
அன்பு பிளாரன்ஸ்...
என் வயது, 40; தென் தமிழக விவசாய குடும்பத்தில், மூன்று மகள்களுடன் கிராமத்தில் வசிக்கும் பெண் நான். மூத்தவள் வயது, 15; பெரிய மனுஷி ஆகி விட்டாள்.
உதட்டின் மேல்பற்களின் நடுவே பெரிய இடைவெளி இருக்கிறது. சிரிக்கும் போதோ, பேசும் போதோ விகாரமாக தெரிகிறது. கிராமத்தினர் கிண்டல் செய்கின்றனர்.
திருமண வயது வரும்போது வரன் பார்ப்பது பாதிக்கப்படும் என அஞ்சுகிறேன். தற்போது, 10ம் வகுப்பு படிக்கிறாள். மேற்கொண்டு படிக்க சங்கடப்படுகிறாள்.
தக்க ஆலோசனை கூறுங்கள் பிளாரன்ஸ்.
அன்புள்ள அம்மா...
மகளுக்கு இருக்கும் பல் பிரச்னையை, 'மிட்லைன் டயஸ்டிமா' என்பர்.
இனம், குடும்பம் மற்றும் மரபியல் ரீதியாக இது வரலாம்.
விரல் சூப்பும், நாக்கை மடித்து துறுத்தும் குழந்தைகளுக்கு இந்த பாதிப்பு ஏற்படலாம்.
உலகில், 25 சதவீதம் பேருக்கு இப்பிரச்னை இருக்கிறது.
இதை பாதிப்பாக கருதாமல், ஆளுமையின் ஒரு பகுதியாக எண்ணி, உலக அளவில் பிரபலமானவர்கள் இருக்கின்றனர்.
பிரபல பாப் பாடகி மாடோனா, அமெரிக்க நடிகர் ராபின் வில்லியம்ஸ், தமிழ் சினிமா இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் போன்றோருக்கும் இப்பிரச்னை இருக்கிறது.
பெரிய தாடை எலும்புகளுக்கு பொருந்தாத சின்ன பற்களின் அணிவகுப்பால் இடைவெளி ஏற்படலாம். எந்த பற்களுக்கு இடையேயும், இடைவெளி ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
பற்களில் இடைவெளி உள்ள ஆண், பெண்களை அதிஷ்டசாலி என, சில நாடுகளில் கொண்டாடுகின்றனர்.
சிலருக்கு, குழந்தை பருவத்தில் ஏற்படும் பல் இடைவெளி பிரச்னை நாளாக நாளாக சரியாகிவிடும். எவ்வித சிகிச்சையும் தேவைப்படுவதில்லை.
நகரத்தில் இருக்கும் நல்ல பல் மருத்துவரிடம், மகளை அழைத்து சென்று காட்டு.
முதலில் ஈறுகளின் ஆரோக்கியத்தை சோதிப்பார் மருத்துவர்.
பல் இடைவெளி முக அழகை எந்த அளவு பாதித்திருக்கிறது என்பதைக் கணிப்பார்.
பேச்சில் குறைபாடு இருக்கிறதா என்றும் பார்ப்பார்.
பின், பல்வரிசையையும், முகத்தையும் முழுவதுமாக, 'எக்ஸ்ரே' எடுப்பார்.
வாயில், சிறுகட்டிகள், சீழ், வீக்கம், உபரி பற்கள் முளைத்திருக்கிறதா என ஆராய்வார்.
பற்களுக்கு இடையே இருக்கும் இடைவெளி, ௨ மி.மீ., இருக்கிறதா அல்லது அதற்கு மேல் இருக்கிறதா என அளப்பார். அவற்றை சரி செய்வதற்கான ஆலோசனையை வழங்குவார்.
பல் இடைவெளி பிரச்னையை, ஐந்து விதங்களில் மட்டுப்படுத்தலாம்...
* இயற்கையான நிறத்தில் இருக்கும், 'காம்பாஸைட் ரெசின்' கலவையை வைத்து பல் இடைவெளியை அடைக்கலாம். இது பாதுகாப்பான வழி; நீண்ட நாள் தாக்கு பிடிக்கும்; செலவும் குறைவுதான்
* டென்டல் வெனிரை பல் இடைவெளியில் பொருத்தி மறைக்கலாம்
* பற்களுக்கிடையே, 'கிளிப்' பொருத்தி, இடைவெளியை நெருக்கி சரி செய்யலாம்
* 'டீத் எபக்ட் பான்ட்' எனப்படும் ரப்பர் எலாஸ்டிக் பாண்ட்களை இடைவெளியில் அணியலாம். இது, பல் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் என்பதை கவனத்தில் கொள்ளவும்
* உதடு ஈறுகளை இணைக்கும் ஜவ்வை, லேசர் அறுவை சிகிச்சையால் அகற்றலாம்.
எல்லாவற்றுக்கும் மேலாக தகுந்த ஆலோசனை வழங்கி உதவுவார் மருத்துவர். மகளுக்கு தகுந்த வரன் பார்க்கும் போது, இது பிரச்னையாக பார்க்கப்படும் என கூறமுடியாது.
இது சரி செய்யக்கூடியது. இதற்காக, அஞ்சி அரிய வாழ்வை வீணடிக்க வேண்டாம். தொடர்ந்து படித்து முன்மாதிரியாக திகழவும். மகளுக்கு என் அன்பு வாழ்த்துகள்.
- அன்புடன், பிளாரன்ஸ்.

