
இந்த வாரம் செப்., 5, 'ஆசிரியர் தினம்' மலரும் அருமையான நேரமாகும். போற்றுதலுக்குரிய மூவரின் வாழ்வை நினைவு கூறும் முக்கிய தருணமிது.
'கற்று' கொண்டே இருப்பவர் ஆசிரியர்!
'ஆசிரியர் பணி அறப்பணி' என்பதனை தன் வாழ்வாகவே மாற்றி கொண்டவர் டாக்டர். ராதா கிருஷ்ணன். சாதாரண ஏழை குடும்பத்தில் பிறந்து, தன் கல்வியாலும், உழைப்பாலும், பேராசிரியராக ரஷ்ய - -இந்திய தூதராகவும், இந்தியக் குடியரசு துணை தலைவராகவும் உயர்ந்து, அதன் பிறகு இந்திய குடியரசு தலைவராகவும் பதவி வகித்த ராதாகிருஷ்ணனின் பிறந்த தினம், 'ஆசிரியர் தினமாக' கொண்டாடப்பட்டு வருகிறது.
அதிக டாக்டர் பட்டம்:
உலகின் அனைத்து நாடுகளிலும் உள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகங்கள் அனைத்துமே டாக்டர். ராதாகிருஷ்ணனுக்கு, 'டாக்டர் பட்டம்' வழங்கியுள்ளன.
இந்திய நாட்டில், மிக அதிக டாக்டர் பட்டம் பெற்றுள்ள ஒரே மனிதர் டாக்டர்.ராதாகிருஷ்ணன் என்றால் அதுதான் உண்மையாகும். அவர் மொத்தம் 17 டாக்டர் பட்டங்களை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
டாக்டர் ராதாகிருஷ்ணன் தன் அறிவிற்கும், வித்தகத்திற்கும் பெற்ற டாக்டர் பட்டங்களும், விருதுகளும் கவுரவ பதவிகளும் எண்ணிலடங்காதவை.
இந்தியாவில் தலைச்சிறந்த விருதான, 'பாரத ரத்னா' டாக்டர் ராதா கிருஷ்ணனுக்கு 1954ம் ஆண்டு வழங்கப்பட்டது.
செக்கிழுத்த செம்மல்!
வ.உ.சி., 1872ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5ம் தேதி தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் எனும் ஊரில் பிறந்தார்.
இந்திய சுதந்திரத் திற்காக பல்வேறு தலைவர்கள் போராட்டங்களை நடத்தியதை நாம் அறிந்திருக்கிறோம். ஆனால், வ.உ.சிதம்பரத்துக்கு போலீசார் கொடுத்த தண்டனைகள் இன்றைய தலைமுறைக்கு குறைந்த அளவே தெரிந்திருக்க வாய்ப்பிருக்கும்.
வ.உ.சி., என்றால் செக்கிழுத்தவர் என்பது மட்டுமே அல்ல.சுதந்திரத் திற்காக இவர் பட்ட துன்பங்கள் நாம் நன்றியுடன் நினைக்க வேண்டியவை. அதற்கான போராட்டங்களை தலைமை தாங்கி அனைவரையும் ஒருங்கிணைத்து நடத்தினார்.
இந்தியருக்கென கப்பலை ஆங்கிலேயர்களை எதிர்த்து இயக்கினார். தன்னுடைய அழகான, ஆவேசமான தமிழால் ஆங்கிலேயரின் தீய ஆட்சிக்கு எதிராக, மேடைகள் தோறும் முழங்கினார்.
மற்றொரு சுதந்திர போராட்ட வீரரான சிவாவிற்கு அடைக்கலம் கொடுத்தார். இப்படி எண்ணற்ற வழிகளில் ஆங்கிலேயருக்கு மிகுந்த கஷ்டத்தை ஏற்படுத்தியதால், எண்ணற்ற வழக்குகள் இவர் மீது போடப்பட்டன.
இவை ஆங்கிலேயே அரசுக்கு விரோதமாய் மக்களை தூண்டிவிட்டார் என்ற பிரதான குற்றச்சாட்டின் அடிப்படையில் அமைக்கப்பட்டன.
மக்களை தூண்டி விட்டதற்காக, 20 ஆண்டு தீவாந்திர தண்டனை.
சிவாவிற்கு ஆதரவு அளித்ததற் காக மற்றுமொறு 20 ஆண்டு தீவாந்திர தண்டனை.
சிவாவுக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை. 40 ஆண்டு தீவாந்திரத் தண்டனை என்பது யாருக்கும் கொடுக்கப்படாத கொடுமை யான தண்டனை. அதனைதான் இப்போது, 'கடுங்காவல் தண்டனை' என்கின்றனர்.
வ.உ.சி., க்கு மட்டும் இவ்வளவு கொடுமையான தண்டனை விதிக்கப் பட்டதன் காரணம், அவர் தன்னால் முடிந்த அனைத்து வகைகளிலும் சுவாசிக்கும் ஒவ்வொரு நொடியையும் சுதந்திரத்திற் கான பேராட்டமாய் மாற்றி வாழ்ந்து கொண்டிருந்தார்.
வ.உ.சியை ஒரேடியாய் அடக்க மட்டுமல்லாமல் முடக்கிடவே இந்த சதி திட்ட தண்டனையை ஆங்கிலேயே அரசு அமலாக்கியது.
போலி வழக்கு, உண்மையற்ற குற்றச்சாட்டுகள் எல்லாவற்றையும் அவர் மீது இறக்கி, இரக்கமற்ற தண்டனையையும் தீர்ப்பாக இயற்றியது ஆங்கில அரசு.
சிறையில் கடுமையான வேலைகளை செய்ய வைத்தனர். மிகுந்த செல்வந்தர் குடும்பத்தில் பிறந்த வ.உ.சி.,யின் கை, கால்களில் விலங்கிட்டனர்.
சணல் நூற்றார்; செக்கிழுத்தார். ஆங்கிலேயன் வதைத்தெடுத்தான். அவருடைய உடம்பு ஓடாய் தேய்ந்தது. கேரளாவின் கண்ணனூர் சிறைக்கு மாற்றப்பட்டார். அங்கே சிறை கைதிகளுக்கு ஒரு வித்தியாசமான தண்டனை கொடுக்கப்பட்டது.
கைதிகளை கம்பளியால் போர்த்தி போலீசார் அடித்தனர். எண்ணற்ற கொடுமைகளை அனுபவித்தே இந்தியாவின் சுதந்திரத்தை பெறுவதற்கு காரணமானார் வ.உ.சி.
வ.உ.சியை மறக்கலாமா?
செப்., 5 ஆசிரியர் தினம் சரி. தன் வாழ்வை தேச விடுதலைக்காக வாழும் ஒவ்வொரு நொடியையும் அர்ப்பணித்த வ.உ.சிதம்பரனார் என்னும் தன்னிகரில்லா தமிழரையும் இத்தினத்தில் மறக்காமல் போற்றி அவரின் சேவைக்கு மாண்பு சேர்ப்போம்!
இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்!
கல்வி என்பது மிக, மிக இன்றியமையாதது. இப்பொழுதல்ல, எப்போதுமே அது உண்மை. இப்போது மட்டுமல்ல எப்போதுமே கல்விக்கான பாடுகள் நிறையவே உண்டு. கல்வி மறுக்கப்பட்டவர்கள்; கல்வி அனைவருக்கும் வேண்டும் என குரல் கொடுத்தவர்கள். இவர்களை மறந்து கல்விப்பணி கிடையாது.
நாம் ஆசிரியர் தினமான நிகழ்வு நடக்கும் இந்த வாரத்தில் அதிகம் அறியப்படாத பெண் ஆசிரியரின் மேன்மையை படித்து நெகிழ்வோம்.
மகாராஷ்டிராவில் உள்ள நைகான் என்ற சிற்றூரில் 1831ம் ஆண்டு சாவித்ரிபாய் புலே பிறந்தார். இவர் பள்ளியில் படிப்பதற்கு சமூகத்தில் எதிர்ப்பு கிளம்பியதால், வீட்டிலேயே கல்வி கற்றார்.
இவருக்கு சிறுவயதிலேயே ஜோதிராவ் புலேவுடன் திருமணம் நடைபெற்றது. சமூக சீர்திருத்தவாதியான ஜோதிராவ், மனைவி சாவித்ரியையும் தனது போராட்டங்களில் இணைத்துக் கொண்டார்.
இவர்கள் இருவரும் சேர்ந்து பல சீர்திருத்த பணிகளில் ஈடுபட்டனர். ஆசிரியப் பயிற்சியை நிறைவு செய்த சாவித்ரிபாய், புனேயில் முதல் தொடக்க பள்ளியை தொடங்கி, அதன் தலைமை ஆசிரியையாக பொறுப்பேற்றார்.
இதற்கு பல எதிர்ப்புகள் தோன்றினாலும், மனம் தளராமல், கல்வி பணியை தொடர்ந்தார்.
ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கல்வி போதித்தார். இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் என்ற புகழை பெற்றார். மாணவர்களுக்கு படிப்புடன், தொழில் பயிற்சியையும் அளித்தார்.
ஆதரவற்ற குழந்தைகளுக்காகவும், கணவரை இழந்த பெண்களுக்கும் நல்வாழ்வு இல்லங்களை நடத்தினார்.கல்வியாளராக மட்டுமல்லாமல் நவீன பெண்ணியத்தின் முன்னோடியாகவும் சாவித்ரிபாய் திகழ்ந்தார்.
பெண் விடுதலை, சமூக அங்கீகாரம் போன்றவை பற்றி பெண்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த, 'மஹினா சேவா மண்டல்' என்ற பெண்கள் சேவை மையத்தை 1852ம் ஆண்டு தொடங்கி அரும்பாடுபட்டார்.
தீண்டாமை, குழந்தை திருமணம், உடன் கட்டை ஏறுதல் உள்ளிட்ட சமூக அநீதிகளுக்கு எதிராக போராடினார். பஞ்ச காலத்தில் ஏற்பட்ட நெருக்கடிகளை போக்குவதற்கு தமது கணவரோடு கடுமையாக உழைத்தார்.
மக்களின் துயரங்களை தீர்ப்பதற்கான பல்வேறு ஆலோசனைகளையும் முன் வைத்தார்.
கணவரின் மறைவுக்கு பிறகும், சமூக பணிகளை தொடர்ந்த சாவித்ரிபாய் சிசுக்களை கொல்வது, பெண்கள் தற்கொலை செய்து கொள்வது போன்றவற்றை தடுக்கும் நோக்கில், 'பால் ஹத்யா பிரதிபந்தக் கிருஹா' (சிசுக்கொலைத் தடுப்பு இல்லம்) ஒன்றையும் தொடங்கினார்.
இவர் எழுதிய கவிதை நூல் 1892ல் வெளிவந்தது. இயற்கை, சமூகம், வரலாறு, கல்வி, பெண் உரிமை, தீண்டாமை, ஆகிய அனைத்து விஷயங்கள் பற்றியும் கவிதை எழுதினர். சாவித்ரிபாய் கல்வியின் தேவை, சாதி எதிர்ப்பு ஆகிய கருத்துக்களை வலியுறுத்தும் வகையில் கவிதை மலர்கள் என்ற நூலை வெளியிட்டார்.
66 வயதானபோது 1897ம் ஆண்டு அவர் இறந்தார். இவரது நினைவாக மத்திய அரசு, 1998ம் ஆண்டு தபால்தலை வெளியிட்டது. சமூக மறுமலர்ச்சிக்காக பாடுபட்ட சாவித்ரிபாயின் சாதனைகள் வரலாற்றில் எப்போது பெரும் மரியாதையுடன் நிலைத்து நிற்கும்.