தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/இளஸ்... மனஸ்... (4)

இளஸ்... மனஸ்... (4)

இளஸ்... மனஸ்... (4)


PUBLISHED ON : ஜூலை 19, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 19, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்புள்ள சகோதரி மெடோஸ்...

நான் மருந்தாளுனராக பணிபுரிகிறேன்; என் கணவர், அதே மருத்துவமனையில், 'எக்ஸ்ரே டெக்னிஷியனாக' பணிபுரிகிறார். துணை மருத்துவ பணிகளில் இருக்கும் எங்களுக்கு, மருத்துவர்களுக்கு கிடைக்கும் மரியாதை கிடைப்பதில்லை.

'நமக்கு கிடைக்காத, மரியாதையும், அங்கீகாரமும், குழந்தைகளுக்காவது கிடைக்க வேண்டும்; எப்படியாவது, அவர்களை மருத்துவராக்க வேண்டும்' என்பது, எங்கள் ஆசை!

எங்களுக்கு, மூன்று குழந்தைகள்; மூத்தவனுக்கு, 14 வயது; 9ம் வகுப்பு படிக்கிறான்; இரண்டாவது பெண் குழந்தைக்கு, 10 வயது; 5ம் வகுப்பு படிக்கிறாள்; மூன்றாவது பெண் குழந்தைக்கு ஏழு வயது; 2ம் வகுப்பு படிக்கிறாள்.

குழந்தைகளுக்கு, மருத்துவக் கனவை வளர்க்க, சமயம் கிடைக்கும் போதெல்லாம், மருத்துவப் படிப்பின் அருமை, பெருமைகளை பேசியபடியே இருப்போம்.

மூத்தவன் நன்றாக படித்தால், இளையதுகள், நன்கு படிக்கும் என்பதால், அவன் மீது, கூடுதல் கவனம் செலுத்தினோம். அவனிடம் மருத்துவம் பற்றி பேசினால், ஒரு மாதிரி முகம் சுளிப்பான்.

ஒரு நாள், எங்கள் இருவரையும் அழைத்து, 'உங்க ரெண்டு பேருக்கும், ஒரு விஷயத்தை தெளிவுப்படுத்தி விடுகிறேன். எனக்கு, படிப்பில், அதீத ஆர்வம் இருந்தால் தானே, மருத்துவர் ஆவேன்... என்னை, 10ம் வகுப்பில், இவ்வளவு மதிப்பெண் எடுக்க வேண்டும், 12ம் வகுப்பில், இவ்வளவு மதிப்பெண் எடுக்க வேண்டும் என, நிர்பந்திக்காதீர்...

'தினமும், நள்ளிரவு வரை, படிக்கவோ, அதிகாலையில் எழுந்து படிக்கவோ மாட்டேன். சிறப்பு வகுப்புகளுக்கு செல்ல மாட்டேன். ஆசிரியர், வகுப்பறையில், என்ன சொல்லி தருகிறாரோ, அதை வைத்து தான் தேர்வு எழுதுவேன்; சராசரி மதிப்பெண் எடுத்து, பாசாகி விடுவேன்... 'நீட்' தேர்வு எழுதமாட்டேன். மீறி எழுதி, பெயிலானாலும் தற்கொலை செய்து கொள்ளமாட்டேன்...

'நுாறு பன்றிகளை வளர்ப்பேன்; அல்லது, 50 மாடுகளை வளர்ப்பேன்; இல்ல, 50 ஆடுகளை வளர்ப்பேன்; அதுவும் இல்லை என்றால், கோழிப்பண்ணை வைப்பேன்...

'உங்களுக்கு பாரமாய் இல்லாது சுயதொழில் செய்வேன்; தங்கைகளை கவனித்து கொள்வேன்; ஆனாலும், அவர்களையும், இதை தான் படிக்க வேண்டும் என வற்புத்த மாட்டேன்...' என, கூறிவிட்டான்.

நீயாவது, அவன் மனதை மாற்ற, முயற்சி செய்யம்மா.

அன்புள்ள சகோதரிக்கு,

இந்தியாவில், அரசு பணிகளை பெற்று தரும் படிப்புகள், ஆயிரம் உள்ளன. ஒவ்வொரு பதவிக்கும், பிரத்யேகமான, அதிகாரமும், மரியாதையும் உண்டு!

எந்த பதவியில் இருந்தாலும், நேர்மையாக, முழு ஈடுபாட்டுடன் பணி செய்தால், ராஜ மரியாதை கிடைக்கவே செய்யும்.

கழிப்பறை சுத்தம் செய்யும் ஊழியர் கூட, 'உலகிலேயே சிறப்பாக கழிப்பறை சுத்தம் செய்யும் மனிதர்' என்ற புகழும், அங்கீகாரமும் பெற வாய்ப்பு உண்டு; இந்தியாவில், அனைவரும் மருத்துவர் ஆக ஆசைப்பட்டால், நோயாளிகளாக யார் இருப்பது...

நம் கனவையும், விருப்பத்தையும் குழந்தைகள் மீது திணிக்கக் கூடாது சகோதரி. அடுத்த, 10 ஆண்டுகளில், அரசு வேலை வாய்ப்பும், தனியார் வேலை வாய்ப்பும் அறவே இல்லாது போகும் அபாயம் இருக்கிறது.

மருத்துவ படிப்பை முடித்து, வேலை இல்லாமல் அல்லது மாதம், 20 ஆயிரம் சம்பளத்தில் பணிபுரியும் இளையதலைமுறையை இப்போதே, பல இடங்களில் பார்த்திருக்கிறேன்.

உன் குழந்தைகள் மூவரும், மருத்துவப் படிப்பை படிக்க, முதலில், 'நீட்' தேர்வை முடிக்க வேண்டும். அதில் நல்ல மதிப்பெண் எடுத்தால், குறைந்த கல்வி கட்டணத்தில், அரசு மருத்துவக் கல்லுாரிகளில் சேர்ந்து, படிக்க முடியும். சுமாராக மதிப்பெண் எடுத்து, தேர்ச்சி பெற்றால், அதிக கல்வி கட்டணமும், நன்கொடையும் தர வேண்டிய, தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் தான் படிக்க முடியும்.

இளங்கலை மருத்துவ பட்ட படிப்பை, மூன்று குழந்தைகள் முடிக்க, 1.5 கோடி ரூபாய் ஆகும். கடன் வாங்கினால், ஆயுளுக்கும் அடைக்க முடியாது. பணத்துக்கு, எந்த வங்கியை கொள்ளையடிப்பது...

உங்கள் மகன் யதார்த்தவாதி; சுயவேலை வாய்ப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்திருக்கிறான். நதி வளைந்து நெளிந்து அதன் வழியில் போகட்டும். படிப்பை இடையில் நிறுத்தும் எண்ணம், அவனுக்கு வராமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

சில குழந்தைகள், 12ம் வகுப்பு வரை மிக மந்தமாக படித்து விட்டு, இளங்கலை படிக்கும் போது, வேகம் எடுப்பர். அதிக கல்விக் கட்டணமில்லாத, நிச்சயம் வேலை கிடைக்க கூடிய படிப்புகள் உள்ளன; அவற்றில் ஒன்றை, உங்கள் மகன் தேர்ந்தெடுக்கக் கூடும்.

மாடு, ஆடு, கோழி வளர்த்தல் இழிவான பணி அல்ல; அர்ப்பணிப்புடன் செய்தால், மிகப்பெரிய லாபம் சம்பாதிக்கலாம்.

உண்மை பேசும் உங்கள் மகனை மனதார பாராட்டுங்கள்; மனம் விட்டு பேசுங்கள். அவனது பேச்சில் அறியாமை இருந்தால் அகற்றுங்கள்.

'மருத்துவர் படிப்பு தான் உலகத்திலேயே உயர்ந்தது' என்பதை துடைத்தெறியுங்கள்.

குழந்தைகளின் எதிர்காலத்தை பற்றி, தேவைக்கு அதிகமாக கவலைப்பட்டு, 'பிபி, ஷுகரை' வரவழைத்துக் கொள்ளாதீர்.

சுயவேலைவாய்ப்பை தேர்ந்தெடுத்த, செல்ல இளவரசனுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்!

- அன்புடன், மெடோஸ்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us