
அன்புள்ள அம்மா...
என் வயது; 18; இளங்கலை ரசாயனம் படித்து, சுகாதார ஆய்வாளராக விரும்பும் மாணவன்.
நாம் வீசி எறியும் குப்பையில், எத்தனை வகை உள்ளன. அவற்றை எப்படி, 'டிஸ்போஸ்' செய்யலாம். குப்பை பற்றிய கூடுதல் தகவல்கள் இருந்தால் அறிய விரும்புகிறேன். விரிவாகச் சொல்லுங்கள்.
இப்படிக்கு,
அ.பழனி.
அன்பு மகனே...
பயன்பாட்டுக்கு பின், விட்டெறியும், விரும்பாத, விலை மதிப்பற்ற பொருளே குப்பை எனப்படுகிறது.
இதை...
* திரவ கழிவு
* திடக்கழிவு
* உரக்குழி
* ஆபத்தான கழிவு
* மருத்துவ கழிவு
* மறுசுழற்சி கழிவு
* பழைய கட்டட கழிவு
* பசுமை கழிவு என வகைப்படுத்தலாம்.
இதில் பசுமை கழிவை, செடிகளுக்கு இயற்கை உரமாய் பயன்படுத்தலாம்.
ஒரு நாளைக்கு, ஒரு மனிதன், முக்கால் கிலோ குப்பையை வீசுகிறான். உலகிலேயே அதிகமாக குப்பையை உருவாக்குவது, வட அமெரிக்க நாடான கனடா. சேரும் குப்பையை சிறப்பாக நிர்வகிப்பது, ஐரோப்பிய நாடான ஜெர்மனி; சேரும் குப்பையில், 56.1 சதவீதத்தை மறு சுழற்சி செய்கிறது.
ஐரோப்பிய நாடான ஸ்வீடன், பூஜ்யம் குப்பை நிர்வாக கொள்கையை சிறப்பாக கடைபிடிக்கிறது.
பழைய துணியிலிருந்து, 'லுாப்' என்ற முறையில், புது துணி தயாரிக்கிறது இந்த நாடு. 46 சதவீத வீட்டு உபயோக குப்பையையும், 84 சதவீதம் பாட்டில், டப்பா போன்ற குப்பையையும் மறுசுழற்சி செய்கிறது, ஸ்வீடன். உணவு குப்பையிலிருந்து, 'பயோகேஸ்' எரிபொருள் தயாரிக்கின்றனர்.
பல வண்ணங்களில் தொட்டிகள் வைத்து, இந்தியாவில் குப்பை முறையாக ரகம் பிரித்து சேகரிக்கப்படுகிறது.
அதன் விபரம்...
* பச்சை தொட்டி - அழுகும் குப்பை
* நீலம் - அழுகா குப்பை
* மஞ்சள் - பேப்பர் கண்ணாடி பாட்டில்கள்
* சிவப்பு - மறு சுழற்சி செய்ய முடியாத குப்பை
* வெள்ளை - மென்மையான பிளாஸ்டிக்.
இங்கு குறிப்பிட்டுள்ள நிற அடிப்படையில், வீடுகளில் உருவாகும் குப்பையை பிரித்து வழங்க வேண்டும்.
பிளாஸ்டிக்கில் தயாரிக்கப்படும் பை மட்க, 20 ஆண்டுகள் வரை எடுக்கும். பிளாஸ்டிக் பாட்டில் மட்க, 450 ஆண்டுகள் வரை ஆகும்.
குப்பையை முழுமையாக அப்புறப்படுத்த சிலவற்றை கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.
அவை...
* தேவையற்ற பொருட்களை வாங்காதிருத்தல்
* பொருள் உபயோகத்தை குறைத்தல்
* மறு சுழற்சி செய்யும் பொருட்களை உபயோகித்தல் போன்றவையாகும்.
இது போல, ஒவ்வொரு குடும்பமும் சபதம் ஏற்றால், குப்பை குவிவது குறையும். குப்பை பற்றி அறியும் உன் ஆர்வம், உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும். சிறப்பாக படித்து, நல்லதொரு சுகாதார அதிகாரியாக திகழ வாழ்த்துகிறேன்.
- அன்புடன், பிளாரன்ஸ்.