PUBLISHED ON : ஆக 27, 2022

அன்பு பிளாரன்ஸ்...
என் வயது, 28; இல்லத்தரசியாக இருக்கிறேன்; காதல் திருமணம் செய்து கொண்டேன்.
இரண்டு வயதில், ஆண் குழந்தை உள்ளது. சீன பொம்மை போல அழகாக இருப்பான்.
அவனது வலது காலை விட, இடது கால் நீளம் சற்று குறைவாக உள்ளது. தத்தி தத்தி நடக்கும் போது சிரமப்படுகிறான்; முதுகில் வலி இருப்பதாகவும் தெரிகிறது.
வளரும் போது, காலின் நீளக்குறைவு சரியாகி விடுமா... மகன் உடல் ஊனமுற்றவனாகி விடுவானோ என்ற பயம் ஏற்படுகிறது.
ஒற்றைக் கால் நீளக்குறைவை நிரந்தரமாய் சரி செய்ய வழி வகைகளை கூறுங்கள் சகோதரி.
இப்படிக்கு,
பெயர் வெளியிட விரும்பாத இளம் தாய்!
அன்பு சகோதரிக்கு...
உங்கள் மகனுக்கு கால் நீள மாறுபாடு எனப்படும், 'லெக் லென்த் டிஸ்கிரிபன்சி' என்ற பாதிப்பு இருக்கிறது. சுருக்கமாக, ஆங்கிலத்தில், இதை, எல்.எல்.டி., என்பர். இது ஒரு வகை உடல் ஊனம் தான். சிலருக்கு ஒரு கை நீளமாகவும், ஒரு கை குட்டையாகவும் இருக்கும்.
கால்களின் உயர வித்தியாசம், 0.5 செ.மீ., இருந்தால், அப்படியே விட்டு விடலாம். அவனால் நடைமுறை சிரமங்கள் இன்றி, வாழ்க்கையை நகர்த்த முடியும். இந்த குறைபாடு மரபியல் ரீதியாகவும் வரும். ஜுவனைல் இடியோபதிக் ஆர்த்தரைட்டிஸ், ஹெமி ஹைப்பர் பிளாசியா, நியூரோ பைப்ரோ மேட்டோசிஸ், டிஸ்பிளாசியாஸ் போன்ற நோய்களின் உப விளைவாகவும் இந்த குறைபாடு வரக்கூடும்.
உலகில், 40 சதவீதத்திலிருந்து, 70 சதவீத பேருக்கு இந்த பிரச்னை உள்ளது. இவர்களில், 0.1 சதவீத பேருக்கு கால் நீள மாறுபாடு, 20 மில்லி மீட்டருக்கும் அதிகமாக உள்ளது. மகனை பார்த்து கவலைப்பட்டபடியே இருப்பதில் பயனில்லை; மருத்துவ நிபுணரிடம் அழைத்துச் சென்று காட்டுங்கள்.
உங்கள் மகன் பிரச்னைக்கு, இரண்டு வகை மருத்துவ தீர்வுகள் உள்ளன.
ஒன்று -
அறுவை சிகிச்சை இல்லாமல், கால் நீள மாறுபாடை குணப்படுத்தலாம். உயரக்குறைவான காலுக்கு சிறப்பு, 'ஹீல்ஸ்' செருப்பு தயாரித்து அணிவிக்கலாம். ஒரு கால் செருப்பு ஹீல்சுடனும், இன்னொரு கால் செருப்பு சாதாரணமாகவும் இருக்கும்.
குட்டையான கால்களுக்கு நீட்டி மடக்கும் பயிற்சிகளுடன் கூடிய பிசியோதெரபி தரலாம். தொழில்சார் சிகிச்சை எனப்படும் ஆக்குபேஷனல் தெரபி தரலாம். நீள மாறுபாடு அதிகமாக இருந்தால், பூட்ஸ் பொருத்தலாம்.
இரண்டு -
அறுவை சிகிச்சை மூலம், கால் நீள மாறுபாடை குணப்படுத்தலாம்.
இதிலும், இரண்டு வகை உள்ளன. நீளமான காலை அறுவை சிகிச்சை செய்து, மற்றொரு காலுக்கு சமமாக்கலாம். இதனால், உங்கள் மகன் உயரம் குறையும்.
குட்டையான காலை அறுவை சிகிச்சை செய்து, நீளமான காலுக்கு சமமாக்கலாம்.
ஒரு ரகசியம் சொல்லட்டுமா...
என் தாத்தாவுக்கு கால் நீள மாறுபாடு இருந்தது. அவர் எந்த தாழ்வு மனப்பான்மையும் இல்லாமல் சிறப்பாக படித்தார். மாநில அளவில், கால்பந்து வீரராகவும், பூ பந்து வீரராகவும் திகழ்ந்தார்.
மகனுக்கு சிகிச்சைகளை தொடர்ந்தபடியே தன்னம்பிக்கை ஊட்டி வளருங்கள்.
கால்சியம் சார்ந்த உணவுகளை அதிகம் கொடுங்கள். தொடர்ந்து, உங்கள் மகன் வாலிப வயதை எட்டும் வரை, எலும்பியல் நிபுணரின் மருத்துவ ஆலோசனைகளைக் கேட்டு அதன்படி நடங்கள்.
யாரிடம் குறை இல்லை... மனக்குறை இல்லாத மனிதர்களாய் வாழ்வோம் சகோதரி!
- அள்ளக்குறையா அன்புடன், பிளாரன்ஸ்!
