PUBLISHED ON : அக் 31, 2020

முகக்கவசத்தின் கதை!
கொரோனா வைரஸ் என்ற தீநுண்மி தொற்று பாதிப்பால், 'பேஸ்மாஸ்க்' என்ற முகக்கவசம் அணிந்து நடமாடும் நிலை ஏற்பட்டுள்ளது. கட்டாயமாக அணிய, நம் அரசும் உத்தரவிட்டுள்ளது.
முக கவசத்தால் மூக்கு, வாய், அதையொட்டிய சில பகுதிகளை மட்டும் மறைக்கலாம். தலையின் முழு பகுதியையும் மறைக்கும் கவசங்களும் உள்ளன.
காக்கும் கவசங்கள் பற்றிய சுவாரசியங்கள்:
ஐரோப்பாவில் பிளேக் நோய் பரவியபோது அணியப்பட்ட முகக்கவசம், பறவை தலைப்பகுதியைப்போல இருந்தது. தலை முழுவதையும் மூடும் வகையில் செய்யப்பட்டது. இதில், 15 செ.மீ., நீண்ட மூக்கு வடிவமும், கண் திறப்பு பகுதிக்கு கண்ணாடி போன்ற, இரு வட்ட திறப்பும் உண்டு.
மூக்குப்பகுதியில் வாசனைத்திரவியங்கள் வைக்கப்பட்டிருக்கும். இந்த வாசனையால் கிருமி தொற்றாது என்ற நம்பிக்கை அப்போது நிலவியது.
விசித்திரமான இந்த கவசத்தை, பின்னர், வண்ணமயமான விழாக்களில் அணியும் வழக்கம் ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டது. ஐரோப்பிய நாடான ஜெர்மனி, பெர்லின் பொம்மை வரலாற்று அருங்காட்சியகத்தில் இந்த கவசங்களின் மாதிரி பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
மாஸ்க் பேஷன்
ஐரோப்பிய நாடுகளில், 19ம் நுாற்றாண்டில் வண்ணத் துணியால் முகத்தை மறைப்பது, பேஷனாக இருந்தது. பாக்டீரியா, வைரஸ் மூலம் நோய் பரவலை அறிந்த பின், பாதுகாப்பு கருதி அணியப்பட்டது.
உலகின் பல பகுதிகளிலும், 1878ல் காலரா என்ற கொடிய நோய் பரவியது. இதன் பரவலைத் தடுக்க, பருத்தி நுாலிழையில் உருவாக்கப்பட்ட முகக்கவசம் அணிய, அமெரிக்க மருத்துவர்கள் பரிந்துரைத்தனர்.
* ஐரோப்பிய நாடான இங்கிலாந்தின் ஆடை வடிவமைப்பாளர் அலெக்சாண்டர் மகுவீன். இவர், 2010ல் முகக்கவசம் அணியும் வண்ணமயமான விழாவை, லண்டனில் நடத்தினார். இதில், விதம் விதமாக முகக்கவசம் அணிந்து பலரும் அசத்தினர். உலகம் முழுவதும் பலத்த வரவேற்பை பெற்ற நிகழ்வு இது
* மருத்துவதுறையில் அறுவை சிகிச்சை துவங்கியபோது, மருத்துவர்கள், முகக்கவசம் அணியும் வழக்கம் இல்லை. அமெரிக்கா, சிக்காகோ நகரில் அறுவை சிகிச்சையின்போது தான், முகக்கவசம் அணியும் வழக்கம் வந்தது.
* முதன்முதலில் டாக்டர் ஆலீஸ் ஹாமில்டன், 1905ல் இந்த நடைமுறையைக் கொண்டுவந்தார். அதனால் ஏற்படும் நன்மைகள் பற்றி எடுத்துரைத்தார்.
* அறுவை சிகிச்சையின் போது, நோய் பரவும் வாய்ப்பு இருப்பதை சுட்டிக்காட்டி, முகக்கவசம் அணிவதை பரிந்துரைத்தார். பின்னர்தான், 'சர்ஜிகல் மாஸ்க்' என்ற முகக்கவசம் அணிவது மருத்துவத்துறையில் கட்டாயமானது
* மோசமான காற்று நுரையீரலில் புகுந்து விடாமல் இருக்க, முகக்கவசம் அணியும் வழக்கமும் ஐரோப்பாவில் தான் துவங்கியது
* இரண்டாம் உலகப்போரின் போது, ஐரோப்பிய நாடான, இங்கிலாந்து, லண்டன் நகரில் காற்று கடுமையாக மாசு அடைந்தது. இதையடுத்து, மாசு தடுப்புக்காக முகக்கவசம் பயன்படுத்தினர் மக்கள்.
இப்போது, கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க உலகம் முழுவதும் முகக்கவசம் அணியும் வழக்கம் நடைமுறைக்கு வந்துள்ளது. பல நாடுகளில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தளிர்களே... தவறாமல் முகக்கவசம் அணிய பழகுங்கள்.
சாதனை குதிரை!
ஒலிம்பிக் விளையாட்டில், குதிரையில் நீளம் தாண்டும் போட்டி நடத்தப்பட்டு வந்தது. குதிரை வீரர்கள் திறமையை வெளிப்படுத்த வாய்ப்பாக அமைந்திருந்தது.
ஐரோப்பிய நாடான பிரான்ஸ், பாரீஸ் நகரில், 1990ல் நடந்த கோடைகால ஒலிம்பிக் போட்டியில், 6.1 மீட்டர் நீளத்தை தாண்டி, தங்க பதக்கம் வென்றது ஒரு குதிரை.
அதை ஓட்டிய வீரர் கான்ஸ்டாண்ட் வான். ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தை சேர்ந்தவர். இந்த சாதனை இதுவரை முறியடிக்கப்படவே இல்லை.
ஆண்களுக்கான நீளம் தாண்டும் போட்டியில், 8.95 மீட்டர் துாரம் தாண்டியதே சாதனையாக உள்ளது.
அமெரிக்க தடகள வீரர் மைக் பாவல், ஆசிய நாடான ஜப்பான், டோக்கியோ நகரில், 1991ல் நடந்த போட்டியில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
குதிரை தாண்டியதை விட, மூன்று மீட்டர் அதிக துாரம் தாண்டி சாதித்துள்ளான் மனிதன்.
குழந்தைகளே... இது போன்ற சாதனைகள் நிகழ்த்த பயிற்சியும், முயற்சியும் செய்யுங்கள்.
- என்றென்றும் அன்புடன், அங்குராசு.
