தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/இளஸ்... மனஸ்... (16)

இளஸ்... மனஸ்... (16)

இளஸ்... மனஸ்... (16)


PUBLISHED ON : அக் 11, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 11, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கவலைகளை தீர்த்து வைக்கும் அக்கா மெடோசுக்கு...

என் வயது, 38; இல்லத்தரசி; கிராம நிர்வாக அதிகாரியாக பணிபுரியும் என் கணவருக்கு வயது, 40; எங்கள், 12 வயது மகள், 6ம் வகுப்பு படிக்கிறாள்.

அவள் படிப்பில் சுமார் ரகம் தான்; மேக்கப் போட்டுக் கொள்ள ஆர்வம் காட்டுவாள். பாடுவாள், ஆடுவாள்; அடிக்கடி மெஹந்தி போட்டுக் கொள்வாள். சினிமா நடிகைகளின் அனைத்து பாவனைகளும் அத்துப்படி.

வகுப்பு ஆசிரியைகள், தோழியர் பற்றி கிசுகிசுக்களை பரப்புவாள்; தெருவில் செல்லும் பெண்களின் ஆடை பற்றி கிண்டல் செய்வாள்; வித விதமான அசைவ உணவுகளை விரும்பி சாப்பிடுவாள்.

இதெல்லாம் பிரச்னையே இல்லை அக்கா...

அவளுக்கு, அழகிய கை கடிகாரம் வாங்கிக் கொடுத்திருக்கிறோம்; இடது மணிக்கட்டில் கட்டுவாள்; ஆனால், நேரம் பார்க்க தெரியாது. இரவு, நள்ளிரவு, அதிகாலை, நண்பகல், மாலை என, கால வித்தியாசங்கள் புரியாது.

திசைகள் பற்றிய அறிவும் இல்லை; நுாறுக்கு மேல் எண்ண திணறுவாள். தட்பவெப்ப நிலை அளவைகள் பற்றியும் தெரியாது.

'நீ எவ்வளவு உயரம்...' என கேட்டால், 'ஒரு, 10 மீட்டர் இருப்பேனோ...' என, சிரிப்பாள்.

திடப்பொருளை, துாரங்களை அளக்கும் விதம் எதுவும் தெரியாது. இது குறித்து கோபித்தால், 'இதெல்லாம் தெரிஞ்சு, என்னம்மா செய்யப் போறேன்... முழிச்சு இருக்குற நேரமெல்லாம் பகல்; துாங்கிற நேரமெல்லாம் ராத்திரி... அவ்வளவு தான்...' என்கிறாள்.

பொது அறிவில், சூன்யமாக இருக்கும் இவளை எப்படி திருத்துவது...

மகளின் நடத்தையால் தடுமாறும் சகோதரி...!

பெற்றோர், குழந்தைகளுக்கு முதல் ஆசிரியர்கள்; குழந்தைகளை, கூடுதல் நன்கொடை கொடுத்து ஆடம்பரமான தனியார் பள்ளிகளில் சேர்க்கின்றனர். பள்ளியில், படிப்பு வராவிட்டால், சிறப்பு வகுப்பில் சேர்க்கின்றனர். சிறப்பு வகுப்பில் படிப்பு வரவில்லை என்றால், தனி பயிற்சி வகுப்புக்கு அனுப்புகின்றனர்.

அவர்களை பொறுத்தவரை, 'படிப்பை, பணம் கொடுத்து வாங்குவோம்; நாம் சொல்லி தர வேண்டியதில்லை. வகுப்பு ஆசிரியையோ, தனி வகுப்பு ஆசிரியையோ தான் கற்றுத்தர வேண்டும்...' என்ற எண்ணத்துடன் இருக்கின்றனர்.

குழந்தைகள், பாடத்தில் ஏதாவது சந்தேகம் கேட்டால், 'அதை எல்லாம், உங்க வகுப்பு ஆசிரியையிடம் கேள்...' என விரட்டுகின்றனர். குழந்தைகள், மதிப்பெண் பட்டியலை நீட்டினால், அதை முழுவதும் படித்து பார்க்காமல், குருட்டுத்தனமாக கையெழுத்து போடுகின்றனர். மொத்தத்தில், அவர்கள் ஒரு கிரகத்திலும், குழந்தைகள் மற்றொரு கிரகத்திலும் வசிப்பது போன்ற பாவனையில் வாழ்கின்றனர்.

இது, மிகவும் ஆபத்தான போக்கு.

ஏட்டுக் கல்வியை, பள்ளியும், பெற்றோரும், தோளாடு தோள் நின்று கற்றுத்தர வேண்டும். வாழ்க்கை கல்வியை, அடிப்பட்டு, மிதிப்பட்டு, அந்தந்த குழந்தைகளே கற்றுக் கொள்ளும்.

ஆண்டிற்கு, எத்தனை நாட்கள்; ஒரு மணி நேரத்தை, எத்தனை நிமிடங்களாக, ஒரு நிமிடத்தை எத்தனை நொடிகளாக பிரிப்பர்; ரயில்வே நேரம் என்றால் என்ன; கை கடிகாரத்தில் நேரம் பார்ப்பது எப்படி...

இப்படி, வாழ்க்கையில் அன்றாடம் புழங்கும் விஷயங்களை, சொல்லித் தர வேண்டும். கால்குலேட்டருக்கு அடிமையாகாமல் இருக்க, 16ம் வாய்ப்பாடு வரை மனப்பாடம் செய்ய கற்றுத் தர வேண்டும்.

இது போன்ற பொறுப்புகளை பெற்றோர் தட்டிக்கழிக்ககூடாது; கல்வி என்பது, பணம் கொடுத்து வாங்கும் பொருளல்ல; இதயத்தால், மூளையால் உள்வாங்குவது...

மணமாகி புகுந்த வீட்டுக்கு போகும் பெண்ணுக்கு, தேவையான சீர்வரிசைகளை, கொடுத்து அனுப்பும் தாய் போல, செயல்பட வேண்டும் பெற்றோர்.

நாட்டின் அடிப்படை விஷயங்களையும், அரசியல் வழிமுறைகளையும், சட்ட திட்டங்களையும், நீதித்துறை செயல்பாடுகளையும் விவரித்து, பொறுப்புள்ள குடிமக்களாக்குதல், பெற்றோரின் தலையாய கடமை.

பெண்ணாக இருந்தால், ஆணை மதிக்கவும், ஆணாக இருந்தால், பெண்ணை மதிக்கவும் கற்றுத் தரவேண்டும்.

சகோதரி... உன் மகளுக்கு, பொதுஅறிவை, குறள் போல சுருக்கமாக, சுவாரசியமாக கற்றுக்கொடு; ஆறு மாதத்திற்குப் பின், உன் மகள், ஆயிரம் பேருக்கு நேரம் சொல்வாள்.

வாழ்த்துகளுடன், மெடோஸ்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us