
அன்புள்ள ஆன்டி...
நான், 15 வயது சிறுமி; பள்ளியில், 9ம் வகுப்பு படிக்கிறேன். என் தந்தை ரயில்வே கேன்டினில், சமையல்காரராக பணிபுரிகிறார். அம்மா, சாம்பார் மசாலா, மட்டன் மசாலா, சிக்கன் மசாலா தயாரித்து, பாக்கெட்டில் அடைத்து விற்கிறார்.
எனக்கு இரு தங்கைகள். நினைவு தெரிந்த நாளிலிருந்து, ரயில் இன்ஜின்கள் மீது செம கிரேஸ். ரயில் இன்ஜின்களை, பெரிய பூதமாகவும், மிகப்பெரிய ரயில் வண்டியை பூச்சியாகவும் கற்பனை செய்து பார்ப்பேன்.
பூதத்தை அடக்கி, அதன் மீது சவாரி செய்வது போல, ரயில் இன்ஜின் ஓட்டுனராக வேண்டும் என ஆசைப்படுகிறேன். அதற்கான வழிமுறைகளை சொல்லுங்கள் ஆன்டி...
இப்படிக்கு,
பெயர் வெளியிட விரும்பாத மாணவி!
அன்பு மகளுக்கு...
இந்தியாவின் முதல் பெண் ரயில் இன்ஜின் ஓட்டுனர், மும்தாஜ் எம்.காஸி.
இந்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் வழங்கும் உயரிய, 'நாரிசக்தி புரஸ்கார் விருது' பெற்றவர்.
ரயில் இன்ஜின் ஓட்டுனர்களை, 'டிரெயின் இன்ஜினியர்' என்று கூறுவர். தெற்கு ரயில்வேயின் முதல் ரயில் பெண் இன்ஜின் ஓட்டுனர் சுரேகா சங்கர் யாதவ்; இவர், 1988ல் பணியில் சேர்ந்தார்.
ரயில் ஓட்டுனர் பணி நீ நினைப்பது போல எளிதானதல்ல. ஒரு ரயில் ஓட, 100 பேரின் தன்னலம் கருதாத ஒத்துழைப்பு தேவைப்படுகிறது. இல்லையென்றால், ஏராளமான உயிர்களை பலி வாங்கும் விபத்துகள் நடந்து விடும்.
தண்டவாளத்தில், மனிதர்கள் மற்றும் விலங்குகள் குறுக்கே வரலாம்; உடனே, ரயிலை நிறுத்த இயலாது. மோதி சிதற விட்டு தொடரவே இயலும்.
ரயில் மறியல் போராட்டங்கள் நடக்கும் போது, அவற்றை மதியூகமாக கையாள தெரிய வேண்டும். திடீரென்று சிக்னலை மாற்றுவர். கேட் இல்லாத, 'லெவல் கிராசிங்'குகள் நிறைய இருக்கும்; அவற்றை நுட்பமாக கவனிக்க வேண்டும். மன திண்மையும், கவன குவிப்பும் மிக அவசியம்.
ரயில் இன்ஜின் ஓட்டுனராவது குறித்துப் பார்ப்போம்...
இதில் சேர, 10ம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு சமமான படிப்பு வேண்டும்.
அத்துடன், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், ஆட்டோ மொபைல் இன்ஜினியரிங்கில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது, 18 முதல், 28க்குள் இருக்க வேண்டும்.
ரயில்வே வாரியம் நடத்தும் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அந்த வாரியத்தை சுருக்கமாக, ஆர்.ஆர்.பி., என்பர். இந்த தேர்வுக்கு, ஓர் இடத்துக்கு, 1,100 பேர் தேர்வு எழுதுவர். தேர்ச்சி பெற்ற பின், 12 முதல், 15 மாதங்கள் தீவிர பயிற்சி நடக்கும்.
ஆறு மாதங்கள் வகுப்பு பயிற்சியும், 225 மணி நேரம், ரயில் இன்ஜினிலேயே நேரடி பயிற்சியும் நடக்கும். இன்ஜின் ஓட்டுனர்களுக்கு, சம்பளம், 60 ஆயிரம் ரூபாய் வரை கிடைக்கும்.
பயிற்சி முடித்தவுடன், நேரடியாக, பயணியர் ரயில் ஓட்ட முடியாது; முதலில், டீசல் அல்லது எலக்ட்ரிக் சரக்கு ரயில் உதவி ஓட்டுனராக பணியில் சேர்ப்பர்.
குறித்த நேரத்தில், குறித்த துாரம் இன்ஜினை செலுத்துகிறாரா... ரயில் போக்குவரத்து விதிகளை எப்படி கடைபிடிக்கிறார் என்பதை எல்லாம் மேலதிகாரிகள் கவனிப்பர்.
பின், பயணியர் ரயிலை ஓட்ட அனுமதி கிடைக்கும். ஒரு பெண், ரயில் இன்ஜின் ஓட்டுனராக இருப்பதில், சில பல அசவுகரியங்கள் உள்ளன.
கழிப்பறை வசதிகள் ரயில் இன்ஜினுக்குள் இல்லை; ஏதாவது ஒரு ஸ்டேஷனில் தான் இறங்க வேண்டும். இது போல் சிறு சிறு பிரச்னைகள் இருக்கும்; அவற்றை சமாளிக்க பழக வேண்டும்.
ரயில் இன்ஜின் ஓட்டுனராக வாழ்த்துகள்! ஓட்டுனரானதும் ரயில் இன்ஜின் முன் நின்று யாரையும் செல்பி எடுக்க அனுமதிக்காதே!
- அள்ளக்குறையா அன்புடன்,
பிளாரன்ஸ்.

