தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/இளஸ்... மனஸ்...

இளஸ்... மனஸ்...

இளஸ்... மனஸ்...


PUBLISHED ON : பிப் 17, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 17, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்புள்ள ஜெனி ஆன்டிக்கு, ------- எழுதுவது. நான் +2 முடித்துவிட்டு, 'கார்மென்ட் ஷாப்'பில் பணிபுரியும் மாணவன். அப்பா இல்லாததால் குடும்ப சூழ்நிலையின் காரணமாக வேலைக்கு வந்து விட்டேன். எனக்கு நிறைய படித்துவிட்டு உயர்ந்த வேலையில் அமர வேண்டும் என்று ஆசை. ஆனால், என் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே என்று நினைத்து தினம் தினம் கண்ணீர் விடுகிறேன்.

இந்த வேலையில், ஐந்து ஆண்டுகளாக பணிபுரிவதால், இதன் சூட்சுமங்களை நன்கு அறிந்துள்ளேன். ஒரு சிறு முதலீட்டில், 'கார்மென்ட்ஸ் பிஸினஸ்' செய்ய வேண்டும் என மிகவும் ஆசையாக உள்ளது. எனக்கு வாழ்வில் எதையாவது சாதிக்க வேண்டும் என்பது வெறி.

சும்மா எல்லாரையும் போல் வேலைக்கு போனோம் சம்பாதித்தோம், இப்படி ஒரு வட்டத்துக்குள் என் வாழ்க்கை முடிந்து விடுவதை நான் விரும்பவில்லை... இந்த உலகத்தில் எதையாவது சாதித்து பெயர் எடுக்க விரும்புகிறேன். நான் எடுத்திருக்கும் முடிவு சரியானதா... என்னாலும் இந்த உலகத்தில் சாதிக்க முடியுமா என்று சொல்லுங்கள் ஆன்டி.

இதை ஏன் உங்களிடம் கேட்கிறேன் என்றால், பிரச்னைகள் என்று உங்களிடம் கேட்கும் குட்டி குழந்தைகள் முதல் பெரியவர் வரை, அவரவருக்கு ஏற்ற ஆலோசனைகளை அருமையாக வழங்குகிறீர்கள். அதனால் தான் உங்களிடம் கேட்கிறேன்.

அம்மா, நண்பர்கள், உறவினர் மற்றும் யாரிடம் சொன்னாலும், 'இது தேவையா உனக்கு... ஒழுங்கா வேலையை பாரு' என திட்டுகின்றனர். நீங்களாவது என் ஆசையை புரிந்து கொண்டு எனக்கு தகுந்த ஆலோசனை கூறுங்களேன் ஆன்டி.

மகனே... உன் ஆதங்கம் எனக்கு புரிகிறது. முன்பெல்லாம் நன்கு படித்தவர்கள் தான் சம்பாதிக்க முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால், இப்போது அப்படியல்ல. இந்த பரந்து விரிந்த உலகில், எத்தனையோ வழிகள் உள்ளன. மனம் இருந்தால் மார்க்கம் உண்டு. உண்மையாகவே உன் தொழிலில் உனக்கு தீராத தாகம், வெறி, இருக்குமானால் தைரியமாக செய்.

தொழில் துவங்குவதற்கு முன் அச்சம் ஏற்படுவதற்கான காரணமே, வெற்றி பெறுவோமா, ஒருவேளை தோல்வி யடைந்து விட்டால் என்ன செய்வது... எல்லாரும் திட்டுவார்களே என்ற எண்ணம் தான்.

இந்த எண்ணத்தை, நீ முதலில் தூக்கி எறிய வேண்டும். 'நிச்சயமாகவே சாதிப்பேன்!' என்ற உறுதி வேண்டும். அத்துடன், எந்த ஒரு தொழிலும் உடனடியாக வெற்றி கனியை கொடுத்து விடுவதில்லை.

இந்த பயணங்களில் பல தடை கற்களை சந்தித்த பிறகே, வெற்றி என்ற இலக்கை நாம் எட்ட முடியும். உனக்கு ஒருவரின் கதை சொல்கிறேன்... அதன் பின் தொழில் செய்வதா, வேண்டாமா என்பதை நீயே முடிவு செய்துகொள்.

அருண் ஐஸ்க்ரீம் மற்றும் ஆரோக்கியா பால் உள்ளிட்ட, பால் பொருட்களில், இந்திய அளவில், எல்லாரும் கேட்டு வாங்கும்படியான தனி முத்திரையை உருவாக்கியவர், ஆர்.ஜி. சந்திர மோகன்; பி.யூ.சி., பெயில். ஆனால், இவரது இன்றைய ஆண்டு வருமானம், 3,000 கோடிக்கும் மேல்.

இந்த நிறுவனத்தை இவர், வெறும், 13 ஆயிரம் ரூபாயில் தான் துவக்கினார். சின்ன வயதில் இவருக்கு ஐஸ் க்ரீம் என்றால் ரொம்ப பிடிக்கும். இதை வாங்குவதற்காக சில்லறை காசுகளை, சேர்த்து வைப்பாராம்.

அந்த ஆசை தான், பிற்காலத்தில், 'அருண் ஐஸ் கிரீம்' உருவாக காரணமாக இருந்தது. அப்போது, இவர் வயது 21. முதலில் தள்ளு வண்டியில் தான், 10 காசிற்கு, 'ஐஸ்க்ரீம்' விற்றார். தட்டுத் தடுமாறி முன்னேறிக் கொண்டிருந்தார். அப்போது சந்தையில் இருந்த மிகப்பெரிய நிறுவனங்களின் போட்டியை சமாளிக்க, 'மார்க்கெட்டிங்' கல்வியை கற்று கொண்டார். அதன்பின் இவரது வியாபாரத்தில் ஏறுமுகம் தான்.

'ஐஸ் க்ரீம்' செய்வதற்கு தேவையான பாலை கொள்முதல் செய்தவர், படிப்படியாக பால் விற்கவும் துவங்கினார். 1995ல், 'ஆரோக்கிய பால்' உருவானது.

அருமையான விளம்பரத்தின் மூலம், 'ஆரோக்கியா' பாலை மக்களிடம் கொண்டு சென்றார். இன்று ஆரோக்யா பால் மூலமே இவரது ஆண்டு வருமானம், 1,400 கோடிக்கு மேல்.

'மகன் பி.யு.சி., யில் பெயிலாகி விட்டானே...' என்று கவலைபட்ட அப்பாவுக்கு, தொழிலில் வெற்றி பெற்று, அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகம் உட்பட பல பல்கழைக் கழகங்களில் உரையாற்றி, அப்பாவை மகிழ்ச்சியில் திக்குமுக்காட செய்து விட்டார் சந்திர மோகன்.

எனவே, உழைப்பு + தைரியம்+ காலத்திற்கேற்ற திட்டங்கள் இருந்தால் நீயும் சாதிக்கலாம் மகனே... முயற்சி செய்.

உங்கள் நலனில் அக்கறை கொள்ளும்,

ஜெனிபர் பிரேம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us