
அன்புமிக்க அம்மா...
என் வயது, 10; பள்ளியில், 5ம் வகுப்பு படிக்கும் சிறுமி. சமீபத்தில், என் பெரியப்பா மகளுக்கு திருமணம் நடந்தது.
அதில் பங்கேற்ற போது, சில காட்சிகளைப் பார்த்தேன். அவற்றில் சில என் மனதில் பதிந்து விட்டன.
குறிப்பாக, மணப்பெண்ணும், மணமகனும், மணமகள் வீட்டுக்கு வந்த போது, வாசலில் நிறுத்தி ஆரத்தி எடுத்தனர். ஆரத்தி எடுத்தவர்களுக்கு மாப்பிள்ளை கத்தையாக, 500 ரூபாய் நோட்டுகளை அள்ளிக் கொடுத்தார்.
அதை ஏன் கொடுத்தார் என்பது வியப்பாக இருந்தது. அப்படி கொடுப்பது வழக்கமாக இருந்தாலும், ஆரத்தி எடுப்பதால் என்ன நன்மை கிடைக்கும். இது குறித்து, என் குடும்பத்தில், பெரியவர்களிடம் விபரங்களை பெற முயன்றேன்.
அவர்களோ, 'நீ சின்னப்பிள்ளை... இதெல்லாம் தெரிந்து என்ன செய்யப் போகிறாய்...' என்று மறுக்கின்றனர்.
ஆரத்தி குறித்த விபரங்களை தெரிந்து கொள்ள விரும்புகிறேன். அது பற்றி எடுத்துரைக்க வேண்டுகிறேன்.
இப்படிக்கு,
- அ.ஜனப்ரியா.
அன்பு மகளுக்கு...
உன் கேள்வி மிகவும் நியாயமானது. எதையும் கேட்டு தெரிந்து கொள்ளும் ஆர்வத்துக்கு என் பாராட்டுகள்.
சரி... உனக்கான விடையைப் பார்ப்போம்...
ஆரத்தி என்பது ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட தீபங்களை ஏற்றி வழிபடும் முறை. ஆரம் என்றால் வட்டம் என பொருள். ஒளி பொருந்திய வட்டத்தையே இச்சொல் குறிக்கிறது. சமஸ்கிருத மொழியில், ஆரத்தியை, 'ஆரத்திக்யம்' என்பர்.
இது தவிர, 'மகாநீராஞ்சனா' என்றும் சொல்வர். நெய் அல்லது எண்ணெய் ஊற்றி, பூக்களால் அலங்கரித்த விளக்குகளே ஆரத்திக்கு பயன்படுகிறது. இது, நிலம், வெப்பம், நீர், காற்று, ஆகாயம் போன்ற ஐம்பூதங்களை குறிக்கும்.
தீப ஆரத்தியால், புலன்களை முன்னிறுத்தி இறையருள் பெறும் வாய்ப்பு ஏற்படுகிறது.
ஒரு இடத்தில் பூஜை அல்லது பஜனை போன்ற நிகழ்வு முடியும் போது, ஒன்றில் இருந்து, ஐந்து முறைகள் ஆரத்தி காட்டுவர்.
வெள்ளி, பித்தளை, தாமிர உலோகத்தால் ஆரத்தி விளக்கு, தட்டு உருவாக்கப்படுகிறது. அரிசி மாவு, மண், பஞ்சு அல்லது பருத்தியிலான திரி, சில சமயம் கற்பூரம் போன்றவையும் ஆரத்திக்கு பயன்படுத்தப்படுகிறது. சில இடங்களில் நெய் தீபம் பயன்படுத்துவர்.
நீண்ட பயணத்தை முடித்து வரும் குடும்பத்தினருக்கும், திருமணம் முடித்து வரும் மணமக்களுக்கும், மகப்பேறுக்கு பின், தாய் - குழந்தையை வரவேற்கவும் ஆரத்தி எடுக்கப்படுகிறது.
ஆரத்தி தட்டில், மஞ்சள், சுண்ணாம்பு கரைத்து உருவாக்கப்பட்ட சிவப்பு திரவம் இருக்கும். இவை நோய் கிருமிகளை அழிக்கும் திறன் உடையவை. ஆரத்தியின் நோக்கம் திருஷ்டி கழிப்பதும், தீமையை போக்குவதும் தான்.
கொழுந்தி ஆரத்தி, கஜபதன் விநாயக ஆரத்தி, கொங்கு ஆரத்தி, கணபதி ஆரத்தி, மணமகன் ஆரத்தி, அம்மன் ஆரத்தி, நவராத்திரி ஆரத்தி, கங்கா ஆரத்தி என, இதில் பல வகைகள் உள்ளன. கங்கா ஆரத்தியை, 20 - 25 வயதுள்ள வாலிபர்கள் மேற்கொள்வர்.
ஆரத்தி எடுத்தவருக்கு, மாப்பிள்ளை தட்சணை கொடுப்பது கவுரவ பிரச்னை. மாப்பிள்ளை கொடுக்கும் தொகையை வைத்தே அவர் கஞ்சத்தனம் உள்ளவரா, அள்ளிக் கொடுக்கும் மனம் உள்ளவரா என கண்டுபிடித்து விடுவர்.
பல சமயத்தவரிடமும் ஆரத்தி எடுக்கும் வழக்கம் உள்ளது. இது ஒரு வகையில் நம் நாட்டின் பன்முக கலாசாரம் என்றே புரிந்து கொள்ள வேண்டும்.
- அள்ளக்குறையா அன்புடன், பிளாரன்ஸ்.