
ஹலோ... ஜெனி ஆன்டி.... நீங்க நலமா? நான் நலம் இல்லை. எல்லாருக்கும் கொஞ்சி கொஞ்சி, 'அட்வைஸ்' கொடுக்கிறீங்களே... என்னோட பிரச்னைக்கு பதில் சொல்லுங்க பார்ப்போம்!
எனக்கு ரொம்ப அழுகை அழுகையா வருது ஆன்டி. +1 படிக்கிறேன்; நல்லா சாப்பிடுவேன். அதனால, 'கொழு கொழுன்னு' இருப்பேன். குறிப்பாக, என் வயிறு மட்டும் பார்ப்பதற்கு நான்கு மாத கர்ப்பிணி பெண் போல தொப்பை மாதிரி இருக்கும்.
இதனால் எந்த டிரஸ் போட்டாலும், தொப்பை தெரிவதால் எல்லாரும், 'தொப்பிணி, குண்டச்சி' என்று சொல்லி மானத்தை வாங்குறாங்க. மாணவர்கள் கிட்டே வந்தாலே வயிற்றை எக்கி எக்கி தொப்பையை மறைக்க நான் படும்பாடு இருக்கே, தாங்க முடியல. அப்படியும் என் தொப்பையை பார்த்து கிண்டல் பண்ணி சிரிப்பாங்க.
ஸ்லிம்மான கேர்ள்ஸ்... வயிறு ஒட்டிய என் தோழிகளை பார்க்கப் பார்க்க, எனக்கு வயத்தெரிச்சலா இருக்கு ஆன்டி...
'தீனி பண்டாரம்... சோத்து மூட்டை, குண்டு பூசணிக்காய், தொப்பினி' என்று எல்லாரும் கிண்டல் பண்ணுவதை கேட்டு கேட்டு என் மனசு வெறுத்துப் போச்சு... தயவு செய்து எனக்கு ஒரு தீர்வு சொல்லுங்க ஆன்டி. நான் குக்கிராமத்தில் வசிக்கிறேன்.
எனவே, 'ஜிம்'முக்கு போ, 'கிம்' முக்கு போன்னு சொல்லிடாதீங்க... அதெல்லாம் எங்கள் ஊரில் இல்லை; செலவிட பணமும் கிடையாது. எனவே, என்னால் முடிந்ததைச் சொல்லுங்க... அதுவும் என்ன திட்டக் கூடாது... கொஞ்சி... கொஞ்சிதான் பதில் சொல்லணும்... சரியா ஆன்டி?
ஹாய் குஷ்பூ... உன்னதான் செல்லம்... நீ எழுதியிருப்பதில் இருந்து, 'குண்டா குஷ்பூ மாதிரி அழகாக இருப்பேன்னு தெரியுது...' என்ன ஜாலியா?
இப்ப உன்னோட பிரச்னை என்ன? உடம்பு குறையணும்; வயிறு ப்ளாட்டா ஆகணும் அதுதானே... சரி குட்டிமா...
மொதல்ல சாப்பாட்டை குறைக்கணும். மூன்று வேளை சாப்பிடுவதைத் தவிர இடையில் சாப்பிடும், 'தீனிகள்' கூடாது. வயிற்றை குண்டாக்கும் அரிசி சாதம் சாப்பிடாமல் கம்பு, கேழ்வரகு, கோதுமை முதலிய புரோட்டீன் அடங்கிய உணவு வகைகளைச் சாப்பிடணும்.
அத்துடன் நல்லா வேலை செய்யணும். 'அட்லீஸ்ட்' உன்னோட வேலையையாவது நீயே செய்துக்கணும். அம்மாவுக்கு வீட்டு வேலைகளில் உதவி செய். குனிந்து, நிமிர்ந்து பெருக்கினால்தான் உன்னோட 'இடுப்பு' ஷேப் ஆகும். எனவே, வீட்டைச் சுற்றி தோட்டம் எல்லாம் பெருக்கு. இந்த விஷயம் மட்டும் உனக்கு பிடிக்காதே...
செல்லகண்ணா, நீ அழகாக ஆகணும்னா இந்த சின்னச் சின்ன கஷ்டங்களை கூட செய்யலன்னா எப்படி?
அடுத்து, கட்டாயமாக எக்சர்சைஸ் பண்ணியே ஆகணும். கீழே அமர்ந்து கால்களை நீட்டி உடம்பை நன்றாக நிமிர்த்தியபடி, வலது கை விரல்களால் இடது கால் கட்டை விரலைத் தொட வேண்டும். பிறகு இடது கை விரல்களால் வலது கால் கட்டை விரலைத் தொட வேண்டும்.
இப்படி மாறி மாறிச் செய்யும்போது, கால் முட்டியை உயர்த்தாமல், நேராக இருக்க வேண்டும். அத்துடன் முதுகும் வளையக் கூடாது. இந்தப் பயிற்சியை ஒரு நாளைக்கு, 50 முதல் 100 தடவை செய்ய வேண்டும். காலை, மாலை இரு வேளையும் செய்ய வேண்டும்.
இப்பயிற்சியை இன்னொரு மாதிரியும் செய்யலாம். நேராக நின்று இரண்டு கால்களையும் ஓரடி அகற்றி வைத்து நிற்க வேண்டும். பின்பு குனிந்து வலது கையால் வலது காலையும், இடது கையால், இடது காலையும் கால் முட்டி வளையாமல் தொட வேண்டும். ஒவ்வொரு முறையும் குனிந்து நிமிர்ந்து இப்பயிற்சி செய்வதால் அடிவயிற்றுப் பருமன் குறையும்.
பட்டு மகளே... இதுவும் கஷ்டம்னா இரவு நேரத்தில் தூங்குவதற்கு முன், ஒரு கைபிடி கொத்துமல்லி, புதினா மற்றும் அரை எலுமிச்சை பழத்தின் தோலை உரித்து விட்டு மிக்ஸியில் போட்டு அரைத்ததும், ஒரு சின்ன உருண்டை பந்து போல் வரும். அதை எடுத்து அப்படியே சாப்பிட்டுவிட்டு படு. இப்படியே தொடர்ந்து செய்தால் ஊளை சதை எல்லாம் கரைந்தே போய்விடும் மகளே...
உலக அழகிப் போட்டியில் கலந்து கொள்ளும் அழகிகள் எல்லாம், தங்கள் அழகை மெயின்டெயின் பண்ண எவ்ளோ கஷ்டப்படுறாங்க தெரியுமா? மணிக்கணக்கா எக்சர்சைஸ் செய்யணும். ஆசைப்பட்ட உணவை சாப்பிட முடியாது. தோல் வறண்டு போகாமல் இருக்க தண்ணி குடிச்சிகிட்டே இருக்கணும். இப்படி எத்தனையோ கஷ்டங்கள் இருக்கு தெரியுமா?
இந்த ஸ்லிம், ஸிலீக் பாடி எல்லாமே சும்மா வந்துடாது. ஸோ... உங்க மம்மிக்கு வீட்டு வேலைகளில் நல்லா 'ஹெல்ப்' பண்ணு; உன்னோட வேலைகளையும் நீயே செய். உடம்பை ஹெல்த்தியா வச்சிக்கோ... அப்போதான் நல்லா படிக்க முடியும். சரியா?
எக்ஸ்ட்ரா தீனி மற்றும் சோம்பேறித் தனத்துக்கு சொல்லிடு ஒரு பை... பை... உடம்பு குறைந்தவுடன் எனக்கு ஒரு கடிதம் எழுதுவியா குண்டூஸ்... சாரி... சாரி... ஒல்லீஸ்.
செல்ல முத்தங்களுடன்,
ஜெனிபர் பிரேம்.

