
அன்புள்ள பிளாரன்ஸ்...
என் வயது, 35; இல்லத்தரசியாக இருக்கிறேன். எனக்கு, 10 வயதில், மகனும், 8 வயதில் மகளும் முறையே, 5ம் வகுப்பும், 3ம் வகுப்பும் படிக்கின்றனர்.
இருவரின் கையெழுத்தும், கோழி கிறுக்கலாய் உள்ளது. இருவரும், பேனாவை பிடிக்கும் விதமே சரியில்லை. என்ன செய்தால், அவர்களின் கையெழுத்தை திருத்தி மேம்படுத்தலாம் அம்மா... சரியான ஆலோசனை கூறுங்கள்.
இப்படிக்கு,
எம்.சாவித்ரி.
அன்புள்ள அம்மா...
அழகாய் எழுத வேண்டும் என்பதை, முதலில் ஒருவர் மனதால் விரும்ப வேண்டும்.
கொட்டை எழுத்துகளில் எழுதுபவர், மக்களுடன் எளிதில் கலப்பர். வெளிப்படை பேச்சாளி, அள்ளக்குறையாத அன்பை அனைவர் மீதும் பொழிவர்.
குட்டி குட்டியாக எழுதுபவர் சங்கோஜி.
சராசரி அளவில் எழுதுபவர், அனைவரிடமும் ஒத்துப்போகும் குணம் படைத்தவர்.
அழகிய கையெழுத்து அமைய, சில பயிற்சிகள் மேற்கொள்ளலாம்...
* எழுதும் முன், கை விரல்களை நீட்டி, மடக்கி பயிற்சி செய்ய வேண்டும். அதனால், கை விரல்களில், ரத்த ஓட்டம் அதிகரிக்கும்; விரல்களை நெட்டி முறிக்க கூடாது
* எழுதும் போது, பேனா மூடியை கழற்றி வைத்து விட வேண்டும்
* எழுதுவதற்கு, இங்க் பேனா, பால் பாயின்ட் பேனா, ஜெல் பேனாவில், எது சவுகரியமாக இருக்கிறது என பார்க்க வேண்டும்
* பேனா நுனியிலிருந்து, 1.5 செ.மீ., உயரத்தில், விரல்களால் பிடிக்க வேண்டும்
* கட்டை விரல், ஆள்காட்டி விரலால், பேனாவை பற்றுதல் நலம். மூன்றாவது நடுவிரல், இரு விரல்களுக்கு அடியில், அணைப்பாக இருக்கலாம்
* பேனாவை முரட்டுதனமாக கையாளக் கூடாது. தாளை கிழித்து விடும்; விரல்கள் களைப்படைந்து விடும்
* எழுதும் எழுத்தின் மொழியறிவு அவசியம்
* வலது பக்கம் சாய்த்து எழுத வேண்டும்
* வலது கையால் எழுத, எழுதும் தாள், இடது பக்கம் தாழ்ந்திருக்க வேண்டும்
* எழுத்துகளுக்கு நடுவே, வார்த்தைகளுக்கு நடுவே, வாக்கியங்களுக்கு நடுவே, சீரான இடைவெளி இருக்க வேண்டும்
* எழுத்து இன்னொரு எழுத்தின் மீது உரசக் கூடாது
* எழுத்துகளில் காணப்படும் நுட்பம் பற்றி கையெழுத்து நிபுணரிடம் கேட்டறிந்து பயிற்சி பெறலாம். மேல் நோக்கி, கீழ் நோக்கி போகும் எழுத்துகள், ஒரே மாதிரி இருத்தல் நலம். நான்கு கோடு நோட்டில், எழுத்து பயிற்சி பெறலாம்.
அழகான கையெழுத்தை பெற என்ன செய்யலாம் என்பதை விளக்க, நுாற்றுக்கணக்கான, யுடியூப் வீடியோக்கள் உள்ளன. அவற்றை குழந்தைகளுக்கு காட்டலாம்.
கையெழுத்தை, 10, 12 வயதுக்குள் சீர்படுத்தி விட வேண்டும். உயர்நிலை பள்ளிக்கோ, கல்லுாரிக்கோ சென்ற பின், கையெழுத்தை மாற்றுவது இயலாத காரியம்.
அழகான கையெழுத்துகளுடன் கூடிய விடைத்தாள் அதிக மதிப்பெண் பெறும். கையெழுத்தை அழகாக மாற்றும் குழந்தைக்கு, சிறப்பான பரிசு கொடு. கல்வி தெய்வம் சரஸ்வதியை வணங்கி, எழுத்துப் பயிற்சியில் வெற்றிப் பெற வாழ்த்துகிறேன்!
- அள்ளக்குறையா அன்புடன், பிளாரன்ஸ்.