தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/இளஸ்... மனஸ்... (170)

இளஸ்... மனஸ்... (170)

இளஸ்... மனஸ்... (170)


PUBLISHED ON : ஜூன் 21, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 21, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்புள்ள ஜெனி ஆன்டிக்கு, குக்கிராமத்தில் வசிக்கும் மாணவி எழுதுவது...

அரசு பள்ளியில் படிக்கிறேன்; இந்த ஆண்டு, 10ம் வகுப்பு தேர்வில், 490 மதிப்பெண்களுக்கு மேல் வாங்குவேன் என, ஆசிரியர்கள் எதிர்பார்த்திருக்க, 415 மதிப்பெண்கள் தான் வாங்கினேன்; அதற்கு காரணம், உங்களிடம் சொல்கிறேன்... நீங்கள் தான் தீர்வு சொல்ல வேண்டும்.

என்னுடைய ஆங்கில டீச்சர், மிகவும் அழகாக இருப்பார்; அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும். என்னிடம் மிகவும் பாசமாக இருப்பார்; படிப்பில் என்னை நன்றாக ஊக்கப்படுத்துவார்; அவரை பார்க்காமல், ஒரு நாள் கூட இருக்க முடியாது. பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் போதே, 'கோடை விடுமுறையில் அவரை பார்க்க முடியாதே' என்று நினைத்து வருந்தியே, படிப்பில் கோட்டை விட்டேன்.

என் பெற்றோர் படிப்பறிவு இல்லாதவர்கள்; பிள்ளைகளை நன்றாக படிக்க வைப்பர். மற்றபடி, அன்பாகவோ, பாசமாகவோ பேசுவது கிடையாது. இதனாலே, என்னிடம் அன்பு காட்டிய டீச்சர் மீது, இப்படி ஒரு அன்பு வைத்து விட்டேனா என்பது புரியவில்லை.

எனக்கு கலெக்டர் ஆக ஆசை; அத்துடன், பிளஸ் 1 சேர்ந்த பின், இந்த டீச்சரை பார்க்க முடியாதே என்பதை நினைத்து, தினமும் அழுகிறேன்; அவ்வளவு அன்பு வைத்து விட்டேன். அவரை மறக்க வழி சொல்லுங்க...

அன்பு மகளுக்கு, வணக்கம்!

எப்படியோ, உன் மனதில் உள்ள ரகசியத்தை இறக்கி வைத்து விட்டாய்.

மாணவ பருவத்தில், பிடித்த ஆசிரியர், பிடித்த அக்காக்கள் என, எல்லாருக்குமே ஒரு சிலர் இருப்பர். அழகாக இருக்கும் அவர்களது, நடை, உடை, நாகரிகம் நம்மை அறியாமலே, அவர்கள் மீது, ஒரு ஈர்ப்பை ஏற்படுத்துவது இயற்கை!

உன்னுடைய அழகான ஆங்கில டீச்சர், உன்னிடம் அன்பு காண்பித்து, படிப்பில் அக்கறை எடுத்துக் கொண்டதும், நீ மிகவும் உருகி விட்டாய்... அவ்வளவு தான்!

'பிள்ளைகள் நம்மை போல், கஷ்டப்படக் கூடாது; படித்து, நல்ல நிலையில் இருக்க வேண்டும்' என்று நினைக்கும் உன் பெற்றோருக்கு, பாசத்தை காட்ட தெரியவில்லை.

இந்த உலகத்தில், எந்த காரியத்திற்கும் நாம் அடிமை ஆகக் கூடாது; இங்கு வாழ, நமக்கு கிடைத்திருக்கும் எல்லா சந்தர்ப்பங்களையும், மகிழ்ச்சியாக செலவிட வேண்டும்.

'நாளை நான் எப்படி இருப்பேன்; என்ன நடக்குமோ' என்று நினைத்து, இன்றைய சந்தோஷத்தை கெடுத்துக் கொள்ளக் கூடாது.

சிலர் என்ன செய்வர் தெரியுமா... தங்கள் வாழ்க்கையில் நடந்த சோக நிகழ்ச்சிகள் மற்றும் செய்த தவறுகளை நினைத்து நினைத்தே, இன்றைய மகிழ்ச்சியை தொலைத்து விடுவர்.

நீ அப்படி இருக்காதே...

உனக்கு பிடித்த டீச்சருடன், கிடைத்த மிகழ்ச்சியான தருணங்களை அவ்வப்போது நினைத்துக் கொள்; அத்துடன், விட்டு விடு; போகப் போக வாழ்க்கையில், இன்னும், நிறைய பிடித்தமான நபர்கள் வருவர்.

எனவே, 'டீச்சரை பிரிந்து எப்படி இருப்பேன்...' என்ற நினைப்பை மூட்டை கட்டி வைத்து, கலெக்டர் ஆவதற்கு என்ன வழி இருக்கிறது என்பதை பார்; அதில் கவனம் செலுத்து.

பிளஸ் 2 பாடங்கள், மிகவும் கடினமாக இருக்கும்; எனவே, தேவையில்லாத கவலைகளை மனதில் போட்டுக் கொள்ளாமல், உன் குறிக்கோளை மட்டும் நினை; முன்னேறு!

'அரசு பள்ளியில் படித்த அக்கா, கலெக்டராகி சாதனை படைத்தது போல், நானும் சாதிப்பேன்!' என, பல பெண் குழந்தைகள், உன்னை முன் மாதிரியாக சொல்ல வேண்டும். அதற்கான முயற்சிகளில் இறங்கு; உன் சிந்தனையை வேறு எங்கும் திருப்பாதே!

- வாழ்த்துகளுடன்,

ஜெனிபர் பிரேம்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us