
தினேஷ், ஒரு போக்கிரி பையன். பள்ளி செல்லும் வழியில், நாய், பூனை, பறவை என, எதைக் கண்டாலும் கையில் வைத்திருக்கும் கவண் கல்லால் அடிப்பான். தெரு முனையில் அவனை பார்த்தால், நாய்கள் பின்னங்கால் பிடரியில் பட ஓடி விடும்.
பள்ளியில், சக மாணவர்களிடமும் முரட்டுத் தனமாக தான் பழகுவான்.
சொல்வதை செய்யவில்லை என்றால் தாக்கிவிடுவான். அவனை கண்டால் அனைவரும் ஒதுங்கி விடுவர்.
அவன் அப்பா, அந்த பகுதி எம்.எல்.ஏ., அவரது, அடாவடிகளுக்கு துணை செய்ய எந்த நேரமும், அடியாட்கள் இருப்பர். அதை பார்த்து வளர்ந்த தினேஷ், அதிகாரம் செய்வதையே வழக்கமாக வைத்திருந்தான்.
அன்று கணக்கு பாட வேளை. ஆசிரியர் தந்திருந்த வீட்டு பாட கணக்குகளை செய்திருக்கவில்லை. பக்கத்தில் அமர்ந்திருந்த மகேஷிடம், ''உன் கணக்கு நோட்டை கொடு... அதை பார்த்து எழுதிய பின் தருகிறேன்...'' என்றான் தினேஷ்.
''நானே சரியாக கணக்கை போடவில்லை...''
மறுத்தான் மகேஷ்.
''ஏன்டா... பொய் சொல்ற...''
மிரட்டியபடி, அவன் பையில் இருந்த கணக்கு நோட்டை பிடுங்கி காப்பி அடித்து எழுதினான் தினேஷ்.
மறுநாள் -
இருவரது கணக்கு நோட்டுகளையும் எடுத்து, ''யாரு, யாரைப் பார்த்து எழுதி இருக்கீங்க...'' என்றார் ஆசிரியர். பயத்தால் நடுங்கியபடி நின்றான் மகேஷ்.
உண்மையை யாராலும் கூற முடியவில்லை. கூறிவிட்டால் முரட்டுத்தனமாக அடிப்பான் தினேஷ்.
வகுப்பில் எல்லார் மனவோட்டமும் இப்படி தான் இருந்தது.
''யாரும் வாய் திறக்க வேண்டாம்... இருவரும் கரும்பலகையில் அந்த கணக்குகளை போட்டு காட்டுங்க...'' என்றார் ஆசிரியர்.
போட முடியாமல் திணறினான் தினேஷ்.
மறு பக்கம், சுலபமாக போட்டு காட்டினான் மகேஷ்.
கண்டித்தபடி, ''காப்பி அடிச்சதுக்கு பதிலா இந்த கணக்கை எப்படி போடுறதுன்னு அவனிடமே கத்திருக்கலாம்...'' என அறிவுரை சொன்னார் ஆசிரியர்.
அவரை முறைத்தபடி, ''நான்... எதுக்கு படிக்கணும்... எங்கப்பா, யாரு தெரியுமா...'' என்றான் தினேஷ்.
''உங்கப்பா... எம்.எல்.ஏ., அதனால், உனக்கு என்ன லாபம்; அடுத்த தேர்தல் வரும் வரை தான், இந்த போலி மரியாதை. வாழ்நாள் முழுதுக்கும், கற்ற கல்வியும், பழகிய பண்பாடும் தான் கூட வரும். கருத்துடன் கற்று, நற்பண்புகளுடன் முன்னேற பணிவும், பண்பும் அவசியம்; இவை இருந்தால் மரியாதை சேரும் என புரிந்து கொள்... பணிவுடன் வாழ பழகு...'' என்றார் ஆசிரியர்.
மன்னிப்பு கேட்டு, ''நீங்கள் கூறியபடி திருந்தி வாழ்கிறேன்...'' என்றான் தினேஷ்.
குழந்தைகளே... பணிவு குழந்தை பருவத்திலே கற்று கொள்ள வேண்டிய நல்ல பண்பு. ஒவ்வொரு சூழலிலும் அதை பயன்படுத்துங்கள்!
- பா.செண்பகவல்லி