
சீனாவின் தன்னிச்சை பகுதியான திபேத்தின் லாசாவில் 'பொட்டாலா அரண்மனை' அமைந்து உள்ளது. 14வது, 'தலாய் லாமா' என அழைக்கப்படும் இன்றைய தலாய் லாமா இங்கிருந்து புறப்பட்டு, ரகசியமாய் இந்தியா வந்து சேர்ந்தார். அத்துடன் நிரந்தரமாய் இந்தியாவில் தங்கிவிட்டார்.
இனி... பொட்டாலா அரண்மனைக்கு வருவோம்.
உண்மையில் இது முதலில் ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. பிறகு ஒரு கால கட்டத்தில் இடிந்து விட்டது. பின், 4வது தலாய் லாமாதான் இந்த அரண்மனையை புதுப்பித்து கட்டினார். 1649ல் இது திறக்கப்பட்டது.
இது கடல் மட்டத்திலிருந்து 3,700 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இந்த அரண்மனையின் உயரம் 117 மீட்டர். இந்த அரண்மனைக்குள்ளேயே 6வது தலாய்லாமா, 13வது தலாய்லாமா உட்பட மேலும் சிலர் புதைக்கப்பட்டுள்ளனர். அரண்மனை கிழக்கு, மேற்கில் 400 மீட்டரும் வடக்கு, கிழக்கில் 350 மீட்டரும் உள்ளது.
இது தான் உலகின் மிக உயரமான கட்டடமாக, 1653ம் ஆண்டு முதல் 1889ம் ஆண்டு வரை இருந்தது.
இதன் உச்சியிலிருந்து லாசா நகரையும், இமயமலையின் அழகையும் ரசிக்கலாம். உள்ளே சுவர்களில் 689 ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. உலகிலேயே மிக அதிக சுவர் ஓவியங்கள் கொண்ட கட்டடம் இதுதான்.
13 மாடி கட்டடமான இதன் உச்சிக்குச் செல்ல மொத்தம் 3 படிக்கட்டு பாதைகள் உள்ளன. இவற்றில் நடுபாதையில் தலாய்லாமா மட்டுமே அனுமதிக்கப் படுவார். இந்த பாதையில் வேகமாக, பயணிக்க இயலும்.
உலகம் முழுவதும் கோயில்கள், தேவாலயங்கள்... மடாலயங்கள் ஆகியவை மின் விளக்கிற்கு மாறிவிட்டாலும், இங்கு மட்டும் இன்றும் நீண்ட முடி கொண்ட காட்டு எருதுவின் கொழுப்பு தான் விளக்கு எரிக்க பயன் படுத்தப்படுகிறது.
திபேத்திய, புத்த மதத்தினரின் புனித ஸ்தலம் இதுதான்! புனித பயணம் வந்து இந்த அரண்மனையை தரிசிப்பவர்கள் அதிகம்!
அரண்மனையின் உள்ளே வெள்ளை அரண்மனை... சிகப்பு அரண்மனை என இருபகுதிகள் உள்ளன.
வெள்ளை அரண்மனை தலாய் லாமா வசிக்கும் அரண்மனை. சிகப்பு அரண்மனை கோயில்களை கொண்ட இடம். பத்மசம்பவா உட்பட பல புத்த தெய்வ சிலைகளை இங்கு காணலாம்.
1994ல் இந்த அரண்மனையை யுனெஸ்கோ, பாரம்பரிய இடங்களில் ஒன்றாக தேர்வு செய்து அறிவித்தது.
அமெரிக்காவின், யு.எஸ்.ஏ., டுடே என்ற இதழும், பிரபல சேனலின் மார்னிங் ஷோவும் இந்த அரண்மனையை உலகின் புது ஏழு அதிசயங்களில் ஒன்றாக தேர்வு செய்தது.
அரண்மனையின் உள்ளேயே புத்த துறவிகளுக்கென, ஒரு தனி ஸ்கூல் உள்ளது.
புத்த ஜெயந்தி... திபேத்திய வருட பிறப்பு போன்றவை இங்கு மிகச்சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. புத்த மதத்தினர், ஏராளமான உணவுப் பண்டங்களை செய்து வந்து இங்குள்ள புத்த துறவியருக்கு அன்பளிப்பாய் வழங்குகின்றனர்.
-திலிப்.

