தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/இளஸ்... மனஸ்... (170)

இளஸ்... மனஸ்... (170)

இளஸ்... மனஸ்... (170)


PUBLISHED ON : நவ 05, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 05, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்பு பிளாரன்ஸ் ஆன்டி...

என் வயது, ௧௭; பிளஸ் 2 படிக்கும் மாணவி. எனக்கு வகுப்பு எடுக்கும் ஆசிரியை மீது, கொள்ளை பிரியம். என் அம்மாவுக்கு சமமாக அவரை மதிக்கிறேன். அவர் விவாகரத்து ஆனவர். எப்போது பேசினாலும், பாரதியார் பாடல்களை மேற்கோள் காட்டுவார்.

ஆண்கள் மீது அவருக்கு வெறுப்பு அதிகம்.

அடிக்கடி என்னிடம் அவர், தலைகேசத்தை நீளமாக வளர்க்காதே; பாப் பண்ணிக்கொள். நெற்றியில் பொட்டு வைக்காதே; காதில் கம்மல் போடாதே; தலையில் பூச்சூடாதே; ஆண்கள் உடைக்கு மாறு...

இரு சக்கர வாகனம் ஓட்டு; திருமணம் செய்து கொள்ளாதே; மீறி செய்தால், திருமணத்தின் போது, தாலியோ, மெட்டியோ போட்டுக் கொள்ளாதே... மொத்தத்தில், பெண்களை அடிமைப்படுத்தும் அனைத்து விஷயங்களிலிருந்தும் விடுதலை பெறு... என்று கூறுகிறார்.

இவை எல்லாம் கடைபிடிக்கத்தக்கது தானா... குழப்பத்தில் தவிக்கிறேன். சரியான வழிகாட்டுங்கள் ஆன்டி...

- இப்படிக்கு,

மா.சந்தியா.



அன்பு செல்லத்துக்கு...

ஆண்மை, பெண்மைக்குள் அடக்கம்; பெண்மை, ஆண்மைக்குள் அடக்கம். பெண்கள் இல்லாத உலகத்தை, ஆண்களும், ஆண்கள் இல்லாத உலகத்தை பெண்களும் கற்பனை செய்வது அபத்தத்தின் உச்சம்.

பிளஸ் 2 படிக்கும் உங்களுக்கு பாடத்தை மட்டும் கற்று கொடுக்காமல், தன் விஷ கருத்துக்களை, அந்த ஆசிரியை விதைப்பது கண்டனத்துக்குரியது.

நீண்ட தலைகேசத்தை பராமரிக்க சிரமமாக இருந்தால், போதுமான அளவு குறைத்துக் கொள்ளலாம்.

காதில், ஒற்றைக் கம்மல், கழுத்தில் மெல்லிய செயின், வலது கையில் ஒற்றை வளையல், இடது கையில் கை கடிகாரம் அணிவது எளிமையான அழகு.

தலையில் கூடைப்பூ வைக்காமல், ஒரு முழ பூ சூடி கொள்ளலாம். கண்மை, உதட்டு சாயம் அவரவர் தேவைக்கு, அவரவர் விருப்பத்துக்கு மிதமாக போட்டுக் கொள்ளலாம்.

நெற்றியில் ஸ்டிக்கர் பொட்டோ, திலகமோ வைத்துக் கொள்வது, வெறுமையான முகத்தை அழகு கூட்டும்.

வலுக்கட்டாயமாக பெண்கள், ஆண்கள் உடைக்கு மாறுவது தேவையற்றது.

சுடிதார் போன்ற சவுகரியமான ஆடைகள் அணிவது சிறப்பு. வேலை என்று வரும் போது, பெண்கள் லாரி கூட ஓட்டலாம். ஆனால், தினமும் உபயோகத்துக்கு ஸ்கூட்டியே எளிதானது.

பெண்களுக்கு திருமணம் தேவையா... இல்லையா... என்பதை படித்து முடித்து வேலைக்கு சென்ற பின் முடிவு செய்யலாம்.

பிளஸ் 2 படிக்கும் போது, திருமணத்தை பற்றி பேசுவது அனாவசியம்.

வளரும் போதே எதிர்பாலினத்தவர் மீது வன்மம் ஊட்டுவது அறிவீனம். பெண் உரிமை என்பது புறதோற்றத்தால் வருவது அல்ல. ஏட்டுக்கல்வி, வாழ்க்கை கல்வி, ஆன்மிக கல்வி கற்று, பொருத்தமான வேலையில் சேர்ந்து, பொருளாதார சுதந்திரம் அடைந்த பின், பொருத்தமான வாழ்க்கை துணையை அடைதல் மாண்பு.

ஈகோ இல்லாமல் எல்லா உறவு முறைகளையும் கையாண்டால், வாழ்க்கை அமைதிப் பூங்கா தான். உரிமைகள், 'பபே' சிஸ்டத்தில் பரிமாறப்படும் உணவு போல... தேவைக்கு நாம் தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

உன் வாழ்க்கையை யார் சாயலும் இல்லாமல், சுயமாக நீ தான் வாழ்ந்து பார்க்க வேண்டும். கண், காதுகளை திறந்து வைத்து, அனுபவங்களை சேகரித்து, உலக விஷயங்களின் மீதான பார்வையை உன்னதப்படுத்து.

சந்தைக்குள் பிரவேசிக்கும் போது, நுாற்றுக்கணக்கான விற்பனை பொருட்கள் கூவி விற்கப்படும். எந்த பொருளையும் வாங்காது சந்தையை சுற்றி வரலாம்; அல்லது விரும்பிய பொருளை வாங்கலாம். அல்லது ஒரு பொருளை சந்தையில் சாமர்த்தியமாக விற்கலாம். எல்லாம் உன் திறமை தான் தங்க மகளே!

தற்சமயத்துக்கு பிளஸ் 2 தேர்ச்சி பெற்று, 'நீட்' தேர்வுக்கு தயாராகு!

வாழ்த்துகள்!

- அள்ளக்குறையா அன்புடன், பிளாரன்ஸ்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us