தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/டூ இன் ஒன்!

டூ இன் ஒன்!

டூ இன் ஒன்!


PUBLISHED ON : அக் 11, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 11, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மதிப்புக் குறைவு!

வெளிநாட்டில் இருந்து மாமா வந்திருப்பதை அறிந்தான் அமுதன். மகிழ்ச்சியுடன், துள்ளிக் குதித்தபடி, அவர் அருகே சென்றான்.

'என்ன படிக்கிறாய்...' என்று அன்புடன் கேட்டார்.

'பத்தாம் வகுப்பு... வகுப்பில் முதல் மாணவனாக இருக்கிறேன்...'

'மிகவும் நல்லது... வா, கடைத்தெருவிற்குப் போவோம்; உனக்குப் பிடித்த பொருட்களை வாங்கித் தருகிறேன்...'

இருவரும், கடைத்தெருவிற்குச் சென்றனர். ஒரு கடையில் அழகான பொம்மை ஒன்று இருந்தது.

'மாமா... அந்தப் பொம்மையை வாங்கித் தாருங்கள்; அதை வைத்து மகிழ்ச்சியாக விளையாடுவேன்...' என்றான்.

வெறுப்படைந்த மாமா, 'பொம்மையை வைத்து விளையாட நீ என்ன குழந்தையா... உன் மதிப்பை ஏன் குறைத்து கொள்கிறாய்... படிப்பதற்குப் புத்தகங்களையோ, விளையாடுவதற்குக் கால் பந்தோ, கிரிக்கெட் மட்டையோ கேட்டு இருக்கலாம். மகிழ்ச்சியுடன் வாங்கிக் கொடுத்து இருப்பேன். தகுதிக்குக் குறைவானதை விரும்புகிறாயே...' என்று கோபத்துடன் கூறினார்.

'என்னை மன்னியுங்கள்; இனி என் மதிப்பைக் குறைக்கும் செயலை செய்ய மாட்டேன்...' என்று பணிவுடன் கூறினான்.

அவரது கோபம் தணிந்தது.

குட்டீஸ்... வயதுக்கு ஏற்ப, தகுதியை வளர்த்துக்கொள்ள முயலுங்கள்.

சோம்பேறி காக்கா!

வீட்டுத் திண்ணையில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார் ஒரு விவசாயி; அவரது நாய், 'எப்போது சாப்பாடு தருவார்' என்று, ஆவலுடன் காத்திருந்தது.

வீட்டு கூரை மீது, பறந்த ஒரு காகம், உணவருந்திக் கொண்டிருந்த விவசாயியைப் பார்த்து விட்டது. திண்ணை ஓரமாக பறந்து, 'விவசாயியின் கையில் இருந்து, சோற்றுப் பருக்கைககள் விழுமா' என, ஆவலுடன் காத்திருந்தது.

விவசாயி, உணவருந்தி எழுந்தார். தட்டில், சிறிதளவு சோறு இருந்தது. அதை, நாய் முன் வைத்தார்.

காகமோ ஏமாற்றத்துடன், 'ஐயா... நாய்க்கு மட்டும் சோறு வைத்து, என்னை பட்டினியாக வீட்டீரே...' என கேட்டது.

'உனக்கு இறக்கை இருக்கிறது; எங்கு வேண்டுமானாலும் பறந்து இரை தேடலாம். நாயோ, இந்த இடத்தை விட்டு எங்கும் செல்லாது. காவல் பணி செய்து, என்னை நம்பி இருக்கிறது; அதனால் தான், அதற்கு சோறு வைத்தேன்...' என்றார்.

காகம், தவறை உணர்ந்தது. சோம்பியிருந்தது தவறு என, இரை தேடப் பறந்தது.

குட்டீஸ்... திறன் அறிந்து, பணிகளை செய்ய பழகுங்கள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us