தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/இளஸ்.. மனஸ்..! (22)

இளஸ்.. மனஸ்..! (22)

இளஸ்.. மனஸ்..! (22)


PUBLISHED ON : நவ 23, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 23, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்புள்ள மெடோஸ் ஆன்டி...

நான், 9ம் வகுப்பு படிக்கும் மாணவி; இடது கை பழக்கம் உடையவள்; எழுதுவதும், சாப்பிடுவதும் இடது கையில் தான். சிலர், 'இடது கை பழக்கம் உள்ளவர் புத்திசாலி...' என்று கூறும்போது, சந்தோஷமாக இருக்கும்.

ஆனால், எனக்கு ஒரு பிரச்னை உள்ளது ஆன்டி.

இடது கையைத்தான் சாப்பிட பயன்படுத்துகிறேன். பள்ளியில், கரண்டியில் சாப்பிடுவதால், பிரச்னை இல்லை. உணவகம், திருமண நிகழ்ச்சிகள், கோவில் திருவிழா போன்ற பந்திகளில் அமர்ந்து சாப்பிடும் போது, ஒரு மாதிரியாக பார்க்கின்றனர் ஆன்டி. என்னிடம், 'வலது கை விளங்காதா... புண் இருக்கிறதா...' என்று, தேவையில்லாமல் கேட்டு தொந்தரவு செய்கின்றனர்.

'இடது கை பழக்கம் உடையவள்' என்பதை கூறினாலும், ஒரு மாதிரியாக தான் பார்க்கின்றனர். அப்போது மிகவும் பலவீனமாக உணர்கிறேன்.

இது போன்ற பிரச்னையை சமாளிக்க, நான் என்ன செய்ய வேண்டும். வலது கையில் எழுதவும், சாப்பிடவும் பழகி கொள்ளவா... புரியாமல் தவிக்கிறேன். இதற்கு நல்ல தீர்வு சொல்லுங்க ஆன்டி.

அன்புள்ள மருமகளுக்கு...

இடது கையால், முத்துக்களை கோர்த்தது போல் மிக அழகாக எழுதியுள்ள உன் கடிதம் கண்டு மகிழ்ந்தேன்.

உலக மக்கள் தொகையில், 10 சதவீத பேர் இடது கை பழக்கமுள்ளவர்கள்; இடது கை பழக்கமுள்ள பெற்றோருக்கு பிறக்கும் குழந்தைகளில், 26 சதவீதம் பேர், இடது கை பழக்கத்துடனே பிறக்கின்றனர்.

ஆண்டு தோறும், ஆகஸ்ட் 13ம் தேதி, உலக இடது கை பழக்கமுள்ளோர் தினமாக கொண்டாடப்படுகிறது.

புகழ் பெற்ற விஞ்ஞானிகள் மேரி க்யூரி, ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், பிரபல ஓவியர்கள் மைக்கேல் ஆஞ்சலோ, லியானார்டோ டாவின்சி, பிரபல எழுத்தாளர் மார்க் ட்வைன், ஹெச்.ஜி.வெல்ஸ், பிரபல ஆட்சியாளர்கள் நெப்போலியன், ஒபாமா, தொழிலதிபர் பில்கேட்ஸ், அமெரிக்க நடிகை ஓப்ரா வின்ப்ரீ போன்றோர் இடது கை பழக்கமுள்ளவர்களே.

அமெரிக்க குடியரசு தலைவர்களாக பதவி வகித்தவர்களில், ஆறு பேர் இடது கை பழக்கமுள்ளவர்கள். சரி... இவை எல்லாம், முன்னேற்றத்துக்கு இடது கை பழக்கம் தடையல்ல என்பதை விளக்கும் புள்ளி விவரங்கள்.

இடது கை பழக்கமுள்ளவர்கள், கற்பனை வளம் மிக்கவர்கள்; ஆரோக்கியமானவர்கள்; குழுவாய் செயல்படுவதில் திறன் மிக்கவர்கள்; விளையாட்டில் சாதிப்பவர்களாக இருப்பர்; ஒன்றுமையுடன் செயல்படுவர்; சிறப்பான நினைவுதிறனும், ஒரே நேரத்தில், பல செயல்களை நிறைவேறறும் திறனும் பெற்றவர்கள் என்பதெல்லாம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

இடது கை பழக்கத்தை, சிலர் தரக்குறைவாக விமர்சித்து வருவது உண்மை தான். அது போன்றவர்களை புறம் தள்ளி, முன்னேற்ற பாதையை மட்டும் நோக்கி செல்.

இடது கை பழக்கம் என்பது ஊனம் அல்ல என, மனதில் கொள். வலுக்கட்டாயமாக, வலது கையை பழக்க நினைப்பது தவறான செயல்.

மனித மூளையின் வலப்பக்கம், உடலின் இடப்பக்கத்தையும்; மூளையின் இடப்பக்கம், உடலின் வலப்பக்கத்தையும் கட்டுபடுத்துகிறது. இடது பழக்கத்தை, வலதுக்கு, வம்படியாக மாற்ற முனைவது, குழப்பத்தையே தரும்.

மாற்ற முயன்றால், கீழ்க்கண்ட விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக, மருத்துவ உலகம் எச்சரித்துள்ளது.

* கையெழுத்து மோசமாகும்

* படுக்கையில் சிறுநீர்

* நகம் கடிக்கும் பழக்கம்

* வெட்கத்தால் நடுக்கம்

* முரட்டு நடத்தை

* கவன சிதைவு

* ஞாபக மறதி

* வாசிப்பதில் சிரமம்

* உச்சரிப்பில் குறை

* விரைவாக களைப்பு

இது போன்ற பாதிப்புகள் வரலாம். எனவே, இடது கை பழக்கத்தை மாற்ற முயற்சி செய்யாதே. இடது கையை, கிருமிநாசினி திரவசோப் பயன்படுத்தி, எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள். நகங்களை வெட்டி சீராக வைத்திரு. உணவை, எப்போதும் கரண்டியில் சாப்பிட பழகு.

நண்பர்களோ, உறவினர்களோ கேலி செய்தால், 'ஐ டோன்ட் கேர்; ஐ எம் எ லெப்ட் ஹாண்ட் கேர்ள்...' என, நெஞ்சை நிமிர்த்தி சொல்லப் பழகு.

உன் திறன் மிக்க உழைப்பால், உலகில் பிரபலமாகவும் வாய்ப்பு உண்டு. கல்வி, கலை போன்றவற்றில் தீவிரமாக உழைத்தால், நோபல் போன்று உலக புகழ்பெற்ற அதிமுக்கிய பரிசுகளைக்கூட, நீ பெறும் வாய்ப்பு இருக்கிறது. வாழ்த்துகள், இடது கை தேவதையே.

- அன்புடன், மெடோஸ்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us