PUBLISHED ON : அக் 31, 2020

வனத்தில் உயரமாக வளர்ந்திருந்தது ஒரு மரம்; அதன் கிளையில் கூடு கட்டி முட்டையிட்டிருந்தது அழகிய பறவை. கவனமாக அடைகாத்து வந்தது.
அந்த மரத்தின் அருகே பாம்பும், கழுகும் வசித்து வந்தன; மிகவும் வலிமையான அவை, பறவையின் முட்டைகளை விழுங்க திட்டமிட்டிருந்தன.
அதற்கான தருணத்துக்காக காத்திருந்தன. அந்த திட்டத்தை முறியடித்து தப்ப சுறுசுறுப்புடன் செயல்பட்டு வந்தது பறவை. கண் துாங்காமல் கவனமுடன் இருந்தது. சிரமங்களை பொறுத்துக் கொண்டு முட்டையைக் காத்தது.
இமைப்பொழுதும் விலகாமல் அடைகாத்து வந்தது. எதற்கும் அஞ்சவில்லை அந்த பறவை.
அன்று பொழுது புலர்ந்தது.
புதிய குஞ்சுகள் எழுப்பிய சத்தம் கேட்டது. முட்டையிலிருந்து வெளிவந்த குஞ்சுகளைக் கண்டதும் மகிழ்ச்சியில் பாடி ஆடியது பறவை. அதன் குரல் காடு முழுவதும் எதிரொலித்தது.
கெட்ட எண்ணத்துடன் காத்திருந்த பாம்பும், கழுகும் ஏமாற்றத்துடன் அகன்றன.
அதைக் கண்டதும், இரை தேடி வானில் சிறகுகளை விரித்தது பறவை.
அதன் பொறுமையும், சுறுசுறுப்பும் குஞ்சுகளை பாதுகாத்து, தாய்மை பண்பை நிரூபித்தது.
நுால்களை படித்தோ, உரைகளைக் கேட்டோ அந்த பறவை செயல்படவில்லை; ஆனால், சுய உணர்வுடன், இயற்கை காட்டிய வழியில் செயல்பட்டு வெற்றியை நுகர்ந்தது.
தளிர்களே... சுயமாக சிந்தித்து சுறுசுறுப்பாக செயல்பட்டு வாழ்வில் முன்னேறுங்கள்.
த.அருண் குமார்
