
ஹலோ ஜெனி ஆன்டி...
உங்களோட பதில்கள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. முக்கியமா நீங்க கொஞ்சி, கொஞ்சி எங்களை நல்வழிப்படுத்துவது ரொம்ப, ரொம்ப பிடிக்கும். அதனால்தான் என்னோட பிரச்னையை உங்ககிட்ட சொல்லி மனசு ஆறுதல் அடைய நினைக்கிறேன்.
நான் பத்தாம் வகுப்பு படிக்கிறேன் ஆன்டி. கறுப்பு என்றாலும் களையாக இருப்பேன். ஆனால், மிகவும் குள்ளமாக இருக்கிறேன். அதனால் எல்லாரும் என்னை குள்ளச்சி, குட்டச்சி என்று கூப்பிடும் போது கூனி குறுகிப் போகிறேன்.
ஏண்டா உயிருடன் இருக்கிறோம் என்று தோணுது. வகுப்பில் நான்தான் முதல் பெஞ்சில் முதல் ஆளாக உட்கார்ந்திருப்பேன். எங்க குடும்பத்தில் எல்லாருமே குள்ளம்தான்.
பெரிய ஹீல்ஸ் போட்டிருப்பேன் ஆன்டி. அதை பார்த்து, 'ஸ்டூல் வருது... ஸ்டூல் வருதுன்'னு கிண்டல் பண்றாங்க... எனக்கு ஒரே அழுகை... அழுகையா வருது ஆன்டி.
வாழ்க்கையே வெறுத்து போகுது எனக்கு. என்ன செய்யட்டும் ஆன்டி?
'ஸ்டாப் இட்' குட்டிமா... என்ன இது? குள்ளமா இருப்பதற்கு இப்படி ஒரு அழுவாச்சியா? குள்ளமாக இருந்தா வயசே தெரியாது தெரியுமா? எப்பவுமே இளமையாக இருக்கலாம். சீனா, ஜப்பான்கார பெண்களைப்பாரு... குள்ளமா, க்யூட்டா வெள்ளை வெளேர்னு எத்தனை அழகா இருக்காங்க தெரியுமா? சென்னையில் அதிகமாக இவர்களை பார்க்கலாம். குள்ளமாக இருந்தாலும், நம்மை மாதிரி பெரிய ஹீல்ஸ் எல்லாம் போட்டு, உயரத்தை போலியாக காட்டுவதில்லை. வெறும், 'ப்ளாட்' ஸ்லிப்பர்ஸ்தான் போட்டிருப்பாங்க. தரையை தேய்ச்சுகிட்டு அந்த ரப்பர் ஸ்லிப்பர்ஸ் இருக்கும். ஆனாலும், அவங்க எல்லாருமே, 'க்யூட்டீஸ்'தான். அது மாதிரி நீயும் ஒரு, 'க்யூட்டி'தான். சரியா?
உனக்கு ஒரு ரகசியம் சொல்லட்டுமா? உங்க ஜெனி ஆன்டியும் குள்ள கத்தரிக்காய் தான். ஆனா பாரு... எல்லாருமே, 'மேடம் எந்த காலேஜ் நீங்க?' வயசே தெரியலியேன்னு சொல்லி, சொல்லி புலம்புவாங்க. நானும், என் மகளும் அக்கா, தங்கை மாதிரிதான் இருப்போம்... ஸோ... குள்ளமா இருப்பதில் இவ்ளோ, 'அட்வான்ட்டேஜ்' இருக்கு தெரியுமா?
இனி உன்னை பார்த்து யாராவது, 'குள்ள கத்திரிக்காய்'னு சொன்னா... 'சாரி ஒரு சின்ன சேஞ்ச்... நான் ஒரு, 'க்யூட்' கத்திரிக்காய்'னு சொல்லு. வாயடைச்சி போயிடுவாங்க.
நம்ம சச்சின் டெண்டுல்கர், மாவீரன் நெப்போலியன்.... எல்லாருமே குள்ளம்தான். இவர்கள் எல்லாம் சாதிக்கவில்லையா என்ன?
அதுபோல, நீயும் உன்னுடைய திறமை எது என்று அறிந்து, அதில் சாதனை படை. உலகம் உன்னை திரும்பி பார்க்கும். அப்புறம் குள்ளமாக இருப்பதுதான், 'பேஷன்'னு சொல்லும். சரியா? இப்போ மனசு ஹேப்பியா இருக்கா?
என்றும் மகிழ்ச்சி இளமையுடன்,
- ஜெனிபர் பிரேம்.

