தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/இளஸ்.. மனஸ்! (115)

இளஸ்.. மனஸ்! (115)

இளஸ்.. மனஸ்! (115)


PUBLISHED ON : அக் 09, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 09, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்பு பிளாரன்ஸ் ஆன்டி...

என் வயது, 15; 10ம் வகுப்பு படிக்கும் மாணவி; வீட்டுக்கு உறவினர் யாராவது வந்தால், நான் முறையாக உபசரிப்பதில்லை. ஓடி சென்று அறைக்குள் ஒளிந்து கொள்வேன்; அவர்கள் சென்ற பின் தான், இயல்புநிலைவுக்கு மீள்வேன்.

எனக்கு நண்பர்கள் மிக குறைவு; இருக்கும் சொற்ப தோழர், தோழியரிடமும் இயல்பாக பழகுவதில்லை. தோழியர் என்னை, முசுடு, ரப் அண்ட் டப், நட்பு விரோதி என்றே அழைப்பர்.

என்னை திருத்தி கொள்ள ஆசைப்படுகிறேன்; நட்பையும், உறவையும் இணக்கமாய் பேண வழி சொல்லுங்கள் ஆன்டி.

அன்பு மகளே...

கூட்டுக் குடும்பங்கள் சிதைந்து, தனிக்குடித்தனங்கள் ஆனதின் விளைவு, இளைய தலைமுறைக்கு உறவுகளை சரிவர பேண தெரியாமல் போய் விட்டது.

உறவுமுறைகள் புரிவதில்லை; வீட்டுக்கு வந்திருப்பவர், சித்தப்பாவா, பெரியப்பாவா, மாமாவா, மச்சானா என்று நினைவு இருக்காது. அதற்கு முன், அவரைப் பார்த்து, 10 ஆண்டுகள் ஓடியிருக்கும்.

அவரை எப்படி அழைப்பது என்று பெற்றோர் கூறினால் தான் உண்டு; வந்திருப்பவர் தந்தை வழி உறவினரா, தாய் வழி உறவினரா என்ற குழப்பம் வேறு மனதிற்குள் ஓடும்.

சில உறவினர் முன், பருவ வயது மகள் நிற்பதோ, வரவேற்பதோ பெற்றோருக்கு பிடிக்காது.

ஒரு யோசனை கூறுகிறேன்...

வீட்டிற்கு எதாவது ஒரு உறவினர் வந்தால், அம்மா அல்லது அப்பாவின் கண்களைப் பார்.

அவர்கள் நேரடியாக வந்து வரவேற்க சமிக்ஞை காட்டினால், அன்பாக வரவேற்பு செய்.

முதலில், உறவினர்களை அமர செய்து குளிர்ந்த நீர் கொடு; அதன்பின், பலகாரங்கள் எடுத்து வந்து வை.

உணவு வேளையில் வந்திருந்தால், உணவருந்த அழை; ஊரிலுள்ள மற்ற உறவினர்கள் நன்றாக இருக்கின்றனரா என விசாரி. அவர்கள் பேசி முடித்து, உணவு அருந்தி கிளம்பும் போது, வாசல் வரை சென்று வழியனுப்பு.

வரும் உறவினர் முன், நீ நிற்க கூடாது என, பெற்றோர் சமிக்ஞை செய்தால், அவர்களை வாய் நிறைய வரவேற்று, உன் அறையில் ஒதுங்கிக்கொள்.

பொதுவாக, பெற்றோரிடம் உறவினர்களை பற்றியும், அவர்களை என்ன உறவு முறையில் அழைக்க வேண்டும் என்பதையும் கேட்டு தெரிந்து கொள்.

சில உறவினர், பரம விரோதியாகவும், சிலர் உயிருக்கு நெருக்கமானவராகவும், உன் பெற்றோருக்கு இருப்பர். கண் காதுகளை திறந்து வை; பெற்றோரின் விருப்பு, வெறுப்புக்கு ஏற்ப விருந்தோம்பலில் ஈடுபடு. சில உறவினரிடம் பெற்றோர் வீம்பு பாராட்டி, 'ஈகோ' பார்த்து சண்டை போட்டிருந்தால், அந்த உறவுகளை புதுப்பிக்க ஆனதை செய்.

பாராமுகமாய் இருக்கும் பெற்றோருக்கு, ஆக்கப்பூர்வமான ஆலோசனை வழங்கி, உறவுகளை இணைக்கப் பார்.

நிறம், பணம் மற்றும் மதம் பார்த்து நட்பு பாராட்டாதே; நண்பர்களிடம் பழகும் போது, 'ஈகோ'வை துாக்கி வீசு. ஆண் நண்பர்களுடன் பழகும் போது, உன் மீது தவறான எண்ணம் வந்து விடாமல் பார்த்துக்கொள்.

தோழமைகளை பார்க்கும் போது, அகம்புறம் மலர வரவேற்க கற்றுக்கொள்.

சின்ன பிரச்னைக்கெல்லாம் முகத்தை துாக்கி வைக்கும் தொட்டா சிணுங்கியாக இருக்காதே. நல்ல நோக்கத்தோடு பழகும் தோழியருடன் அன்யோன்யமாக இரு.

கெட்ட நோக்கத்தோடு பழகுவோரை கத்தரித்து விடு; தோழிகள் கடன் கேட்டால் திருப்பி தர வேண்டியிராத அளவில் கொடு!

தோழமைகளை வீட்டிற்கு அழைத்து போவதிலும், தோழமை வீடுகளுக்கு நீ போவதிலும் பெரியவர்களின் விருப்பத்தை அறிந்து செயல்படு!

சிலவகை நட்புகள், எல்.கே.ஜி.,யில் ஆரம்பித்து ஆயுளுக்கும் நீளும் மகத்துவம் கொண்டிருக்கும். சிலவகை ரயில் ஸ்நேகம் போல, அற்ப, சொற்ப காலத்தில் அறுந்து விடும். உறவுகளை பேணுவதில் நிர்பந்தம் உண்டு.

நட்புகளை பேணுவதில் நிர்பந்தம் கிடையாது; அதனால், பல சமயங்களில் உறவுகளை விட நட்புகளே ஆலமரமாக தழைத்தோங்கும்.

- அன்புடன், பிளாரன்ஸ்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us