PUBLISHED ON : ஏப் 02, 2022

ராமநாதபுரம், செய்யது அம்மாள் மேல்நிலைப் பள்ளியில், 1981ல், 11ம் வகுப்பு படித்த போது, நடந்த சம்பவம்...
வகுப்பில் சிறப்பாக படிப்பவர்களில் நானும் ஒருவன்; கொஞ்சம் சேட்டைகள் செய்வேன். அன்று காய்ச்சல் இருப்பதாக பொய் கூறி, விடுப்பு விண்ணப்பம் கொடுத்து, அலைகள் ஓய்வதில்லை என்ற திரைப்படம் பார்க்க சென்றேன்; தோழர்கள் சிலரும் உடன் வந்தனர்.
வகுப்பில் கணக்குப் பதிவியல் பாடம் நடத்தியுள்ளார் ஆசிரியர் நாகராஜன்; மிகவும் கண்டிப்பானவர். திரையரங்கிற்கு சென்றதை கண்டறிந்து, 'நாளை வகுப்புக்கு வரட்டும்; முதுகுத் தோலை உரித்து விடுகிறேன்...' என, சக ஆசிரியரிடம் கோபமாக கூறியுள்ளார். இதை அறிந்து பயம் கொண்டேன்.
மறு நாள், வகுப்பு திறனாய்வுக்கு வந்திருந்தார், கல்வி அதிகாரி. கணக்குப் பதிவியல் பாடத்தில், அனுப்பீடு என்ற கணக்கை கரும்பலகையில் செய்து காட்ட கேட்டார்.
யாரும் முன் வரவில்லை. அந்த கணக்கை எளிதாக போட்டு காட்டினேன். வெகுவாக பாராட்டினார் அதிகாரி.
அவர் சென்றதும் என்னை கட்டியணைத்து, 'கேள்விக்கு முறையாக பதில் தராமல், என் வேலைக்கு உலை வைத்து விடுவீர்களோ என பயந்திருந்தேன். கணக்கை முறைப்படி செய்து, என்னை காப்பாற்றி விட்டாய். இனி, பொய் கூறி விடுப்பு எடுக்க கூடாது; படித்து முன்னேறும் வழியை பார்...' என்று நெகிழ்ந்தார்.
என் வயது, 56; அந்த சம்பவத்தை எண்ணும் போதெல்லாம் பதிய நம்பிக்கை பிறக்கிறது!
- என்.ராஜா, ராமநாதபுரம்.
தொடர்புக்கு: 96009 51968
