தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/இளஸ்... மனஸ்... (125)

இளஸ்... மனஸ்... (125)

இளஸ்... மனஸ்... (125)


PUBLISHED ON : ஆக 10, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 10, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்பு சகோதரி ஜெனிபருக்கு, நீண்ட நாள் சிறுவர்மலர் வாசகி எழுதுவது. என் மகனைக் குறித்த பாரத்தை, யாரிடம் கொட்டுவது என்று தெரியாமல், உங்களிடம் சொல்கிறேன். உங்களால், என்னை ஆறுதல் படுத்த முடியும் என நம்புகிறேன்.

என் மகன், பிளஸ் 2வில் நல்ல மதிப்பெண் பெற்று, தற்போது, மருத்துவம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறான். பிளஸ் 2 வரை, ஒழுக்கமாக, கல கலப்பாக, அன்பாக இருந்த மகன், போதை பழக்கத்துக்கு அடிமையாகி, கல்லுரிக்குச் செல்லாமல், அந்த மாதிரி நண்பர்களுடன் சுற்றித் திரிவதை, விடுதியில், இவனுடன் தங்கியுள்ள, மற்ற நண்பர்கள் மூலம் அறிந்து, துடியாய் துடித்துக் கொண்டிருக்கிறோம்.

எங்கள் பரம்பரையில், யாருக்கும் இல்லாத பழக்கம், இவனுக்கு எப்படி வந்தது என்று நினைக்கும் போது, என் இதயமே வெடித்துப் போகிறது சகோதரி. எது கேட்டாலும் எரிந்து விழுகிறான். 'என் வயது, 21; என்ன செய்வது என்று எனக்குத் தெரியும்... வாயை மூடுங்க...' என்கிறான்.

அதிகம் கேட்டால், 'நான் உயிரோடு இருப்பது உங்களுக்கு பிடிக்கலையா...' என்று முரடனை போல் பேசுகிறான். 'என் மகனா இது' என்று நினைத்து கதறிக் கொண்டிருக்கிறோம்; கல்லூரி பேராசிரியர்களுக்கும் தெரியும்.

இப்பழக்கத்தில் இருந்து விடுதலை தரும் இல்லத்தில் சேர்க்க விரும்புகிறோம். விடுதலை ஆகி வந்த பிறகும், அந்த பழக்கத்துக்கு அடிமையானால் என்ன செய்வது... மகன் மருத்துவராகி, மக்களுக்கு சேவை செய்வான் என்று பார்த்தால், அவனையே, 'அட்மிட்' பண்ணும் அளவுக்கு வந்து விட்டதை நினைத்து, அழாத நாளே இல்லை... என் மகனை காப்பாற்ற முடியுமா...

நான் என்ன செய்வது என்று சொல்லுங்க சகோதரி.

அன்பு சகோதரிக்கு வணக்கம்! உங்கள் கடிதம், என் இதயத்தை பிழிந்தது. நம்முடைய சொத்தே, நம் பிள்ளைகள் தான். அவர்கள் வாழ்க்கை இப்படி சின்னாபின்னமாகும் போது, அதன் வலி என்ன என்பது எனக்கு புரிகிறது சகோதரி.

உங்கள் எல்லாருக்கும் நான் திரும்ப திரும்ப சொல்கிறேன்... பிள்ளைகள் படிக்க போறாங்க, அவ்ளோதான் இனி நம்ம வேலைய பார்ப்போம்ன்னு நெனைக்காதீங்க... அவர்களுடைய பள்ளி, கல்லுாரி,போகும் பேருந்து, தங்கும் விடுதி, பழகும் நண்பர்கள், அவர்களது போன், எல்லாவற்றையும் நாம் கவனிக்க வேண்டும்.

இரண்டு ஆண்டுகளாக போதை பழக்கத்துக்கு அடிமையான பையனை கவனிக்காமல், இப்படியா அலட்சியமாக இருப்பீங்க... உங்க மேல எனக்கு ரொம்ப கோவம் வருது... 'எம்புள்ள உத்தமன், கொழந்த, ஒண்ணும் தெரியாது, நல்லா படிக்கிற புள்ள...' இப்படி, 'டயலாக்' விடும் பெற்றோர் அநேகர். இந்த, 'டயலாக்' எல்லாம் நாம் வாழும் கம்யூட்டர் யுகத்திற்கு செல்லாது. எல்லா கவர்ச்சிகளும் இளைஞர்களை இழுக்க காத்துகிட்டு இருக்கு... இதுல, உங்க புள்ள உத்தமனாகவே இருப்பான்னு நெனச்சு, அலட்சியமா இருந்ததால வந்த வினை இது.

இந்த காலத்து பசங்க, பொண்ணுங்க எல்லாருமே வீட்ல எலி மாதிரி, சாதுவாக இருக்காங்க... பள்ளிக்கு வந்தததும், சக நண்பர்களிடம் அவர்கள் நடந்துக் கொள்ளும் விதமே வேறு... சினிமா, நெட் என, எல்லா கண்றாவிகளையும் பார்த்து, சின்ன வயதிலேயே ரொம்ப வெவரமா இருக்காங்க... இவர்களை நாம கழுகு போல கவனித்து வந்தால் தான், நல்ல முறையில் கரை சேர்க்க முடியும்.

உங்கள் மகன் விஷயத்தில், நீங்கள் ஆரம்பத்திலேயே உஷாரா இருந்திருந்தா, முளையிலேயே கிள்ளி எறிந்திருக்கலாம். இப்போ மரமா வளர விட்டுட்டீங்க... கஷ்டப்பட்டு தான் மீட்டு எடுக்கணும்.

முதலில், அழுவதை நிறுத்துங்க... மறுவாழ்வு மையத்தில் சேர்த்து, அவர்கள் கொடுக்கும், 'ட்ரீட்மென்ட்' முடிந்து வெளியே வந்த பிறகு, திரும்பவும் அதே தவறை செய்தால், உடல் ஒத்துக் கொள்ளாது. அதிலேயே பயந்து விடுவர். அதன்பின், பிள்ளையின் கூடவே இருந்து கல்லுாரிக்கு சென்று வகுப்பு முடிந்ததும் அழைத்து வரணும். இதன்பின், உங்கள் மகனை தனிமையில் விடவே கூடாது. பழகும் நண்பர்கள் யார் என்பதை கவனம் வைத்து, அவர்களுடன் தனிமையில் பேசி, வகுப்பில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள்.

அவன் படித்து முடித்து, மருத்துவராகும் வரை, நீங்கள் கூடவே இருந்தால் தான், உங்கள் மகனை முழுமையாக மீட்டெடுக்க முடியும். ஒரு தாயால் முடியாதது ஒன்றும் இல்லை; அன்பு காட்டி, அரவணைத்து அவ்வப்போது மனநல மருத்துவர்களின் கவுன்சிலிங் சென்று வந்தால் சரியாகி விடுவான்.

இப்போதெல்லாம் பல்கலைக்கழகங்கள், கல்லுாரி நிர்வாகம், விடுதி பாதுகாவலர் எல்லாருக்கும் மாணவர்கள் போதை மருந்து பயன்படுத்துவதுத் தெரியும். ஆனாலும், இவர்கள் ஏன் இந்த மாதிரி போதை வஸ்துக்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பதில்லை என்பது, அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம். அவரவர் பிள்ளைகள் பாதிக்கப்படும் போது தான், அந்த வலி அவர்களுக்கு புரியும். மனிதன் எதை விதைக்கிறானோ அதை நிச்சயமாகவே அறுவடை செய்வான்!

- பாரத்துடன், ஜெனிபர் பிரேம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us