PUBLISHED ON : செப் 14, 2018

கடந்த, 1993ல், ஏ.கே.டி.ஆர். நடுநிலைப் பள்ளியில் படித்த போது, ஆறாம் வகுப்பு வரை அனைத்து பாடங்களிலும், முதல் மதிப்பெண் பெற்றேன். ஏழாம் வகுப்பு சென்றவுடன் வீட்டில், தீப்பெட்டி ஒட்டும்படி கட்டாயப்படுத்தினர் பெற்றோர்.
தினமும், தீப்பெட்டி ஒட்டுவதால், பள்ளியில் கொடுக்கும் வீட்டுப் பாடங்களை செய்ய முடியாமல், வகுப்பு ஆசிரியரிடம், பிரம்படி வாங்கினேன். தீப்பெட்டி ஒட்டாமல் வீட்டுப் பாடம் எழுதினால், 'தீப்பெட்டி ஏன் ஒட்டவில்லை...' என்று, பெற்றோர் அடிப்பர். இரண்டில், எதை செய்வதென்று தெரியவில்லை; விடுமுறை நாட்களில், அதிகமாக ஒட்ட வேண்டும்.
ஏழாம் வகுப்பில், அனைத்துப் பாடங்களிலும், மதிப்பெண் குறைய ஆரம்பித்தது.
'ஆறாம் வகுப்பில், அதிக மதிப்பெண் எடுத்தாய்... ஏழாம் வகுப்பில் என்னாயிற்று... நீ படிக்கவே லாயக்கில்லை...' என்று திட்டினார் ஆசிரியர்.
மறுநாள், எனக்கு காய்ச்சல் வந்து விட்டது; விடுமுறை எடுத்தேன். ஆசிரியருக்கு கோபம் அதிகமாகி விட்டது. என் வீட்டிற்கு வந்து, 'இனி, அடிக்க மாட்டேன்... பள்ளிக்கு அனுப்புங்கள்' என்று பெற்றோரிடம் கேட்டார்.
நான், அடிக்கு பயந்து, 'தீப்பெட்டியே ஒட்டுறேன்; இனி பள்ளிக்கு போக மாட்டேன்...' என்று சொன்னேன். என் பெற்றோரும், 'சரி...' என்றனர். என் படிப்பு பாதியில் நின்றது; அன்று, நான் படித்திருந்தால், இன்று நல்ல நிலைமையில் இருந்திருப்பேன்.
பெற்றோரே... தயவுசெய்து, படிக்கும் குழந்தைகள் அவர்கள் படிப்பில் முழு அக்கறை காட்ட உதவுங்கள்!
- ப.ராம சுப்புலட்சுமி, விருதுநகர்.
