PUBLISHED ON : ஆக 07, 2021

திருச்சி, பொன்மலை, ரயில்வே பள்ளியில், 1962ல், 9ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அப்போதைய பாடத்திட்டப்படி, ஹிந்தி அல்லது சமஸ்கிருதம் மூன்றாவது மொழியாக படிக்க வேண்டும்.
என் தந்தை, 'சமஸ்கிருதம் எடுத்துக்கோ...' என்றார். நண்பர்கள் எல்லாரும் ஹிந்தி எடுத்திருந்தனர்; என்னையும் அதிலேயே சேர கூறியதால் மறுக்க முடியவில்லை.
சமஸ்கிருதம் கற்பிக்கும் ஆசிரியர், ஒரு நாள், வகுப்பறைக்கு வந்தார்; ஆதங்கம் பொங்க வகுப்பாசிரியரிடம், 'இங்கு யாருமே சமஸ்கிருத பாடத்தில் சேரவில்லை; எனக்கு வேலை போகாதிருக்க, யாரையாவது சேர சொல்லுங்கள்...' என்றார்.
வகுப்பாசிரியர் வைத்தியநாதன் தனித்தனியாக விசாரித்தார்; எல்லாரும், 'அப்பா ஹிந்தி தான் படிக்க கூறியிருக்கிறார்...' என்று சொல்லி, தப்பி விட்டனர். என் முறை வந்தபோது, 'ஹிந்தி பாடத்தில் சேர சொல்லியிருக்கிறார் அப்பா...' என பொய் சொன்னேன்.
உடனே, 'நானே உங்காத்துக்கு வந்து பேசுகிறேன்; நீ சமஸ்கிருதம் படி...' என்றாரே பார்க்கலாம். எனக்கு பயத்தில் ஜுரம் வந்து விட்டது; நான், ஹிந்தியில் சேர்ந்திருந்தது தெரிந்தால் பெல்ட்டால் விளாசி விடுவார் அப்பா. எனவே, சமாளிக்கும் வகையில், 'நானே, அப்பாவிடம் சொல்லிக் கொள்கிறேன்...' என கூறி, சமஸ்கிருத பாடத்துக்கு மாறினேன்.
பின் அடிக்கடி, 'டேய்... உன்னால் தான், சமஸ்கிருத வாத்தியாருக்கு சம்பளம் கிடைக்கிறது...' என்பார் வகுப்பாசிரியர். படித்து முடித்ததும் மத்திய அரசில் வேலை கிடைத்தது; எனவே, ஹிந்தியும் படிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
என் வயது, 73; வகுப்பறையில் அன்று நடந்த சம்பவம், நகைச்சுவையாக என் மனதில் பதிந்துள்ளது. அதை எண்ணும் போதெல்லாம் சிரித்து விடுகிறேன்.
- கி.முத்துகிருஷ்ணன், சென்னை.
தொடர்புக்கு: 96001 99478

