தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/வேட்டைக்காரன்!

வேட்டைக்காரன்!

வேட்டைக்காரன்!


PUBLISHED ON : ஜூலை 18, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 18, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மிருகங்களை வேட்டை ஆடுவதில் பொழுதைக் கழிப்பான் குணா. ஒரு நாளைக்கு எத்தனை மிருகங்களைக் கொன்றோம் எனக் கணக்குப் பார்த்து, அதில் பூரிப்பு அடைவது குணாவின் வழக்கம்.

''இன்று ஆறுமான்கள், ஏழு முயல்களை கொன்றேன்!'' எனத் தன் நண்பன் முத்து விடம் பெருமையாகப் பேசினான்.

''பிற உயிர்களைப் பலி வாங்குவது உனக்குப் பெருமையாகத் தெரிகிறதா குணா? பாவமாகத் தெரியவில்லையா?'' என்றான் முத்து.

''நான் வேட்டை ஆடுவதைப் பெருமை யாக நினைக்கிறேன். ஒரே நாள் வேட்டையில் ஆறு மான்கள், ஏழு முயல்களை திறமைசாலிகளால் தான் சுட முடியும் என உனக்குத் தெரியாதா?

வேட்டை ஆடுபவன் மிருகங்களைக் கொல்வதை ஒரு கலையாகத் தான் நினைக்கிறான். ஜீவராசிகளைக் கொல்வது பாவம் என நினைத்தால், வேட்டையாட முடியுமா?'' எனக் கேட்டான் குணா.

''ஜீவராசிகளைக் கொல்வது உனக்குத் தவறாகத் தெரியவில்லையா?''

''பைத்தியக்காரன் மாதிரி பேசுகிறாயே! வேட்டை ஆடுபவன் ஜீவராசிகளிடம் கருணை காட்டினால் வேட்டை ஆட முடியுமா? நான் வேட்டையாடுவதினால் யாருக்கும் எந்த இழப்பும் ஏற்படுவது இல்லையே! அப்புறம் என்ன?''

''நீ சொல்வதுதான் சரி என வாதாடுவாய்! நீ என்றாவது புலி, சிங்கம் இவைகளைக் கொன்றிருக்கிறாயா? கொடிய மிருகங்களைக் கொன்றாலாவது உன் வேட்டை ஆடும் திறமையைப் பாராட்டலாம். மான்களையும், முயல்களையும் கொன்றுவிட்டு பெரிய வேட்டைக்காரன் போல ஏன் வீண் பெருமைப்பட்டுக் கொள்கிறாய்?'' எனக் கேட்டான் முத்து.

''நான் சிங்கத்தையோ, புலியையோ கொன்று ஒரு வாரத்திற்குள் காட்டாவிட்டால், என் பெயர் குணா இல்லை!''

''நீ சிங்கத்தையோ, புலியையோ ஒருவாரத்திற்குள் வேட்டை ஆடிக்காட்டு. உன்னைச் சிறந்த வேட்டைக்காரன்தான் என நான் ஒத்துக் கொள்கிறேன்,'' என்றான் முத்து.

பல நாட்கள் வேட்டைக்குப் போனான் குணா. அவன் கண்களில் சிங்கமோ, புலியோ சிக்கவில்லை. இப்படி ஐந்து நாட்கள் சென்று விட்டன.

ஆறாம் நாள் காட்டின் உட்பகுதிக்கு தன் ஜீப்பை எடுத்துக் கொண்டு வேட்டைக்குப் போனான் குணா. காட்டிற்குள் ஒரு இறந்து கிடந்த சிறுத்தைப் புலியைப் பார்த்தான். அவன் மூளை வேலை செய்ய ஆரம் பித்தது. அதைத் திடீர் எனத் தன் துப்பாக்கியால் சுட்டான். அதைத் தூக்கி தன் ஜீப்பிலே போட்டான்.

நேரே முத்துவின் வீட்டிற்குப் போனான்.

'முத்து! நான் சொன்னது போல புலியை வேட்டையாடிக் கொன்று உன்னிடம் காட்ட வேண்டும் என்றே வந்திருக்கிறேன். ஜீப்பில் இறந்த புலி இருக்கிறது. வந்து பார்!'' என்று அழைத்தான் குணா.

முத்துப் போய்ப் பார்த்தான். 'உண்மையிலே குணா வேட்டை ஆடுவதில் திறமைசாலிதான். சொன்னது போல் ஒரு வாரத்திற்கு புலியை வேட்டை ஆடி விட்டு வந்து விட்டானே...' என மனதிற்குள் பாராட்டிக் கொண்டான்.

புலியைப் குணா வேட்டையாடிக் கொண்டு வந்த செய்தி காட்டுத் தீ போல அவர்கள் ஊர் முழுவதும் பரவியது. புலியைப் பார்க்க முண்டியடித்துக் கொண்டு மக்கள் திரண்டு வந்தனர்.

புலியைக் கொன்ற குணாவைப் பலர் பாராட்டினர். பலர் கை கொடுத்தனர். சிலர் அவனுக்கு மாலை அணிவித்தனர்.

'இறந்த புலியை நீ கொன்றதாக ஏன் தற்பெருமைப்படுகிறாய்? இதை நீயா கொன்றாய்? பிறரை எத்தனை நாட்கள் எய்க்க முடியும்?' என மனச்சாட்சி குணாவை உறுத்தியது.

'நான் புலியைக் கொன்றதாக முத்துவிடம் மட்டும் தானே சொன்னேன். மற்றவர்கள் புலியை நானே கொன்றேன். என நினைத்து என்னைப் பாராட்டினால் அதற்கு நான் என்ன செய்ய முடியும்?' என குணா தன்னையே தேற்றிக் கொண்டான்.

நாட்கள் நகர்ந்தன-

குணா ஊரில் இரவில் புலி ஒன்று ஊருக்கு நுழைந்து மக்களுக்குத் தொடர்ந்து தொல்லை கொடுக்க ஆரம்பித்தது. ஊரார் கூடி புலியின் அட்டகாசத்தை ஒடுக்க முடிவு கட்டினர்.

ஊர்த் தலைவர், ''குணா புலியை வேட்டை ஆடுவதில் சிறந்தவன். அவனையே இந்தப் புலியை வேட்டையாடும்படிக் கேட்போம்,'' என ஊர்மக்களிடம் கூறினார். ஊர்மக்களும் புலியை வேட்டையாட குணாதான் சரியான ஆள் என்றனர்.

ஊர் மக்கள் சார்பில்<, ஊர் தலைவர் குணா விடம் போய் ஒரு புலியின் தொல்லை ஊரில் அதிகரித்து விட்டது. புலியைக் கொல்ல நீதான் சரியான ஆள் என ஊரார் எல்லாரும் உன்னை சிபாரிசு பண்ணுவதாக் கூறினார்.

வேறு வழியில்லாமல் குணா ஒத்துக் கொண்டான். ஊருக்குள் புகுந்த புலியை அவன் வேட்டை ஆடினால் குணாவுக்குப் பேரும், புகழும் கிடைக்கும் என முத்து அவனை உற்சாகப்படுத்தினான்.

இறந்து கிடந்த புலியை பெயர் எடுக்க வேண்டும் என்பதற்காக, தானே சுட்டதாகப் பொய் சொன்னது சிக்கலை ஏற்படுத்தும் எனத் தெரியாமல் போய்விட்டதே என வருந்தினான் குணா.

வேறு வழியில்லாமல் புலியைக் கொல்ல அவன் தயார் ஆனான். இரவு வந்தது. தூரத்தில் புலி வந்தது. அதைச் சுடத் தயாராய் இருந்தான். புலி அவனை நோக்கிப் பாய்ந்தது. அவன் புலியை நோக்கிச் சுட்டான். குறி தவறியது. பாய்ந்து வந்த புலி அவனைக் கடித்துக் குதறியது.

'பொய் சொன்னதால் இன்று <உயிரையே இழக்க நேரிட்டதே...' என வேதனையில் துடித்த குணாவின் உயிர் அவன் உடலை விட்டுப் பிரிந்தது.

எப்படியாவது புலியை குணா கொன்றிருப்பான் என்று எண்ணி ஊர் மக்கள் புலியைப் பார்க்க வந்தனர். புலி இறந்து கிடப்பதற்குப் பதிலாக, குணாவின் பிணம் பார்த்து ஊர்மக்கள் கண்கலங்கினர்.

குட்டீஸ்... சின்னப் பொய்தானே சொன்னோம். இதில் என்ன தப்பு என்று நினைக்காதீர்கள். அதுவே பெரிய சிக்கலை உண்டாக்கிவிடும்.

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us