தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/இளஸ்... மனஸ்... (168)

இளஸ்... மனஸ்... (168)

இளஸ்... மனஸ்... (168)


PUBLISHED ON : அக் 22, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 22, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்புள்ள பிளாரன்ஸ்...



என் வயது, 35; இல்லத்தரசியாக இருக்கிறேன். மகளுக்கு வயது, 12; தனியார் பள்ளியில், 7ம் வகுப்பு படிக்கிறாள். படிப்பில் சராசரி. அவளது பிரச்னை என்னவென்றால், சாதாரணமாகவே கூன் போட்டு நடக்கிறாள்.

பின் பக்கத்தை ஒரு மாதிரி துருத்திக் கொள்கிறாள். நானோ, என் கணவரோ, கூன் போட்டு நடந்ததில்லை. இப்படியே போனால், 'பேரழகன்' சினிமாவில் நடிகர் சூர்யா போல ஆகி விடுவாளோ என பயமாய் இருக்கிறது. தகுந்த ஆலோசனை வழங்குங்கள் சகோதரி!



இப்படிக்கு,

பேச்சியம்மாள்.


அன்புள்ள அம்மா...



ஆணோ, பெண்ணோ கூன் போட்டு நடப்பதற்கு காரணங்கள் பல உள்ளன.

பள்ளிக்கு, பெரிய புத்தக மூட்டையை, துாக்கி செல்கிறாளா... அந்த கூடுதல் எடை நடு முதுகு, கீழ் முதுகு மற்றும் தோள் பட்டைக்கு அழுத்தம் கொடுக்கும். தொடரும் அழுத்தம் தசைகளை வலிமை இழக்க செய்து, தண்டு வடத்தை பாதிக்கும்.

முதுகுப்பை அதிக எடையால், சிறுவர், சிறுமியரை பின்புறம் இழுக்கிறது. ஆனால், அவர்களோ முன் நோக்கி நடக்கின்றனர். நாளடைவில், கீழ் முதுகு பகுதியில், மிகுந்த அழுத்தம் ஏற்படுகிறது. தொடரும் அழுத்தத்தால், எலும்பு முறிவு கூட ஏற்படுகிறது.

மொத்தத்தில், அதிக எடை உடைய புத்தக பைகளே, கூனை உருவாக்குகின்றன.

பெரும்பாலான குழந்தைகள், அலைபேசி, 'டிவி' பெட்டி முன் அமரும் போது, கூனல் தோற்றத்தில் உட்காருகின்றனர். இதனால், கீழ்முதுகு தசைகள் வலிமை இழந்து, உடலின் சமநிலை பாதிக்கிறது.

உடல் ஒரு சங்கிலி போல... ஏதேனும் ஒரு பகுதி பாதிக்கப்பட்டால், அது மற்ற பகுதிகளையும் பாதிக்கும். நீண்ட நேரம் தவறான வழிமுறையில் உட்காருவது கூன் பிரச்னையை உருவாக்கும்.

'வைட்டமின் - டி' குறைபாடு எலும்பு, தசை வளர்ச்சியைப் பாதிக்கும். உடல் அமைப்புக்கு பொருந்தாத கடுமையான விளையாட்டுகளில் ஈடுபட, குழந்தைகளை கட்டாயப்படுத்த கூடாது. எலும்பு முறிவு ஏற்பட வாய்ப்பு உண்டு.

கீழ் முதுகுக்கு கீழே இரு பக்கமும் புட்டங்கள் அமைந்திருக்கும்; சிலருக்கு கனத்தும், சிலருக்கு மெலிந்தும் இருக்கும். அதிகமான கொழுப்புச்சத்துள்ள உணவுகளை உட்கொள்வதால், புட்டங்கள், தொடை மற்றும் வயிறு பெரிதாகி விடும்.

காலில், 'ஹை ஹீல்ஸ்' என்ற செருப்பு அணிவதும், புட்டத்தை துருத்த செய்யும். எலும்பியல் நிபுணர் அல்லது மருத்துவரை ஆலோசித்து, கீழ்க்கண்ட விஷயங்களை கடைப்பிடித்தால், மகளுக்கு ஏற்பட்டுள்ள பிரச்னை நீங்கும்.

* எடை குறைவான முதுகுப்பையை பள்ளிக்கு எடுத்து செல்லலாம்

* எல்லா நேரங்களிலும் நேராய் நிமிர்ந்து உட்கார சொல்லலாம்

* அமர்ந்து படிக்கும் போது, எழுதும் போது, முதுகின் பக்க பலமாக தலையணை வைக்கலாம்

* ஒரு விளையாட்டில் ஈடுபடுத்தும் முன், உடல் உறுதியை பரிசோதனை செய்யவும்

* மாலையில், 1 மணி நேரமாவது சூரிய ஒளி படும்படி விளையாட சொல்

* வைட்டமின், 'டி' மாத்திரைகளை மருத்துவர் ஆலோசனைபடி உட்கொள்ளவும்.

புட்டத்தின் அளவை குறைக்கவும், துருத்தலை தடுக்கவும், புட்டத்திற்கும், தொடைகளுக்கும் தேவையான தனி உடற்பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டும்; தவிர கொழுப்பு தவிர்த்த ஆரோக்கிய உணவு உட்கொள்ள வேண்டும். ஹை ஹீல்ஸ் வேண்டாம்.

கை, கால்களை வீசி, நிதானமாக, பதற்றமில்லாமல் நடக்கச் சொல்.

நிமிர்ந்த நடையும், நேர் கொண்ட பார்வையும், மகளுக்கு அமைய வாழ்த்துகிறேன்!

- அள்ளக்குறையா அன்புடன்,

பிளாரன்ஸ்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us