தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/இளஸ்... மனஸ்... (128)

இளஸ்... மனஸ்... (128)

இளஸ்... மனஸ்... (128)


PUBLISHED ON : ஆக 31, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 31, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

என் வயது, 15; பள்ளி மாணவன். சிறுவயதில் இருந்தே, சிறுவர்மலர் வாசகன். இப்பக்கத்தின் மூலம், பல நற்செய்திகளைப் பெற்று வருகிறேன். என் பிரச்னைக்கும் நல்ல பதில் சொல்வீர்கள் என நம்புகிறேன்.

நான், சுமாராகப் படிப்பேன். சிறுவயது முதலே, பேசும் போது, 'திக்கி... திக்கி...' பேசுவேன். மருத்துவரிடம் சென்றால், 'பிரச்னை ஏதும் இல்லை...' என்று சொல்கின்றனர். ஆனால், எனக்கு மிகவும் மன கஷ்டத்தை தருகிறது.

பேருந்து நடத்துனரிடம், ஊரின் பெயரை கூற முடியவில்லை. பள்ளியில், பேச்சு போட்டி, பாட்டு போட்டி என, எதிலும் பங்கு பெற முடியவில்லை. இதனால், யாரிடமும் சரியாக பேச முடியவில்லை. மேலும், தலைமுடி மிகவும் அதிகமாக கொட்டி, இப்போதே, வழுக்கை போல் உள்ளது.

வீட்டை விட்டு வெளியே செல்லவே பயமாக உள்ளது. பள்ளியில், அனைவரும் கிண்டல் செய்கின்றனர். இதனால், படிப்பில் கவனம் செலுத்த முடியாமல், பின்னுக்கு செல்கிறேன். இது, எனக்கு மிகுந்த மன உளைச்சலை தருகிறது; இதற்கு, நல்ல முடிவை சொல்லுங்க ஆன்டி ப்ளீஸ்...

அன்பு மகனே... உன்னோட கஷ்டம் எனக்குப் புரிகிறது. இது ஒன்றும் பெரிய விஷயம் இல்ல... இதை, சரி செய்து விடலாம். மருத்துவர்களே ஒன்றும் இல்லை என்று சொல்வதில் இருந்து, நீ திக்குவாய் என்பதன், நான்காவது நிலையில் தான் இருக்கிறாய். பயிற்சி எடுத்தால், சரி செய்து விடலாம்.

திக்குவாய் என்பது வியாதி இல்ல; ஒரு இயலாமை; மூளையில் ஏற்படும் ஒரு சின்ன பிரச்னை தான் இது. முதலில் உனக்கு திக்குவாய் இல்லை என நம்பு; உன்னால் தெளிவாக பேச முடியும் என்பதை, உன் மூளையில், நன்கு பதித்துக் கொள்.

இரண்டரை முதல், ஐந்து வயது குழந்தைகளுக்கு குறிப்பாக, நுாறில் ஒரு குழந்தைக்கு, இந்த பிரச்னை வருகிறது. அதிலும், ஆண் குழந்தைகளுக்கு தான், இந்த பிரச்னை அதிகம் ஏற்படுகிறது.

பயம், மரபு மற்றும் வளரும் சூழ்நிலை காரணமாக, திக்குவாய் ஏற்படுவதாக கண்டுபிடித்துள்ளனர்; திட்டமாக, இதுதான் காரணம் என்று, இன்னும் யாராலும் அறியப்படவில்லை.

இதை, குழந்தை பருவத்திலேயே, பெற்றோர் கண்டுபிடித்து, மருத்துவர்களிடம் அழைத்துச் சென்றால், பயிற்சிகள் மூலம் சரி செய்து விடலாம்.

உன்னால், வீட்டில் இருக்கும் போதும், உறவினர்களிடமும் நன்றாக பேச முடியும். ஆனால், பேருந்து அதிகாரிகள், புது நபர்களிடம் பேசும் போது, பயம், பதட்டத்தின் காரணமாக, திக்க ஆரம்பித்து விடுவாய்... சரியா! இதற்கு இந்த எளிய பயிற்சிகளை செய்து பார்.

மனதில் நினைத்த காரியத்தை, உடனே, உன்னால் சொல்ல முடியாது. எனவே, கண்ணாடி முன் நின்று, நிறைய பேசி, பயிற்சி எடுத்துக் கொள். பேப்பரை தலைகீழாக வைத்து, சத்தமாகப் படித்து பார். இந்தப் பயிற்சி, மூளையில் ஏற்பட்டிருக்கும் அடைப்புகளை நீக்குவதன் மூலம், சரியாக பேச ஆரம்பிப்பாய்.

நடிகர் சாருஹாசன் சிறுவயதில் திக்கு வாயாக இருந்தார். இவர், அதிகாலையில், ஆற்றங்கரை ஓரத்தில் அமர்ந்து, செய்தித்தாளை சத்தமாக வாசிப்பார். இப்படி வாசித்ததின் மூலமே, அவர் சரளமாக பேசக் கற்றுக் கொண்டார் என்று, அவரே கூறியிருக்கிறார். வக்கீல் தொழிலில் சரளமாக வாதாடும் அளவிற்கு வந்து விட்டாருன்னா பாரேன்! உன்னாலும் முடியும்.

சில பாட்டி வைத்தியம் சொல்றேன். அதையும் முயற்சி செய்...

* நடுத்தரமான கூழாங்கல்லை வாயில் போட்டு, சப்பிக்கொண்டேயிருக்க வேண்டும்; இப்படி செய்தால், திக்கு வாய் போகும் என்று கூறுவர்.

* ஒரு ஸ்பூன் மிளகை அரை தேக்கரண்டி தேனில் கலந்து, காலை மாலை என, இரு வேளை சாப்பிட்டு வந்தாலும், திக்கு வாய் போகும்.

* இலந்த இலையை இடித்து, அதன் சாறை சாப்பிட்டு வந்தாலும், திக்குவாய் நீங்கும்.

* வசம்பு பொடியை அருகம்புல் சாற்றில் கலந்து குடித்தாலும் திக்கு வாய் மாறும்.

கலைப்படாதே முயற்சி செய்... நிச்சயமாக உன்னால் முடியும். நீயும் பேச்சு, பாட்டு போட்டிகளில் கலந்து அசத்தப் போற பாரு!

தலை முடி கொட்டுவதற்கு, சத்தான ஆகாரங்கள் சாப்பிட வேண்டும்; கருவேப்பிலையை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள். பொடியாகவோ, துவையலாகவோ தினமும் சாப்பிடு; முடி பிரச்னை நீங்கும். எதற்காகவும் கவலைப்படாதே... கிண்டல் பண்ணும் நண்பர்களுக்கு செவி கொடுக்காதே.

அந்த காலத்தில் நூற்றில் ஒருவர் தான் அழகாக இருப்பர். ஆனால், இன்று ஏதாவது ஸ்டைல் பண்ணி, எல்லாருமே பார்க்கும்படி இருக்கின்றனர். உனக்கும் ஒரு அழகை ஆண்டவன் கொடுத்திருப்பான். எனவே சந்தோஷமா இரு; படிப்பில் கவனம் செலுத்தி முதலிடம் வா; மற்ற குறைகள் எல்லாமே மறைந்து போய்விடும்!

- ஜெனிபர் பிரேம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us