தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/இளஸ் மனஸ்! (131)

இளஸ் மனஸ்! (131)

இளஸ் மனஸ்! (131)


PUBLISHED ON : பிப் 05, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 05, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்புள்ள பிளாரன்ஸ் ஆன்டி...

என் வயது, 21; எம்.எஸ்சி., கணிதம், இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவன்.

அமைதியும், கூச்சமும் என் இயற்கை குணங்கள்; கூட்டத்தை பார்த்தாலே, நடுக்கம் வந்துவிடும்; நண்பர்கள் வட்டமும் மிகக் குறைவு.

வீட்டில் பெற்றோர், தரக்குறைவான வார்த்தைகளை பேசி, அடிக்கடி சண்டை போடுவர்; இது என் மனதில் ஆறாத வலியை ஏற்படுத்திவிட்டது.

என் ஒரே பலம், பிறருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் தான்; அதனால் தான், மிகச்சிறந்த சமூக பணி செய்யும் நோக்கில், ஐ.ஏ.எஸ்., ஆக விரும்புகிறேன்.

இளமையில் பல தவறுகளை செய்துள்ளேன்; என் தவறுகளை எண்ணி வருத்தபட்டு அழாத நாட்களே இல்லை. புதிய மனிதனாக திருந்தி வாழ ஆசைப்படுகிறேன். ஆனால் எந்த வேலையிலும், முழுமையாக ஈடுபட முடியவில்லை; செய்த தவறுகளே, மனக்கண் முன் வந்து நிற்கின்றன.

ஐ.ஏ.எஸ்., ஆவதற்கு யு.பி.எஸ்.சி., தேர்வில், அரசியல் அறிவியலை, விருப்ப பாடமாக தேர்ந்தெடுக்க உள்ளேன். இந்த பாடம் குறித்து விளக்கம் தாருங்கள். நான், ஐ.ஏ.எஸ்., ஆனால், ஒழுக்கமுள்ள அதிகாரியாக பணியாற்ற முடியுமா எனவும் ஆலோசனை சொல்லுங்கள் ஆன்டி.

அன்பும் ஆர்வமும் மிக்க தம்பிக்கு...

ஒழுக்கத்தில் குறையுள்ள நீ, ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக பிரகாசிக்க முடியுமா என கேட்டிருக்கிறாய். இந்த பிரபஞ்சமே, ஒழுங்கற்ற தன்மையிலிருந்து, ஒழுங்கிற்கு நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த உலகில் வாலிப குறும்புகளை யார் செய்யவில்லை.

வெற்றிகரமாக விளங்கும் எழுத்தாளர், மருத்துவர், விஞ்ஞானி, அரசியல்வாதி, ஆன்மிகவாதி இது போன்ற பிரபலங்களின் கடந்த காலத்தை வெளிச்சம் போட்டு பார்த்தால், வாலிப குறும்புகளால் அத்து மீறல்களும், கெட்ட பழக்க வழக்கங்களும், பெற்றோருக்கு கீழ்படியாமையும் தென்படும்.

ஒன்றிலிருந்து, 10 வரை அறியாமையுள்ள வயது. 10 - 20 வரை களவையும் கற்று மறக்கும் வயது. தொடர்ந்து, 20 - 30 வரை, தவறுகளை திருத்திக் கொள்ளும் வயது; 30 - 40 வரை, சாதனைகள் செய்யும் வயது. இந்த வயதுக்குள் அனுபவ பாடங்கள் நிறைய கற்கலாம்.

கற்றதை பிறருக்கு சொல்லித் தருவதற்கான வயது, 40 முதல் 50 வரை நிகழும். வாழ்க்கையை அசைப்போடுவது, 50 முதல் 60 வரையுள்ள வயதில் நடக்கும்; 60க்கு மேல், ஆன்மிக அனுபவங்களை தேடுவர்.

தவறு செய்வது மனித இயல்பு. செய்த தவறுகளை, உலகிற்கு அறிவித்து மன்னிப்பு கோருவது தேவ பண்பு.

ஹார்மோன் செய்யும் கலகங்களுக்கு நீ, எப்படி பொறுப்பாவாய்; உனக்கு, ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக பணியாற்ற அத்தனை தகுதிகளும் இருக்கின்றன.

அரசியல் அறிவியல் பாடம் பற்றியும் கேட்டிருந்தாய்.

ஐ.ஏ.எஸ்., தேர்வுக்கான, 48 விருப்பப் பாடங்களில், அரசியல் அறிவியலும் ஒன்று.

ஐ.ஏ.எஸ்., தேர்வாக மூன்று படிகள் உள்ளன.

அவை, முதல்கட்ட தேர்வு, பிரதான தேர்வு, நேர்காணல்.

பிரதான தேர்வில், ஒன்பது தாள்கள் இருக்கும்; அவற்றில், இரண்டு விருப்பத் தாள்கள்.

ஒவ்வொன்றுக்கும், 250 மதிப்பெண்; மொத்தம், 500 மதிப்பெண்கள்.

அதில், இந்திய விடுதலை போராட்டம், இந்திய அரசியல், அரசியலைப்பு சட்டம், சர்வதேச பொருளாதாரம் மற்றும் வியாபாரம், இந்திய வெளியுறவு கொள்கையும், சமாதானமும் என பாடங்கள் உண்டு.

நீதி, சம உரிமை, ஜனநாயகம், அதிகாரம், இந்திய அரசியலில் ஜாதி, மதம், அரசியல் கட்சிகள், சமூக போராட்டங்கள், மேற்கத்திய அரசியல், சோவியத் யூனியன் வீழ்ச்சி, உலகமயமாக்கல் போன்ற தலைப்புகளிலும் பாடங்கள் உண்டு.

முயன்று படித்தால், இரண்டு தாள்களிலும், நல்ல மதிப்பெண் பெறலாம்.

வருங்கால நிர்வாக ஆட்சி தலைவருக்கு அட்வான்ஸ் வாழ்த்துகள்!

- அன்புடன், பிளாரன்ஸ்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us