PUBLISHED ON : பிப் 10, 2017

அன்பு சகோதரி ஜெனிபருக்கு, தங்களது ஆலோசனைகளை வாரா வாரம் படித்து வருகிறேன். எனக்கும் தகுந்த ஆலோசனை கூறுவீர்கள் என நம்பி, என் மன பாரத்தை உங்களிடம் இறக்கி வைக்கிறேன்.
என் மகன், +2 படித்து வருகிறான். பொருளாதார ரீதியாக நடுத்தர வர்க்கத்தினர். ஆனால், ஓ.சி., பிரிவில் இருப்பதால், அதிக மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே, நல்ல கல்லுாரியில், விரும்பிய, 'குரூப்' கிடைக்கும்.
என் அண்ணன் மகன்கள், கடந்த ஆண்டு, +2வில், 1,100க்கும் அதிகமான மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். அவர்கள் படிக்கும் பள்ளியில், இரண்டு ஆண்டுகளுமே, +2 பாடத்தை பயிற்சி அளிப்பர். ஆனால், என் மகனின் பள்ளியில் அப்படி செய்யமாட்டார்கள்.
உறவினர் மத்தியில் என் மகன் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளதால், அதிக மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என்ற அழுத்தம் காரணமாக மிகவும், 'டென்ஷன்' ஆகிறான். இரவு, ஒன்பது மணிக்கு மேல் புத்தகம் கையில் இருந்தாலும் தூங்கி வழிகிறான்.
'தூங்காமல் படி!' என்று கூறினால், 'நான் எங்கே தூங்குகிறேன். பாடத்தை மனதிற்குள் படிக்கிறேன்' என்று சொல்லி எரிந்து விழுகிறான்.
அதிகம் திட்டுவதற்கும் பயமாக உள்ளது. ஆனால், மதிப்பெண் குறைந்தாலும் கஷ்டம். என்ன செய்வது என்ற பயத்தில் இருதலை கொள்ளியாய் தவிக்கிறோம். இந்த சூழ்நிலையை எப்படி கையாள்வது என்று சொல்லுங்க சகோதரி...
ஜனவரி மாதம் ஆரம்பித்து விட்டாலே பொதுத்தேர்வு எழுதும் பிள்ளைகளின் பெற்றோர், சந்திக்கும் பிரச்னை தான் இது.
சகோதரனே... நீங்கள் ஒன்றுமே செய்ய வேண்டாம். உங்கள் மகனுக்கு எந்த அழுத்தமும் கொடுக்க வேண்டாம். முடிந்த வரையில் பெற்றோராகிய நீங்கள், ஹெல்த் ட்ரிங், பால் மற்றும் குளுகோஸ் கலந்த லெமன் ஜூஸ் இப்படி கொடுத்து, உங்கள் மகனது ஹெல்த்தை, 'கேர்' பண்ணுங்க. அத்துடன் உங்களது ஆதரவான, அன்பான வார்த்தைகளால் மகனை தைரியப்படுத்துங்க.
காரணம், நீங்கள் எல்லாருமே இப்படி அழுத்தம் கொடுத்தால், பயம், அதிக பட்ச, 'டென்ஷன்' காரணமாக படித்ததை கூட மறந்து விடுவர். கையில் கேள்வித்தாளை வாங்கியவுடனே ஒரு சிலருக்கு பயத்தில் கைகள் நடுங்க ஆரம்பித்துவிடும்.
எழுத முடியாது; கையெழுத்து தடுமாறும். படித்ததை கூட ஒரு சிலர் மறந்து விடுவர். எனவே, உங்களால் முடிந்த வரையில் அவர்களை தைரியபடுத்தி, நம்பிக்கையான வார்த்தைகளை கூறி அனுப்புங்கள். அது அவர்கள் இன்னும் சிறப்பாக செயல்பட உதவும்.
ஒன்பது மணிக்கு தூங்குகிறான் என்றால், அவன் எவ்ளோ நேரம் படிக்கிறான் என்பதை அவ்வப்போது பாருங்க; 10 நிமிடம் ஓய்வு எடுத்து கொண்டு படிப்பது, இன்னும் சிறந்தது.
மகன் படிக்கட்டும் நாம, 'டிவி' பார்ப்போம்; தூங்குவோம் என்றிருந்தால் அவனுக்கு மிகவும் வெறுப்பாகி விடும். நீங்கள் கூட இருந்து, டீ குடிக்க வைப்பது இல்லை படித்து படித்து உடம்பு சூடு தணிய பால் கொடுங்கள். ஞாபக சக்திக்கு பாதாம் பருப்பு கொடுங்கள்.
இப்படி அவன் தூங்காமல் இருப்பதற்கு நீங்களும் தூங்காமல் இருப்பதை பார்க்கும் அவன், தன் பொறுப்பை உணர்ந்து படிப்பான்.
எப்போதும் மற்ற பிள்ளைகளுடன் உங்கள் பிள்ளைகளை, 'கம்பேர்' பண்ணாதீங்க. அவரவர் வாழ்க்கை என்பது வேறு வேறு. நல்ல காலேஜ், நல்ல மார்க்ஸ் வேண்டும் என்று பெற்றோர் எதிர்பார்ப்பதே இன்ஜினியரிங், டாக்டர், 'சீட்'டுக்காகத்தானே!
அந்த காலத்தில் டாக்டர்ஸ், இன்ஜினியர்ஸ், கலெக்டர்ஸ் என்றாலே ஒரு பெரிய விஷயம். அவர்களுக்கு மட்டும் தான் நல்ல வருமானமும், சமூகத்தில் ஒரு, 'ஸ்டேட்டஸ்'யும் இருந்தது.
இன்று அப்படி அல்ல... படித்தவர்கள், படிக்காதவர்கள் அனைவருமே சம்பாதிக்கின்றனர். திறமை இருந்தால் போதும். மெத்த படித்த, பெரிய பதவியில் இருப்பவர்களை விட, மக்கு ப்ளாஸ்திரியாக வகுப்பில் இருந்த மாணவன், இன்று அவர்களை விட அதிகம் சம்பாதிக்கிறான்.
எனக்கு தெரிந்த குடும்ப நண்பர் ஒருவருக்கு இரண்டு பையன்கள். மூத்தவன் படிப்பில் வெகு சுமார்; இளையவன், 'ஸ்கூல் டாப்'பர். இதனால் இளைய மகனுக்கு தான் வீட்டில் சலுகை அதிகம். மூத்த மகன் +2 வில், 'ஜஸ்ட் பாஸ்' தான் செய்தான்; இளையவனோ வழக்கம்போல், 'ஸ்கூல் பர்ஸ்ட்' தம்பியை பெற்றோர் தாங்குவதை பார்த்து பார்த்து, இவன் மிகவும் பாதிக்கப்பட்டான்.
'நாம எதுக்குமே லாயக்கில்லை போலும்... ஏன் தான் பிறந்தோமா தெரியலியே...' என்று நினைத்து, 'காலேஜ் போக மாட்டேன்; வேலைக்கு போகிறேன்...' என்று சொல்லி விட்டான்.
வெறியுடன் உழைத்து வேலையை கற்று, தனியாக கம்பெனி வைத்து, கை நிறைய சம்பாதிக்கிறான். அவனது கம்பெனியில் இன்று, 1-0 பேர் வேலை செய்கின்றனர். திருமணமும் ஆகிவிட்டது லைப் செட்டில்டு.
தம்பி மெடிசின் முடித்து விட்டு, எம்.எஸ்., படிப்பதற்காக படித்து படித்து தேர்வு எழுதி கொண்டு காத்திருக்கிறான். இனி அவன் படிப்பை முடித்து கிளினிக் வைத்து, பேர் பெற்ற டாக்டர் என்ற பெயரை எடுக்கணும். அதன்பின் தான், அவன் வாழ்க்கையில், 'செட்டில்' ஆக முடியும். பணக்காரர்கள் என்றால், உடனே, தங்கள் பிள்ளைகளுக்கு, 'கிளினிக்' வைத்து விடுகின்றனர். நடுத்தர வர்க்கத்தினர் எனும் போது, திறமை இருந்தால் மட்டுமே முன்னேற முடியும்.
மூத்த மகன் இப்படி மக்கு பிளாஸ்திரியா இருக்கானே என்று நினைத்து அவ்வளவு கஷ்டப்பட்டனர் பெற்றோர். ஆனால், அந்த மகன் தான் இன்று இவர்களுக்கு சோறு போடுகிறான்.
தங்கள் பணத்தை எல்லாம் இளைய மகனின் படிப்பு செலவு, புத்தகம், தேர்வு செலவுக்கென்றே செலவழித்து வருகின்றனர். இப்போது தம்பிக்கு மன அழுத்தம் அதிகமாகி விட்டது. குற்ற உணர்ச்சி ஒரு பக்கம்; எப்போது நாம் சாதிப்பது என்ற கவலை மறுபக்கம்.
உங்கள் மகனது எதிர்காலத்தை நீங்க முடிவு செய்ய வேண்டாம்; உங்கள் மகனை உங்களுக்கு பரிசாக கொடுத்தவரே, அவனது எதிர்காலத்தை முடிவு செய்யட்டும். அது நீங்கள் நினைத்ததை விட மிக மிக சிறப்பாக இருக்கும்.
எனவே, டென்ஷன் தவிர்த்து, 'ரிலாக்ஸ்ட்' ஆ இருங்க... பீ கூல்! எல்லாம் நல்லதாகவே நடக்கும்.
உங்கள் நலனில் அக்கறை கொள்ளும்,
ஜெனிபர் பிரேம்.
