PUBLISHED ON : ஜன 22, 2016

இமயமலை அடிவாரத்தில் பெரிய காடு ஒன்று இருந்தது. அங்கே ஏராளமான குரங்குகள் வாழ்ந்து வந்தன. அறிவும், அனுபவமும் நிறைந்த குரங்கு ஒன்று அவற்றிற்குத் தலைவனாக இருந்தது.
சில ஆண்டுகளாக அங்கே மழை பெய்யவில்லை. கடுமையான வறட்சியால் தண்ணீர்ப் பஞ்சம் ஏற்பட்டது. குரங்குகளுக்குக் குடிக்கவும் தண்ணீர் கிடைக்கவில்லை. தாகத்தால் வாடின.
இதைப் பார்த்து வருந்திய தலைவன் குரங்கு, எல்லாக் குரங்குகளையும் அழைத்தது.
''நண்பர்களே! நாம் உணவையும், தண்ணீரையும் தேடிப் புதிய இடங்களுக்குச் சென்றாக வேண்டும். அங்கே பேய் வாழும் பொய்கைகள் இருக்க வாய்ப்பு உண்டு. அதற்குள் இறங்கி னால் நாம் பேய்களுக்கு இரையாக வேண்டியதுதான்.
''அங்கே நச்சு மரங்கள் இருக்கலாம். அதன் பழங்களைத் தின்றால், உடனே சாக வேண்டியதுதான். அதனால், நாம் கவனமாக இருக்க வேண்டும்.
''இதற்கு முன் பார்த்திராத மரத்தின் பழங்களை யாரும் தின்னாதீர்கள். புதிய பொய்கையில் தண்ணீர் குடிக்க இறங்காதீர்கள். நான் வந்து ஆராய்ந்து என்ன செய்யலாம் என்று சொல்கிறேன். அது வரை பொறுமையாக இருங்கள்,'' என்றது.
''அப்படியே செய்கிறோம்,'' என்று எல்லாக் குரங்குகளும் சொல்லின. அதன் பிறகு அவை தண்ணீரைத் தேடி வெவ்வேறு திசைகளில் சென்றன.
வடக்கில் சென்ற குரங்குகள் பெரிய பொய்கை ஒன்றைப் பார்த்தன. என்றும் வற்றாதது போல அந்தப் பொய்கை காட்சி தந்தது. அதைச் சூழ்ந்து உயரமாக வளர்ந்த மரங்களும், நாணல் புதர்களும் இருந்தன.
இந்தச் செய்தியை அறிந்த எல்லாக் குரங்குகளும் அங்கு வந்தன.
தண்ணீர் குடிக்காமல், தலைவனுக்காகக் காத்திருந்தன.
சிறிது நேரத்தில் தலைவன் குரங்கு அங்கு வந்தது. அந்தப் பொய்கையைச் சுற்றி வந்து கூர்மையாகக் கவனித்தது.
''நண்பர்களே! நீங்கள் கவனமாக இருந்த தால் உயிர் பிழைத்தீர்கள். இந்தப் பொய்கை யில் தண்ணீர்ப் பேய் ஒன்று உள்ளது. யார் தண்ணீர் குடிக்க இறங்கினாலும் அவர்களைக் கொன்று தின்று விடுகிறது.
''அதனால்தான் பொய்கையை நோக்கிச் சென்ற காலடித் தடங்கள் தெரிகின்றன. திரும்பி வந்த காலடித் தடங்கள் ஏதும் தெரியவில்லை. பேயிடம் நாம் சிக்கக் கூடாது. ஆனால், தண்ணீர் குடிக்க வேண்டும். அதற்கு ஏதேனும் வழி உள்ளதா என்று பார்ப்போம்,'' என்றது.
பொய்கையில் இருந்த தண்ணீர்ப் பேய், 'குரங்குகள் தண்ணீர் குடிக்க பொய்கையில் இறங்கும். எல்லாவற்றையும் கொன்று தின்ன லாம்' என்று ஆர்வத்துடன் காத்திருந்தது.
நீண்ட நேரமாகியும் எந்தக் குரங்கும் இறங்காததால், அது பொறுமை இழந்தது. பேரோசை எழுப்பியபடி தண்ணீருக்கு மேலே வந்தது.
''ஏ குரங்குகளே! தண்ணீரைக் குடிக்காமல் ஏன் கரையிலேயே நிற்கிறீர்கள்?'' என்று கேட்டது பேய்.
''நீ இந்தப் பொய்கையில் வாழும் பேய் தானே. தண்ணீர் குடிக்க வரும் எல்லாரையும் கொன்று தின்கிறாய் அல்லவா?'' என்று கேட்டது தலைவன் குரங்கு.
''நீ உண்மையைக் கண்டுபிடித்து விட்டாய். அதனால் என்ன? நீங்கள் எப்படியும் சாகத்தான் போகிறீர்கள். தண்ணீரில் இறங்கினால் நான் கொன்று தின்பேன். கரையிலே இருந்தால் தாகத்தால் துடிதுடித்துச் சாவீர்கள். இதைத் தவிர வேறு பொய்கை எங்குமே இல்லை. எப்படிச் சாகப் போகிறீர்கள் என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்,'' என்று கூறி உரத்த குரலில் சிரித்தது பேய்.
அதன் திமிரான பேச்சை கேட்டு குரங்குத் தலைவன் கோபம் கொண்டது.
''தண்ணீர்ப் பேயே! உன் வலிமை தண்ணீருக்குள் தான். பொய்கைக்குள் இறங்கி னால் யானையையும் நீ கொன்று தின்பாய். கரைக்கு வந்தால், உன்னால் ஒரு புழுவைகூட இழுக்க முடியாது.
''இந்தப் பொய்கைத் தண்ணீரை நாங்கள் குடிக்கத்தான் போகிறோம். உன்னால் எங்களை ஒன்றும் செய்ய முடியாது,'' என்றது.
அறிவு நிறைந்த தலைவன் குரங்கு மற்ற குரங்குகளிடம் தன் திட்டத்தைச் சொன்னது. அது சொன்னது போலவே எல்லாக் குரங்கு களும் செயல்பட்டன.
பொய்கைத் தண்ணீரை வயிறு முட்டக் குடித்தன. அந்தப் பேயால் ஒரு குரங்கையும் கொன்று தின்ன முடியவில்லை.
அப்படியானால் குரங்குகள் எப்படித் தண்ணீரைக் குடித்திருக்கும்?
பொய்கையைச் சுற்றி வளர்ந்திருந்த நாணல் தண்டுகளைக் குரங்குகள் பிடுங் கின. உள்ளே இருந்த அடைப்புகளை நீக்கின. ஒவ்வொரு நாணலும் நீண்ட குழாய் போல இருந்தது. மரத்தின் கிளையில் அமர்ந்த குரங்குகள் நாணலின் ஒரு முனையைப் பொய்கைத் தண்ணீருக்குள் அழுத்தின. இன்னொரு முனையில் வாய் வைத்து உறிஞ்சித் தண்ணீரைக் குடித்தன.
எப்படி சூப்பரா குட்டீஸ்!
