sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 16, 2025 ,புரட்டாசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

சிறுவர் மலர்

/

இளஸ்... மனஸ்... (181)

/

இளஸ்... மனஸ்... (181)

இளஸ்... மனஸ்... (181)

இளஸ்... மனஸ்... (181)


PUBLISHED ON : ஜன 21, 2023

Google News

PUBLISHED ON : ஜன 21, 2023


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்புள்ள ஆன்டி...

என் வயது, 14; பிரபல பள்ளியில், 9ம் வகுப்பு படிக்கும் சிறுமி. எனக்கு அம்மா வழி தாத்தாவும், அப்பா வழி தாத்தாவும் என் மீது அளவுக்கடந்த அன்பை பொழிகின்றனர்.

இரண்டு தாத்தாக்களில், யார் சிறந்தவர் என தீர்மானிக்க முடியாமல் திணறுகிறேன்.

இதற்கு சரியான பதில் சொல்லுங்க ஆன்டி.

இப்படிக்கு,

எம்.சாதனா.



அன்பு செல்லமே, உன் கேள்விக்கான பதில் இதோ...

* பாட்டிகளை விட, சிறந்த மருத்துவர்கள் இல்லை. தாத்தாக்களை விட, சிறந்த ஆசிரியர்கள் இல்லை

* ஆயிரம் புத்தகங்கள் உள்ள நுாலகத்துக்கு சமம் தாத்தா, பாட்டி உள்ள வீடு

* தாத்தா கதையில் யாரும் இறந்தது இல்லை

* தாத்தா இறந்த பின்னும் அவர் கூறிய கதைகள் உயிருடன் இருக்கும்.

இது போன்ற பொன் மொழிகளை கேட்டிருப்பாய்.

பாட்டியும், தாத்தாவும் ஜோடியாக இருந்தால் தான், பாசம் அர்த்த பூர்வமாய் வெளிப்படும்.

பாசத்தின் இடது கை பாட்டி என்றால், வலது கை தாத்தா.

அம்மா வழி தாத்தா, மகள் திருமணத்துக்கு லட்சக்கணக்கில் பணம் செலவு செய்திருப்பார். உன் அம்மா கர்ப்பமான, ஏழாம் மாதமோ, ஒன்பதாவது மாதமோ வீட்டுக்கு அழைத்து மீண்டும் லட்சக்கணக்கில் செலவு செய்து, பிரசவம் பார்த்திருப்பார்.

பிரசவமான, ஐந்தாம் மாதம், மகளை, மருமகன் வீட்டுக்கு அனுப்பியிருப்பார்.

மொத்தத்தில், அம்மா வழி தாத்தா, ஒரு ஏ.டி.எம்., கார்டு மாதிரி. கார்டை செருகினால், பேத்திக்கு, பரிசுப் பொருள், இனிப்பு மற்றும் காமிக்ஸ் புத்தகங்கள் கொட்டும்.

மகளை, 50 சதவீத பாசமும், 50 சதவீத கண்டிப்பும் கொட்டி வளர்த்த அவர் பேத்தி மீது, லட்ச சதவீதம் பாசத்தை, குற்றால நீர்வீழ்ச்சியாக கொட்டுவார்.

இறந்து போன தன் அம்மா, பேத்தியாய் வந்து பிறந்திருக்கிறாள் என கொண்டாடுவார்.

கொஞ்சுவதற்கு புதிய வார்த்தைகள் கண்டுபிடித்து குதுாகலிப்பார். கேடயமாய் பேத்தியை பாதுகாப்பார்.

ஓய்வூதிய பணத்தை சேர்த்து, நகைகள் வாங்கி, பேத்தியின் காது, கழுத்து கைகளை நிறைப்பர். அனுபவங்களை மொத்தமாய், பேத்தியின் நியூரான் செல்களுக்கு மடை மாற்றுவார் அம்மா வழி தாத்தா.

என்ன தான் உயிரை கொடுத்து கொஞ்சினாலும், உடல் பொருள் ஆவியை விட்டுக் கொடுத்தாலும், பேத்தி மீது எவ்வித உரிமையும் கொண்டாட மாட்டார் அம்மா வழி தாத்தா.

முழு உரிமை மகளுக்கும், மருமகனுக்கும் தான்.

'இறைவா... மனைவியுடன், உயிருடன் இருந்து, பேத்தியின் திருமணத்தை, கண் குளிர பார்க்க வேண்டும். அதுவரை தாக்கு பிடிக்க அருள்புரியும் பரம்பொருளே...' என்பது தான், அம்மா வழி தாத்தாவின் வேண்டுதல்.

பூக்குட்டி... அம்மா வழி தாத்தாவே சிறந்தவர் என தீர்ப்பளிக்கிறேன்!

- அள்ளக்குறையா அன்புடன், பிளாரன்ஸ்.






      Dinamalar
      Follow us