
அன்புள்ள பிளாரன்ஸ்...
என் வயது 35; பன்னாட்டு நிறுவனம் ஒன்றில், நல்ல சம்பளம் தரும் பணியில் இருக்கும் பெண் நான். நீண்ட நாளைக்கு பின், என் சம வயதுள்ள நண்பனை சந்தித்தேன். அவனும், பிரபல நிறுவனத்தில், தாராளமாக சம்பளம் வாங்கும் பணியில் இருக்கிறான். இருவரும் குசலம் விசாரித்துக் கொண்டோம்.
பின், அவனிடம் சில கேள்விகளை அடுக்கினேன்.
'கல்யாணம் ஆகிருச்சா...'
'மூத்த குழந்தைக்கு எத்தனை வயசு?'
'இரண்டாம் குழந்தைக்கு எத்தனை வயசு?'
'மூன்றாவது குழந்தை எப்ப...'
இப்படி மூச்சு முட்ட கேட்டதும் பதறி போனான் நண்பன்.
பின், நிதானமாக, 'யாரிடமும் உங்களுக்கு எத்தனை குழந்தைன்னு கேட்காதே... ஒரே ஒரு குழந்தை வெச்சுருக்கிற பெற்றோருக்கு, நீ கேக்குற கேள்வியால் குற்றவாளி கூண்டுல நிக்கிறது போல தோணும்... துடிதுடிச்சு போவாங்க...' என்றான்.
நீங்களே சொல்லுங்க சகோதரி... நான் கேட்டதுல ஏதும் தப்பு உண்டா... நீண்ட நாட்களுக்கு பின் சந்திக்கிற நண்பர்களை பார்த்து வேறு என்ன கேட்க முடியும். எது பற்றி பேச முடியும்.
இப்படிக்கு
சாரதி கிருஷ்ணசாமி
அன்புள்ள அம்மா...
எனக்கு தெரிந்து இரு வகையான நோய்க்குறிகள் உள்ளன.
ஒன்று: குழந்தைகள் எதுவும் இல்லாத நோய்க்குறி. உடல் தகுதி இருந்தும், ஒரு குழந்தை கூட பெற்றுக்கொள்ள மனதளவில் முன்வராத தம்பதியருக்கு இது உண்டு.
இரண்டு: ஒற்றைக்குழந்தை நோய்க்குறி. குழந்தை பெற்றுக் கொள்ளும் பெற்றோரில், 30 சதவீதம் பேருக்கு இது உள்ளது. இந்த சதவீத அளவு இடம், கலாசாரம், பொருளாதார காரணிகளை பொறுத்து ஏறும் இறங்கும்.
இந்தியாவில், 30 ஆண்டுகளுக்கு முன், ஒவ்வொரு குடும்பத்திலும், சர்வசாதாரணமாக, எட்டு அல்லது ஒன்பது பிள்ளைகள் இருப்பர். சில குழந்தைகளின் பெயர், படிக்கும் வயது கூட பெற்றோருக்கு தெரிந்திருக்காது. தன் குழந்தையுடன் விளையாடிக் கொண்டிருக்கும், பக்கத்து வீட்டு குழந்தை கூட, தன் குழந்தை தான் என்கிற காட்சி பிழை போன தலைமுறையில் பல பெற்றோருக்கு இருக்கும்.
மூத்தவன், நடுவுல உள்ளவன், கடைக்குட்டி என்ற காரண பெயர்களும் குழந்தைக்கு இருக்கும்.
இப்போது, ஒவ்வொரு குடும்பத்திலும், அபூர்வமாக ஒன்று அல்லது இரண்டு குழந்தைகள் மட்டுமே பெறுகின்றனர்.
காரணம்...
* கணவன், மனைவி இருவரும் வேலைக்கு செல்கின்றனர்
* ஒரு குழந்தை பெற்று வளர்த்து ஆளாக்கும் செலவு குறைந்தபட்சம், 30 - 50 லட்சம் ரூபாய் வரை ஆகலாம்
* பல இடங்களில் கோடிகளை தாண்டும்
* ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகளை பெற்று கடனாளி ஆகவோ, தங்களது சுயதேவைகளை இழக்கவோ பெற்றோர் தயாராக இல்லை.
காலமெல்லாம் குழந்தை வளர்ப்பு சிறைப்படுத்தி விட கூடாது என பயப்படுகின்றனர் பெற்றோர். அதனாலே, குடும்பக் கட்டுபாட்டு உபகரணங்கள் ஏதுமின்றி, இரண்டாம் குழந்தை பெறுதலை நிரந்தரமாக தள்ளி போட்டு விடுகின்றனர். தாம்பத்யம் சாராத வெளி பொழுது போக்குகள் அதிகமாக முக்கியத்துவம் பெறுகிறது.
ஒரு மகிழ்ச்சியான குடும்பத்துக்கு நான்கு குழந்தைகள் தேவை என, ஆஸ்திரேலியாவில் உள்ள எத்கோவன் பல்கலைக்கழக ஆய்வு ஒன்று கூறுகிறது. ஒற்றைக்குழந்தைக்கு உறவுமுறை இல்லாமல் போய் விடுகிறது.
யாரிடமும் குசலம் விசாரித்தாலும், உங்கள் குழந்தைக்கு என் அன்பு விசாரிப்புகள் என வாழ்த்தி விடைபெறுங்கள்!
- அள்ளக்குறையா அன்புடன், பிளரான்ஸ்.