PUBLISHED ON : நவ 19, 2022

அன்பு பிளாரன்ஸ் ஆன்டி...
நான், 14 வயது சிறுமி; 9ம் வகுப்பு படிக்கிறேன். பெற்றோர் இருவரும் வேலைக்கு செல்கின்றனர். என் எட்டு வயது தம்பி, 3ம் வகுப்பு படிக்கிறான்.
எங்களுக்கு ஒரு தாய்மாமா இருக்கிறார். ஒரு அரசியல் தலைவரிடம் உதவியாளராக பணிபுரிகிறார். அவர் ஒரு கருத்து முரடர். செல்லக்குட்டி என்பதை கூட, பற்களை, 'நற...நற...'வென கடித்தபடி தான் கூறுவார்.
சமீபத்தில், என், 14ம் பிறந்தநாளை கொண்டாடினேன். பிறந்தநாள் பரிசாக மேஜையில் சுழலும், பூமி உருண்டையும், உலக வரைப்படத்தையும் கொடுத்தார் மாமா.
'உன் நண்பர்களுக்கு பிறந்த நாள் என்றால், பூமி உருண்டை வாங்கி கொடு...' என்கிறார்.
'வரவேற்பறையில் பூமி உருண்டை இல்லாத வீடு முட்டாள் வாழும் வீடு...' என நெற்றிக்கண் திறக்கிறார். அவர் கூறுவது உண்மையா ஆன்டி.
இப்படிக்கு,
ரா.பாலா.
அன்பு செல்லத்துக்கு...
உன் மாமா கூறிய கருத்துக்கு வருவோம்... டாக்டரேட் வாங்கியவரிடம் இந்திய பெருங்கடல் எங்கிருக்கிறது; சூயஸ் கால்வாய் எந்தெந்த கடலை இணைக்கிறது; லட்சத்தீவுகள் எங்கிருக்கிறது; ஆசியா கண்டத்தில் என்னென்ன நாடுகள் உள்ளன; இந்தியாவில் நாம் வசிக்கும் இடம் எங்கிருக்கிறது.
இப்படி கேள்விகள் கேட்டு பார்... ஒன்றும் தெரியாமல் முழிப்பர்.
காரணம், அனைவரும் கிணற்றுத் தவளைகளாக இருப்பது தான். உலகில், எத்தனை நாடுகள் இருக்கின்றன; உலகின் பெருங்கடல்கள் எது; அமேசான் காடு எந்த நாட்டில் உள்ளது; உலகில் எத்தனை முஸ்லீம் நாடுகள் உள்ளன... இப்படி எல்லா கேள்விகளுக்குமான பதில் விரல் நுனியில் இருக்க வேண்டும்.
பூகோள ரீதியாய் எங்கு நிற்கிறோம் என்பதை தெள்ள தெளிவாக உணர வேண்டும்.
தினமும், உலக உருண்டையையும், உலக வரைப்படத்தையும் பார்த்தபடியே இருந்தால், கீழ்கண்ட பாசிடிவ் விஷயங்கள் கிடைக்கும்.
உலகில், நாம் மட்டுமல்ல, 750 கோடி மக்கள் இருக்கின்றனர். நாடுகளுக்கிடையே போட்டிருக்கும் கோடு அற்பமானது. நிறங்கள், மொழிகள், இனங்கள், மதங்கள், கலாசாரங்கள் தாண்டி, பூமி என்ற தேசத்தின் குடிமகன் என்ற விசாலமான பார்வை கிடைக்கும்.
விண்வெளி பவுதிகம், கடலியல், மானுடவியல், உலக சுற்றுலா, கப்பல் கட்டுமானம், சரக்கு கப்பல் போக்குவரத்து பற்றிய கல்வியை கற்க நாட்டம் உருவாகும்.
கொலம்பஸ், வாஸ்கோடாகாமா, அமெரிக்கோ வெஸ்புகி, யுவான் சுவாங், மார்கோ போலோ, பெர்டினான்ட் மெக்கல்லன், ஜேம்ஸ் குக், இப்னு பாதுஷா போன்ற பல உலக புகழ் பெற்ற யாத்ரீகர்களின் வாழ்க்கை வரலாற்றை தேடி படிக்கும் உத்வேகம் பிறக்கும்.
பால்வெளி பிரபஞ்சத்தில், பூமி உருண்டை ஒரு துாசி. அந்த துாசியில் நாம் ஒரு மைக்ரோ துாசி என்ற உண்மை பிடிபட்டு அகம்பாவமும், ஆணவமும் அழியும்.
'சாரே ஜஹான் சே அச்சா... ஹிந்துஸ்தான் ஹமாரா...' என முகமது இக்பால் எழுதிய உருது கசஸ் கவிதையை பாடி மகிழ்வோம் செல்லம்!
- அள்ளக்குறையா அன்புடன்,
பிளாரன்ஸ்.
