகாக இருந்தது. அதன் இரண்டு பக்கங்களிலும் நிழல் தரும் மரங்கள் இருந்தன. அவற்றில் வண்ண வண்ண மலர்கள் பூத்துக்குலுங்கின. அழகிய கலைமான்கள் கூட்டம் கூட்டமாகத் தாவித் தாவி ஓடின.

வழி எங்கும் குயில்கள் இனிமையாக கூவின. மயில்கள் ஆடின. அந்தப் பாதை ஒரு பெரிய நகரத்திற்குச் சென்றது. அங்கே எல்லாச் செல்வ வளங்களும் கொட்டிக் கிடந்தன.

வானளாவிய மாட மாளிகைகள் எங்கும் நிறைந்து இருந்தன. அங்கே எல்லாரும் ஆடிக்கொண்டும், பாடிக் கொண்டும் மகிழ்ச்சியாக இருந்தனர்.

இன்னொரு பாதையைப் பார்த்தான் அவன்.

அந்தப் பாதை கரடு முரடான பாதையாக இருந்தது. அது மலை உச்சியை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. வழியில் இளைப்பாற மரங்கள் ஏதும் இல்லை. ஆங்காங்கே ஆபத்தான குழிகளும், பள்ளங்களும் இருந்தன. வழி எங்கும் பெரிய பெரிய மலைப் பாம்புகள் ஊர்ந்து கொண்டிருந்தன.

சிங்கத்தின் கர்ஜனையும், புலிகளின் உறுமலும் ஆங்காங்கே கேட்டுக் கொண்டிருந்தன.

எந்தப் பாதை வழியாகச் செல்வது என்ற குழப்பத்தில் இருந்தான்.

அப்போது அவனை நோக்கி இரண்டு பெண்கள் வந்தனர்.

-1 தொடரும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us