PUBLISHED ON : ஏப் 14, 2017

அன்புள்ள ஜெனிபர் தாயீக்கு...
அப்பா எழுதிக் கொண்டது. என் வயது, 55. எட்டாம் வகுப்பு வரை படித்துள்ளேன். எங்க ஊரில் உள்ள டீக்கடைக்கு வரும், 'தினமலர்' பேப்பரை கேட்டு வாங்கி படிப்பேன். குக்கிராமம் என்பதால், எனக்கு தனியாக பேப்பர் கிடைக்காது. 'இளஸ்... மனஸ்!' பகுதியை தொடர்ந்து படித்து வருகிறேன். நீ எல்லாருக்கும் சொல்லும் புத்திமதி, மனசுக்கு ஆறுதலா இருக்கு தாயீ.
அதனால் என் மனக்கஷ்டத்தை உன்னிடம் சொல்கிறேன். 20 வயதில் எனக்கு திருமணம் நடந்தது. ஐந்து ஆண்டுகளில், மூன்று மகன்களை கொடுத்துவிட்டு, என்னை விட்டு போய் விட்டாள் மவராசி.
விவசாயம் செய்து, கடின உழைப்பால், மூன்று மகன்களையும் வளர்த்து ஆளாக்கினேன். மறுமணம் செய்து கொண்டால், வருபவள் பிள்ளைகளை கொடுமைபடுத்துவாள் என்பதற்காகவே மறுமணம் செய்து கொள்ளவில்லை.
நானே சமைத்து, சோறு ஊட்டி, பள்ளிக்கு அனுப்பி, மூன்று பேருக்கும் திருமணம் செய்து வைத்தேன். இப்போது, நான் அவர்களுக்கு பாரமாகி விட்டேன். பொண்டாட்டி பேச்சை கேட்டுகிட்டு, எனக்கு, ஒரு பிடி சோறு கூட போட மாட்றானுக...
'உனக்கு எதுக்கு இவ்ளோ பெரிய வீடு... எங்களுக்கு பங்குபோட்டு கொடுத்துட்டு, சின்ன வீட்ல இருந்துக்கோ... சொத்துக்களை பிரித்து கொடு...' என்று தகராறு செய்தனர். 'போகட்டும்... அவன்களாவது நன்றாக இருக்கட்டும்...' என நினைத்து, எனக்கு கொஞ்ச சொத்தை வைத்துக் கொண்டு, மீதியை பங்கு போட்டு கொடுத்து விட்டேன் தாயீ.
இப்போது, தனி குடிசையில் வாழ்கிறேன்; நானே சமைத்து சாப்பிடுகிறேன். அருமையாக சமைப்பேன் தாயீ... தனிமை என்னை மிகவும் வாட்டுகிறது. எல்லாத்தையும் நினைச்சு, அழுது அழுது என் மனம் வெறுத்து போய் சாகும் முடிவுக்கு வந்து விட்டேன். நான் எடுத்த முடிவு சரி தானே...
எல்லாருக்கும் புத்திமதி சொல்லும் நீ, எனக்கு, என்ன பதில் சொல்லப் போறேன்னு பார்க்க ஆவலாக இருக்கு... எனக்கு மகள் இல்லாத குறையை, தீர்த்து வைப்பாய் என நம்புகிறேன். சொல்லு தாயீ உன் பதிலை!
அன்புள்ள அப்பா...உங்கள் கடிதம் என் கண்களில் கண்ணீரை வரவழைத்தது... என்ன உலகம் இது. நாளைக்கு உங்கள் மகன்களுக்கு இதே நிலை வராதா என்ன... அதையெல்லாம் ஏன் யோசிப்பதில்லை, இன்றைய இளைய தலைமுறையினர்.
அப்பா, 55 வயதெல்லாம் ஒரு வயதா... அதுவும் நீங்கள் ஒரு கடின உழைப்பாளி. நடந்த நிகழ்ச்சிகளை நினைத்து நினைத்து அழுவதால், ஒரு பயனும் இல்லை. கண்ணீரை துடைச்சிக்கோங்க. முதலில், உங்களுக்கு ஒருவரின் உண்மை கதையை சொல்றேன் கேளுங்க. அப்புறமா, சாவதா... வேணாமான்னு முடிவு எடுங்க.
ஒரு மனிதர் தன், ஐந்து வயதில் தந்தையை இழந்தார். படிப்பு வரவில்லை; கூலி வேலைக்கு சென்றார். அம்மா வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டார். எனவே, 13 வயதில் வீட்டை விட்டு ஓடி, 'பெயின்டர்' வேலைக்கு சென்றார். பின், ராணுவம், கொல்லப் பட்டறை என பல வேலைக்கு மாறினார். ஒன்றும் சரியில்லை.
விரும்பிய பெண்ணை, 19 வயதில் மணந்தார்; வேலை போனது; குழந்தைகளை இவரிடம் விட்டு விட்டு ஓடிவிட்டாள் மனைவி. தொடர்ந்து போராடி படித்து, பல வேலைகளுக்கு சென்று, பிள்ளைகளை கரை ஏற்றிவிட்டு, மீண்டும், திருமணம் செய்த போது இவருக்கு வயது 54.
வாழ்க்கையை ஓட்ட வேண்டும் என்பதற்காக, ஒரு ஓட்டலில் பாத்திரம் கழுவும் வேலையில் சேர்ந்து, நன்றாக சமைக்க கற்றார். தொடர்ந்து வந்த கஷ்டங்கள், தோல்விகளால் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு வந்த போது தான், 'தனக்கு நன்றாக கோழிக்கறி சமைக்க தெரியுமே...' என்பதை உணர்ந்து, கடன் வாங்கி கோழி கறி சமைத்து, வீடுகளுக்கு கொடுத்தார்.
மக்கள் இவரது சுவையில் மயங்கினார். இப்படி உருவானது தான், 'KFC' என்ற, 'கெண்டகி பிரைட் சிக்கன்' இவர் ஒரு அமெரிக்கர். இன்று உலகம் முழுவதும் உள்ள மக்கள், இவரது சிக்கனை விரும்பி உண்கின்றனர். வெற்றிக்கனி இவரைத் தேடி வந்தபோது இவரது வயது, 64.
அப்பா... நீங்கள் வெறும், 55 வயது தான். சமையலில் கில்லாடி என்று சொல்கிறீர்கள். போடுங்கள் ஒரு இட்லி கடையை. உங்களது சுவையான சமையலை எடுத்து விடுங்க. உதவிக்கு, ஊரில் உள்ள, உங்களை போன்ற ஆதரவற்ற வயதானவர்களை ஒன்று சேர்த்து கொள்ளுங்கள். அவர்களுக்கும் வழி காட்டியதுபோல் இருக்கும்; உங்களுக்கும் பொருள் சேர்ந்தது போல் இருக்கும்.
பணத்தை சேமித்து வையுங்கள். ரொம்ப முடியாத காலத்தில் முதியோர் இல்லங்களில் சேர்ந்து கொள்ளலாம். அதுவரை நீங்களும் உழைத்து, கைவிடப்பட்ட முதியோரை வாழ வையுங்கள். உங்களால் பலருக்கு வாழ்வு கிடைக்க வேண்டியிருக்கு...
அதற்குள்ளே, 'போறேன்... போறேன்னு... சொன்னா எப்படி?' எடுங்க இட்லி பானையை... சமைங்க விதவிதமான கிராமத்து சுவை மிகுந்த சட்னி, கோழி குருமா வகைளை... அப்படியே, மறக்காம எனக்கும் ஒரு, 'பார்சல்' கட்டி அனுப்புங்க. ஓ.கே!
- 'ஜொள்'ளுடன் காத்திருக்கும் அன்பு மகள், ஜெனிபர் பிரேம்.
