PUBLISHED ON : ஏப் 21, 2017

அன்பு ஜெனி ஆன்டிக்கு...
தற்போது, +2 தேர்வு எழுதியுள்ள, குக்கிராமத்தை சேர்ந்த மாணவன் நான். பெற்றோர், கூலி வேலை செய்கின்றனர். மிகுந்த ஏழ்மையான சூழ்நிலையில் வாழ்ந்து வருகிறேன்.
மருத்துவம் படித்து, மருத்துவ வசதி இல்லாத கிராமங்களில், டாக்டராக பணிபுரிந்து, மக்களுக்கு சேவை செய்ய ஆசை! 10ம் வகுப்பு பொது தேர்வில், 490 மதிப்பெண்கள் பெற்று, எங்கள் பள்ளியில் முதல் மாணவனாக வந்தேன்.
ஆசிரியர்களின் உதவியால் தான், +2 தேர்வு எழுதியுள்ளேன். 'நல்ல மதிப்பெண் எடுப்பேன்' என்ற நம்பிக்கை உள்ளது. ஆனால், அதன்பின், மேற்படிப்பை எப்படி படிப்பேன்... யார் எனக்கு பண உதவி செய்வர்... என் ஆசை எப்படி நிறைவேறும்... மூளை இருந்தும், ஏழையாக பிறந்தது நான் செய்த பாவமா...
பணக்கார வீட்டில் பிறக்கும் பிள்ளைகள் குறைந்த மதிப்பெண் எடுத்தால் கூட, அவர்களது பெற்றோர், பணம் கொடுத்து மருத்துவ, 'சீட்' வாங்கி விடுகின்றனர். அவர்களுக்கு படிக்க ஆர்வம் இருக்கோ, இல்லையோ... பெரிய மருத்துவமனைகளை, பெற்றோர் கட்டி கொடுத்துவிடுவர். ஆனால், அறிவு இருந்தும், அதை பயன்படுத்த முடியாத என் நிலைமையை எண்ணி எண்ணி கண்ணீர் வடிக்கிறேன் ஆன்டி. எனக்கு உதவி செய்வீர்களா...
மகனே! உன் கடிதம் என்னை மிகவும் வேதனைப்படுத்துகிறது. கவலைப்படாதே... உன்னை மாதிரி புத்திசாலி மாணவர்கள், மருத்துவரானால் தான், நம் எதிர்கால சந்ததியினர் தைரியமாக உங்களை போன்றோரை நம்பி மருத்துவம் பார்த்துக் கொள்ள முடியும். அறிவுக்கு மாத்திரமே மதிப்பு கொடுத்து, அப்படிப்பட்ட மாணவர்களை அரசாங்கம் எப்போது ஊக்குவிக்கிறதோ, அப்போது தான் நம் நாடு முன்னேறும்.
அமெரிக்காவில், மருத்துவம் படித்து, தேர்வாகி, மருத்துவராவதென்பது, குதிரை கொம்பான காரியம்.
காரணம், இது மனித உயிர் சம்பந்தப்பட்ட விஷயம். அதனால், அந்த நாட்டில், அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். மிகக் கடினமான தேர்வுகளை எழுத வேண்டும். ஆண்டுகள் பல ஓடிவிடும்.
ஆனால், நம் நாட்டில் பணக்கார வீட்டு பிள்ளை களின் படிப்பாகிவிட்டது மருத்துவம்.
தற்போதுதான், அரசாங்கம், 40 சதவீதம் மதிப்பெண் பெற்றவர்கள் எல்லாம், எப்படி மருத்துவ கல்லுாரியில் சேர்ந்தனர் என்பதை குறித்த விசாரணையை ஆரம்பித்துள்ளது. கவலைப்படாதே மகனே... உன்னை போன்றவர்களை ஆதரிக்க எத்தனையோ நல்ல உள்ளங்கள் உள்ளனர்.
மதுரை திரு.வி.க., மாநகராட்சி மேல்நிலை பள்ளியில், +2 படித்து, புவியியல் பாடத்தில், தமிழகத்தில் இரண்டாவதாக வந்த வீரபாண்டியன், பரோட்டா கடையில் வேலை பார்த்து கொண்டே படித்தார். அப்போதைய முதல்வர் கருணாநிதி கொடுத்த, 1 லட்சம் ரூபாய் பணத்தை, மேற்படிப்புக்கு ஐந்து ஆண்டுகள், 'டிபாசிட்' செய்து வைத்துக் கொண்டார்.
அத்துடன், அப்போதைய அமைச்சர், முரளி மனோகர், முன்னாள் சட்டமன்ற தலைவர், பி.டி.ஆர்.பழனிவேல் ராஜன், மதுரை முன்னாள் மேயர், குழந்தைவேலு, நடிகர் சிவக்குமார், மாரிஸ் பவுண்டேஷன் ஆகியோர் இவருக்கு உதவி செய்தனர்.
சென்னை லயோலா கல்லுாரியில் பி.ஏ., சமூகவியல் படிப்பில் சேர்ந்த இவருக்கு, முன்னாள் முதல்வர் இன்னாசி முத்து, கல்வி கட்டணம் எதுவும் வாங்காமலேயே கல்லுாரி மற்றும் விடுதியில் தங்கி படிக்க அனுமதித்தார்.
பின், சட்டம் பயின்று, தன்னுடைய கனவான, சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி, அகில இந்திய அளவில், 53வது ரேங்க் பெற்று, தேர்ந்தெடுக்கப்பட்டார். வறுமையிலும் சாதித்துக் காட்டிய சாதனை மாணவனாகத் திகழ்கிறார். இவரது அம்மா துப்புரவு தொழிலாளி; தகப்பனார் பாத்திர வியாபாரம் செய்பவர். இதற்கு என்ன சொல்கிறாய் மகனே... சாதனை படைப்பதற்கு வறுமை ஒரு தடையல்ல...
நீ மாநில அளவில் சாதித்து காட்டு... உன்னைப் போன்று நன்கு படித்து, ஏழ்மையில் இருக்கும் மாணவர்களுக்கு உதவுவதற்கென்றே, 100 பேர் அடங்கிய டாக்டர் குழுவொன்று உள்ளது. அவர்கள் உன்னைப் போன்ற மாணவர்களின், மருத்துவ படிப்பிற்கான கட்டணச் செலவை ஏற்கின்றனர்.
எத்தனையோ நல்ல டாக்டர்கள், இப்படி ஏழை மாணவர்கள், ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்படும் ஏழைகளுக்கான மருத்துவ செலவை ஏற்று, அவர்கள் உயிரை காப்பாற்றி வருகின்றனர்.
இவர்கள் விளம்பரத்திற்காக இதை செய்யவில்லை. உதவும் மனப்பான்மையுடன் செய்கின்றனர். எனவே, நம்பிக்கையை இழக்காதே; கண்ணீரை துடை. ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தை மட்டும் ஒரு போதும் மாற்றிக் கொள்ளாதே... உன் ஆசை நிறைவேறும்!
-வாழ்த்துக்களுடன், ஜெனிபர் பிரேம்.
