
மகத நாட்டை வீரகேசரி என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவன் மிகுந்த சோம்பேறி.
சதா சர்வகாலமும் தெருக்கூத்து, நடனம், பாடல்கள் என்று பலவித கேளிக்கைகளில் நேரத்தை செலவு செய்தான்.
மக்களைப் பற்றியோ, படைகளைப் பற்றியோ சிறிது கூட கவலைப்படுவதில்லை. போர்க்களத்தில் உடைந்து, சிதைந்த போர்க்கருவிகளும், இடங்களும் அப்படியே இருக்கும். யானை, குதிரை போன்றவற்றிற்கு தொடர்ந்து போர் பயிற்சி தராமல் அவையும் அவனைப் போலவே சோம்பேறியாகி விட்டன.
இப்படியாக அவன் செயல்பட்டதை மக்களும், மற்ற அரசு அதிகாரிகளும் சிறிது கூட விரும்பவில்லை. அரசனிடம் சென்று அரசு அலுவல் பற்றிப் பேசினாலே எரிந்து விழுந்தான். எனவே, இனி கடவுள் விட்ட வழி என்று அனைவரும் அமைதியாக இருந்தனர்.
ஒருநாள்-
அரசனுக்கு வேட்டைக்கு செல்ல வேண்டும் என்று தோன்றியது. உடனே, தனது மெய்காவலர்களை அழைத்தான். வேட்டைக்கான ஏற்பாடுகளையும் செய்ய ஆணையிட்டான். அதன்படி மறுநாள் நன்றாக இருந்த ஒரு சில ஆயுதங்களுடன் வேட்டைக்குப் புறப்பட்டான் அரசன்.
அரசனுடைய இருபது காவலர்கள் குதிரைகளில் சென்றனர். அவர்கள் காட்டிற்குள் நுழைந்த போதே, குதிரைகள் ஓரளவு களைத்து விட்டன. இதைக் கவனிக்காத அரசன் காட்டிற்குள் தொடர்ந்து சென்றான்.
திடீரென்று, சில புலிகள் எங்கிருந்தோ ஓடி வந்தன. அப்போது பார்த்து அரசனது கையில் இருந்த வில் செயல்படவில்லை. மற்ற காவலர்களின் குதிரைகளுக்கு காலில் லாடம் கட்டி நீண்ட நாட்களாகி விட்டதால் விளுக்கென்று படுத்து விட்டன.
காவலர்கள் நடுநடுங்கி ஆங்காங்கே இருந்த குழிகளுக்குள் மறைந்து கொண்டனர். அரசனும், செய்வதறியாமல் ஒரு குழிக்குள் சென்றுபதுங்கிக் கொண்டான்.
காவலர்கள் குழிகளிலிருந்தபடியே வினோத சத்தங்களை எழுப்பினர். எதிர்பாராத சத்தங்களால் புலிகள் ஓடிவிட்டன. அரசனும், மற்றவர்களும் திடுக்கிட்டனர். தமக்கு ஏற்படவிருந்த ஆபத்தை எண்ணி நடுங்கினர். கடவுள்தான் தங்களைக் காப்பாற்றினார் என்று கூறியபடியே நடந்தனர்.
நடந்து களைத்த அவர்கள், ஒரு மரத்தடியில் படுத்து இளைப்பாறினர். அப்போது தூரத்தில் ஒரு காட்டுப் பன்றி தனது கொம்புகளை ஒரு கல்லில் வைத்து தேய்த்துக் கொண்டிருந்தது. அந்த வழியாக வந்த மான் ஒன்று அதனைப் பார்த்து, ''ஏன் பன்றியே! நீ உனது கொம்பை இப்படி தீட்டுகிறாய்... இங்குதான் இப்போது உன் பகைவர் யாரும் இல்லையே!'' என்று கேட்டது.
''இப்போது பகைவர் இல்லையென்பதற்காக நான் என் கொம்புகளை தீட்டாமல் விட்டு விட்டால் அது தவறு. நாளை திடீரென பகைவர் என் எதிரில் வந்து விட்டால், அப்போது நான் என் கொம்புகளை தீட்டிக் கொண்டு இருக்க நேரம் இருக்குமா? எனவே, எப்போதும் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று தான் நான் இப்போதே என் கொம்புகளை தீட்டிக் கொள்கிறேன்,'' என்றது காட்டுப் பன்றி.
அப்போதுதான் மன்னனுக்கு தான் செய்த தவறு புரிந்தது. உடனே, நாட்டிற்குச் சென்றான். தன் கேளிக்கைகளை மூட்டை கட்டி வைத்தான். படைபலத்தை சீர் செய்தான். அன்று முதல் போரில்லாத காலங்களில் கூட அவன் தனது படையை போருக்கு தயார் நிலையிலேயே வைத்திருந்தான். அன்று முதல் எப்போதும் அவனுக்கு வெற்றியே கிடைத்தது.

