
ஹாய்... ஆன்டி... ஹவ் ஆர் யு? என் பெயர்...; ---- பத்தாம் வகுப்பு படிக்கிறேன். உங்களுடைய இளஸ் மனஸ் பகுதியை தொடர்ந்து படித்து வருகிறேன். எனக்கு ரொம்ப பிடிக்கும். அதனால் இதுவரை யாரிடமும், 'ஷேர்' பண்ணாத விஷயத்தை உங்களிடம், 'ஷேர்' பண்றேன். பதில் சொல்லுங்க ஆன்டி.
நான் ரொம்ப, 'பொஸசிவ் டைப்.' என் நண்பன் என்னிடம் மட்டும்தான் பேசணும்னு நினைக்கிறேன். அவன் வேறுயார்கிட்ட பேசினாலும் எனக்கு பிடிக்க மாட்டுது ஆன்டி. அவன் மீது உயிரையே வைத்திருக்கிறேன். இதனால் அவனிடம் பயங்கரமா சண்டை போடுறேன்.
அதுபோல, என் பெற்றோர் என் தங்கை கிட்ட பேசினாலோ, கொஞ்சினாலோ எனக்கு ரொம்ப பொறாமை பொறாமையாக வருது ஆன்டி. இந்த குணம் தப்புன்னு எனக்கே தெரியுது. ஆனாலும் என்னால் மாத்திக்க முடியல. இதனால நான் நேசிக்கிறவங்களை ரொம்ப, 'டார்ச்சர்' பண்றேன் ஆன்டி. இந்த பழக்கத்தை மாத்திக்க வழி சொல்லுங்க ஆன்டி.
ஹாய் செல்லம்... இந்தப் பிரச்னை உனக்கு மட்டுமல்ல, நிறைய மாணவ-மாணவியர், கணவன்-மனைவி, அம்மா-மகன், அப்பா-மகள் என அநேக உறவுகளில், அநேகரிடம் உள்ளது. இது என்றைக்கும், 'டேஞ்சரஸ்'தான். எப்பவுமே, 'அன்பு' என்பது ஒரு எல்லையோடு இருக்கணும். அது எல்லை மீறும்போதுதான் பிரச்னையே. 'அதீத அன்பு' எப்பவுமே பிரச்னைதான்.
இங்கபாருப்பா, பத்தாம் வகுப்பு முடிந்தவுடன் இருவரும் ஒரே வகுப்பில் படிக்கப் போறீங்களா என்ன? அவரவர் பிரிஞ்சி போகப் போறீங்க.
இந்த உலகில் எந்த உறவுகளுமே நிரந்தரம் இல்லை. ஏன்? நம் வாழ்க்கையே நிரந்தரம் இல்லை. இன்று இருக்கும் நாம், நாளைக்கு உயிரோடு இருப்போமான்னு யாருக்குத் தெரியும்? எனவே, இந்த நட்பிற்காக உயிரை கொடுத்து, பொறாமைபட்டு உன் மனச கெடுத்துக்காதே. இன்னும் நான்கு வருடங்களுக்குப் பின், உன் நண்பனை நீ சந்திக்கும்போது, அவன் உனக்காக உருகுவானா என்ன?
கல்லூரியில் படிக்கும்போது, 'உனக்காக உயிரையே கொடுப்பேன்... உன்னை மறக்க மாட்டேன்' என்று சொன்ன தோழிகள் எல்லாம், இன்று பார்க்கும்போது, 'ஹாய்... பாய்...' என்று சொல்லிவிட்டு பேசக்கூட நேரமில்லாம் ஓடிவிடுகின்றனர்.
ஸோ... நிலையில்லாத இந்த உறவுக்கெல்லாம் ரொம்ப முக்கியத்துவம் கொடுத்து, படிக்க வேண்டிய பருவத்தை வீணடித்து விடாதே. எதன் மீதும், யார் மீதும் அதிக அன்போ, பற்றோ வைக்காதே. அது கிடைக்கவில்லை என்னும் போதுதான், சுவாதி கொலை வழக்கு போன்ற சம்பவங்கள் நடக்கின்றன.
இந்த மாதிரி குணங்களை ஆரம்பத்திலேயே கிள்ளி எறிந்து விடணும். எல்லாரிடமும் ஒரே மாதிரி பழக கத்துக்க. இந்தப் பள்ளியறையை விட்டு வெளியே சென்றதும், உனக்கென பல காரியங்கள் இருக்கு.
இந்த வருடத்தில் படிப்பில் நீ கவனம் செலுத்து. அதுதான் உன் எதிர்கால வாழ்க்கையை நிர்ணயிக்குமே அன்றி, உன் நண்பன் மீது நீ வைக்கும் பாசமோ, அன்போ அல்ல. கல்லூரிக்குப் போனதும் அங்கு புதிய நண்பர்கள் கிடைத்த பிறகு, நீ இந்த நண்பனை மறந்துடுவ; அப்போது புது நண்பர்கள் கிடைச்சிடுவாங்க.
இன்றைக்கு நீ மிகவும் கவலைப்படுற, 'பொஸசிவ்' ஆ இருக்குற இந்த விஷயம், உனக்கு அப்போ ரொம்ப சிரிப்பா தோன்றும். ஏன் இப்படி நடந்து கொண்டோம் என்று.
இன்னொரு விஷயம்... தங்கச்சி உன்கூட இருக்கப்போறதே கொஞ்ச நாட்கள்தான்... அதனால உன் பெற்றோர் அவளை நேசிப்பதை தவறான கண்ணோட்டத்தோடு பார்க்காம, அவளை நேசி; அன்பாயிரு; செல்ல சண்டைபோடு. இதெல்லாம் அப்புறம் நீ நினைத்தாலும் கிடைக்காத தருணங்கள்.
திருமணமாகி போன பிறகு, அவரவர் குடும்பம், குட்டி என்று ஆகிவிடும். எனவே, இன்றைக்கு கிடைத்த சந்தோஷங்களை தேவையில்லாத, 'பொஸசிவ்னஸ்' என்ற பெயரில் ஏன் அழித்துக் கொள்ள வேண்டும். நல்லா யோசித்துப் பார் மகனே... இப்போ மனசு, 'ப்ரீயா' ஆகியிருக்குமே... குட்!
செல்ல முத்தங்களுடன்,
ஜெனிபர் பிரேம்.