
அன்பு பிளாரன்ஸ் ஆன்டி...
என் வயது, 15; கிராம பள்ளியில், 10ம் வகுப்பு படிக்கும் மாணவன். புதிதாக, ஒரு ஆணையோ, பெண்ணையோ பார்த்தால், முதல் பார்வையிலேயே, அவர்களை காரணமே இல்லாமல் வெறுக்கிறேன் அல்லது நேசிக்கிறேன்.
பழகி அவர்களின் உண்மை குணங்களை அறிந்தாலும், அவர்கள் மீதான அபிப்ராயத்தை, என்னால் எளிதில் மாற்றிக் கொள்ள முடிவதில்லை. இது சரியா... சரியில்லை என்றால், என்னை மாற்றிக் கொள்ள, என்ன செய்யலாம் ஆன்டி...
இப்படிக்கு,
மா.கலிவரதன்.
அன்புள்ள மகனுக்கு...
புலனுணர்வு, மனிதருக்கு மனிதர் மாறுபடுகிறது. கல்வி, பொருளாதாரம், மதம், இனம், மொழி, பெயர், ஆளுமை, சுயசுத்தம், சண்டைக்கோழி மனோபாவம், உணவு, உடை, இருப்பிடம், வாகனம், பாலினம், புகழ், பதவி, அதிகாரம், புவியியல் இருப்பு, பிறர் சொல்லக் கிடைக்கும் அபிப்ராயம் போன்ற அம்சங்கள், முதல் பார்வையிலேயே, ஒரு மனிதர் மீதான விருப்பு, வெறுப்பை தீர்மானிக்கிறது.
ஒருவர் மீது, அதீத வெறுப்பை உமிழ்ந்தால், அது ஒரு கட்டத்தில் அன்பாய் மாறி விடும்.
ஒருவர் மீது, உச்சபட்ச அன்பை செலுத்தினால், அது ஒரு கட்டத்தில், வெறுப்பாய் மாறி விடும். வெறுப்பு என்பது, கோபம் மற்றும் அருவெறுப்பு உணர்வுகளுக்கு அப்பாற்பட்டது.
அதிக வெறுப்பு, 'போபியா' என்ற மிகை பயமாகவும், அதிக விருப்பு, 'மேனியா' என்ற வெறியாகவும் உருவெடுக்கிறது.
மனிதர்களில் பல வகை உள்ளனர்.
* இனிமையானவர்
* கொடுமையானவர்
* மிடுக்கானவர்
* பிறரை பயன்படுத்தி விட்டு, குப்பையில் வீசி எறிபவர்
* தன்னையும், பிறரையும் மகிழ்ச்சியாக வைத்திருப்பவர்
* புலம்பல் வாதிகள்.
கலிவரதா... உன் கெட்ட குணத்தால், நல்ல மனிதர்களை இழந்து விடுவாய். கீழ்க்கண்டவற்றை கடைபிடித்தால், இந்த பிற்போக்கு தனத்திலிருந்து முற்றிலும் விடுபடலாம்.
* அட்டைப்படத்தை பார்த்ததும், புத்தகத்தின் உள்ளடக்கத்தை மதிப்பிடாதே
* நீ செய்யும் தவறை, பிறர் உனக்கு செய்தால், உன் மனம் எவ்வளவு துன்பப்படும் என்பதை உணர்
* தராசு போல் செயல்பட்டு, மனிதர்களை எடை போடு; ஒரு மனிதரை எடை போட குறைந்தது, மூன்று மாதம் அவகாசம் எடுத்துக் கொள்
* கெட்ட குணம் உள்ள மனிதர்களை வெறுக்காதே; அவர்களிடமிருந்து விலகி நில்
* நல்ல மனிதர்கள் மீது விழுந்து புரளாதே; ஆரோக்கிய இடைவெளி விடு
* பெண்களுடன் விழுந்து விழுந்து பழகி, ஆண்களை தவிர்க்காதே
* வெறுப்பு, உன் அக, புற அழகுகளை சிதைத்து விடும். வெறுப்பு பெருமூளை செயல்பாட்டை தீவிரபடுத்தி விடும்; வெறுப்பை தவிர்த்து மூளையை சாந்தப்படுத்து
* கோள் பேசாதே; கோள் கேட்காதே
* பிறரை சதா குற்றவாளிக் கூண்டில் ஏற்றி, தண்டனை தீர்ப்பு வழங்காதே
* அரசல்புரசலாக வரும், காது வழி செய்தியை வைத்து, முன், பின் அறிமுகம் இல்லாதவரை வெறுக்காதே.
வாழ்த்துகள்!
- அள்ளக்குறையா அன்புடன், பிளாரன்ஸ்.