PUBLISHED ON : மே 23, 2020

அன்பு பிளாரன்ஸ் ஆன்டிக்கு...
பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி நான்; பள்ளியில், 9ம் வகுப்பு வரை, வேகமாகவும், அழகாகவும், திருத்தமாகவும் தேர்வு எழுதினேன். இப்போது நேரம் போதாமையால், வேகமெடுக்க நினைத்தேன். வேகத்துடன் எழுதியதிலிருந்து, கை நடுக்கம், திருத்தம் இன்மை, கேவலமான எழுத்து, பேனாவை பிடிப்பதில் பிரச்னை போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ளேன்.
படிக்கவே நேரம் சரியாக உள்ளது; எழுதி பயிற்சி பெற நேரம் போதவில்லை. இதைப் பற்றி கூறினால், நரம்பு மருத்துவரைச் சந்திக்க சொல்கின்றனர். எழுதாத போது, கை நடுங்குவது போன்ற பிரச்னை ஏற்படவில்லை; எழுதும் போது பதற்றமும் இல்லை.
பல நாட்களாக என் கையெழுத்தை பாராட்டி வந்த ஆசிரியைகள், தேர்வு தாளை பார்த்து, 'கையெழுத்து நன்றாக இல்லை...' என கூறுவதை மனம் ஏற்க மறுக்கிறது. தீர்வு காணும் வழிமுறைகளை சொல்லுங்க ஆன்டி!
அன்பு மகளே...
உன்னிடம் ஒரு குறையும் இல்லை; எல்லாம் மனதில் தான் இருக்கிறது. நன்றாக எழுதி வந்த நீ, 10ம் வகுப்பில் அவசரமாக எழுத துவங்கியுள்ளாய். இதன் காரணமாக, பதற்றம், படபடப்பு, கை நடுக்கம் என, பிரச்னைகளை வரவழைத்திருக்கிறாய்.
முதலில், விரைவாக எழுத வேண்டும் என, உன் மனதில் பதிவு செய்த அழுத்தமான கருத்தை அழித்து, தாமதமானாலும் பரவாயில்லை என, நிதானமாக எழுத துவங்கு மகளே.
மனதை லேசாக வைத்துக் கொள்ளப் பழகு. நுாறு சதவீதம் சரியான விடை தெரிந்த வினாக்களுக்கு முதலில் பதில் அளித்து, பின், சந்தேகத்திற்கிடமான கேள்விகளுக்கு விடை எழுதலாம்.
எந்த அளவு விரைவாக எழுதி முடிக்க நினைக்கிறாயோ, அந்த அளவு, உன் மனம் மற்றும் உடல்நிலையில் மாற்றம் ஏற்படும்; படபடப்பில் வேலையும் முடியாது.
தடகள வீரர்கள், ஓடும் முன், வெகுவாக ஆசுவாசப்படுத்திக் கொள்வதை பார்த்திருக்கலாம்.
வாயில் காற்றை ஊதுவர்; கை, கால்களை உதறுவர்... இப்படியெல்லாம் செய்து, மன இறுக்கத்தை குறைப்பர்.
நீயும், அது போல, மன இறுக்கத்தை குறைக்க முயற்சி செய்; சாதாரண சமயத்தில், நேர வரையறையின்றி எந்த பணியையும் செய். தியானம், யோகா பயிற்சி செய். அது, உனக்கு சலனமற்ற மன பக்குவத்தை அளிக்கும்; உடலையும், உன் வசப்படுத்தும்!
நாளடைவில் ஏற்படும் மாற்றத்தை நீயே உணருவாய்.
'பதறிய காரியம் சிதறும்' என்பது முதுமொழி. எந்த வேலையை செய்வதாக இருந்தாலும், நிதானமாக செய்ய பழகு! அது, விரைவாக செயல்பட, உன்னை பழக்கும்.
வாழ்த்துக்களுடன், பிளாரன்ஸ்!
