தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/வாழ நினைத்தால்!

வாழ நினைத்தால்!

வாழ நினைத்தால்!


PUBLISHED ON : அக் 16, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 16, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புத்தன்குளத்தில் ஒரு ஜோடி வாத்துகள் வசித்து வந்தன. அவற்றுக்கு, அழகன், வெள்ளையன், கழுத்தன், குட்டையன் என்று நான்கு வாத்து குஞ்சுகள்.

முதல் மூன்று குஞ்சுகளும் ஆரோக்கியமாய், பலம் வாய்ந்தவையாக விளங்கின; இளைய குஞ்சு நோஞ்சானாக காணப்பட்டது.

ஒரு நாள் -

குஞ்சுகளை அழைத்து, குளத்தில் மீன் வேட்டையாடச் சென்றன பெற்றோர் வாத்துகள். முதல் மூன்று குஞ்சுகளும், நன்றாக நீந்தின. தண்ணீருக்குள் தலையை முக்கி, வேகமாக நீந்தி, இறக்கைகளை அசைத்து சாகசங்கள் புரிந்தன. நிறைய மீன்களைப் பிடித்தன.

குட்டையன் வாத்தோ, ஏதும் செய்ய தெரியாமல் மணல் திட்டில் நின்று வேடிக்கைப் பார்த்தது. இயலாமையால், 'நான் நோஞ்சான், மக்கு... வாழ்வதற்கான வழி ஒன்றும் தெரியவில்லை...' என அழ ஆரம்பித்தது.

இதை கவனித்த பெற்றோர், 'நீ மக்கும் இல்லை... நோஞ்சானும் இல்லை; இன்னும் உனக்கு போதிய பலம் வரவில்லை. முயற்சி செய்தால், பலசாலியாய் மாறலாம். உனக்கு வேட்டையாடவும், நீந்தவும் பயிற்சி அளிக்கிறோம்; அழாதே செல்லம்...' என்று தேற்றின.

அன்று முதல், தினமும் பெற்றோருடன் பயிற்சி செய்தது குட்டையன். நீந்துவது அவ்வளவு சுலபமாயில்லை. கால்கள் வலித்தன. உடல் சோர்ந்து மூச்சு முட்டியது. இருந்தும் விடாமல் பயிற்சியில் ஈடுபட்டது; கூடவே, நத்தை, மீன்கள், புழுக்கள் என்று வேட்டையாடி தின்றது. இதனால், பலம் கூடியது.

சில நாட்களுக்கு பின் -

நன்றாக வளர்ந்து, 'பளபள' என மின்னியது குட்டையன். இறக்கைகள், பழுப்பும், வெள்ளையுமாய் அழகு சேர்த்தன.

அன்று குட்டையனுக்கு பிறந்த நாள்.

மீன்களை வேட்டையாட, குடும்பமே புறப்பட்டது.

குளத்திலிருந்த, ஒரு செந்தாமரை மலரைப் பறித்து, குட்டையன் வாத்தின் கழுத்தில் அணிவித்தது அம்மா வாத்து. பார்ப்பதற்கு வெகு அழகாய் இருந்தது.

மற்ற வாத்துகள் வேகமாக நீந்தின; பெரிய மீன்களைப் பிடித்தன. பிறந்த நாள் பரிசாக தம்பிக்கு கொடுத்து மகிழ்ச்சியைப் பகிர்ந்தன.

குட்டையன் வாத்தும் ஆழமான பகுதிகளுக்கு, பயமில்லாமல் சென்றது. பெரிய மீன்களைப் பிடித்து சகோதரர்களுக்கு தந்து மகிழ்ந்தது. நீரில் குட்டிக்கர்ணம் போட்டது; தாவித் தாவி குதித்தது.

'ஏய் குட்டையா... நீயா இப்படி நீந்துவது நம்ப முடியவில்லையே! எப்போது இந்த வித்தையைக் கற்றாய்...' என்று வியப்புடன் கேட்டன உடன்பிறந்த வாத்துகள்.

'நீங்கள் துாங்கிய போதும், ஓய்வெடுத்த போதும், விடா முயற்சியுடன் இதையெல்லாம் கற்றுக் கொண்டேன்! அம்மாவும், அப்பாவும் எனக்கு உதவி செய்தாங்க...' என்றது குட்டையன் வாத்து.

சகோதரனை அணைத்து முத்தமிட்டன, வாத்துகள்.

குழந்தைகளே... முயன்றால் முடியாதது ஒன்றுமில்லை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us