
குமார், படிப்பில் சுமார் ரகம். ஒவ்வொரு மாதமும் மதிப்பெண் சான்றிதழில், கையெழுத்து வாங்க, மிகவும் பதற்றத்துடன் அப்பாவிடம் செல்வான். மதிப்பெண்களை பார்த்ததும் வசைப்பாட ஆரம்பித்துவிடுவார் அப்பா ரவி.
'உதவாக்கரை... உருப்படாதவனே... நீ எதற்கும் லாயிக்கில்லை. அக்கம் பக்கத்தில் பையன்கள் எப்படி படிக்கின்றனர்; அறிவு இருக்கிறதா உனக்கு...' என்று ஆவேசம் கொள்வார்.
இதுமாதிரி பேச்சு அவன் தாத்தாவிற்கு பிடிக்காது. மகன் ரவிக்கு பாடம் கற்பிக்க எண்ணி, 'உலகில் உருப்படாத எதற்கும் லாயிக்கில்லாத பொருள் என்று எண்ணுவதை ஒரு கூடை நிறைய கொண்டு வா பார்க்கலாம்...' என்றார் தாத்தா.
'இதோ வருகிறேன்...' என்ற ரவி, மரத்தடியில் குவித்து வைக்கப்பட்டிருந்த சருகுகளை, கூடையில் நிரப்பி கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு வந்தவன், 'எதற்காக, இதை எடுக்கிறாய்... நான் தான், இவற்றை குவியலாக்கி வைத்தேன்; சாம்பலாக்கி, என் நிலத்திற்கு உரமாக போட உள்ளேன்; அதனால், பயிர்கள் செழிப்பாக வளரும்...' என்றான்.
வேறொரு மரத்தின் சருகுகளை அள்ள சென்றார் ரவி; சில பெண்கள் அந்த மரத்தின் சருகுகளை பொறுக்கி கொண்டிருந்தனர். அவர்களிடம், 'எதற்காக, பயனற்ற சருகுகளை பொறுக்குறீங்க...' என்று கேட்டார் ரவி.
'இவற்றை சேர்த்து, தைத்து விற்பனை செய்வேன்; மருத்துவ குணம் கொண்டவை...' என்று பதிலளித்தாள் ஒரு பெண்.
ஏமாற்றத்துடன் வயல்வெளியில் நடந்தார் ரவி.
குளத்தில் சருகுகள் மிதந்தன. அவற்றை எடுக்க எண்ணினார் ரவி. அவற்றில் எறும்புகள் தொற்றி, நம்பிக்கையுடன் போராடி கொண்டிருந்தன. அதை பார்த்து வியந்தார் ரவி.
வெறுங்கையுடன் வீடு திரும்பியவரிடம், 'இப்ப புரிகிறதா... உலகத்தில் உதவாத பொருள் எதுவுமில்லை. சருகுகள் கூட, எப்படியெல்லாம் பயன்படுகிறது பார்த்தாயா... இனி, உன் மகனை, உதவாக்கரை என்று திட்டாதே; அவனிடம் உள்ள திறமையை கண்டுப்பிடி; அதில் மேன்மை அடைய செய்...' என்று, புத்தி கூறி ஆசிர்வதித்தார் தந்தை.
செல்லங்களே... சொற்களை பயனுள்ளவையாக பேச வேண்டும்; அதுவே வாழ்க்கையை வெற்றிகரமாக மாற்ற அடித்தளமிடும்.
இந்திராணி தங்கவேல்