
அன்பு பிளாரன்ஸ் ஆன்டி...
என் வயது, 18; இளங்கலை தாவரவியல் முதலாமாண்டு படிக்கும் மாணவி. என் அண்ணன் உட்பட, உறவுக்கார ஆண்கள், பள்ளி தோழர்கள் நிறைய பேர் ஒற்றைக் காதில் கடுக்கன் அணிகின்றனர்.
இது பெண்களை காப்பியடிக்கும் வேலை என எண்ணுகிறேன்; மிகவும் அருவெறுப்பாக பார்க்கிறேன். உங்கள் கருத்து என்ன ஆன்டி...
இப்படிக்கு,
இ.எஸ்.மதுமதி.
அன்பு மகளே...
ஆண்கள் காதணி அணிவது பாரசீக, எகிப்திய நாகரிக காலத்திலிருந்தே நடக்கிறது. ஆண்கள் காதணி பற்றி, கிறிஸ்தவர்களின் புனித நுாலின் ஒரு பகுதியான பழைய ஏற்பாட்டில் கூட குறிப்பிடப்பட்டுள்ளது.
பழங்குடி மக்கள் தீய ஆவிகளை விரட்டுவதாக நம்பி காதணி அணிந்தனர்; மொட்டை அடித்தலும், காது குத்தலும் புத்தமத தாக்கமாக வரும் தொடர்ச்சி என, ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
குழந்தைக்கு ஒரு வயது முடியும் போது, கோவில் விழாவில், மாமன் மடியில் உட்கார வைத்து, பாரம்பரியமாக தொழில் நுட்பம் அறிந்த வல்லுநர் காது குத்துவர். ஆண் குழந்தைகளுக்கு வலது காதில் ஆரம்பிக்கும்.
காது குத்தலை, 'கர்ண பூஷணம்...' என்பர்.
திருஞானசம்பந்தர் இயற்றிய தேவாரத்தில், 'சிவபெருமான் தோடுடைய செவியன்...' என புகழ் பாடுகிறார். அசுவதரன், கம்பளதரன் என்ற கந்தர்வ இசை வல்லுநர்களின் பாடல்களை கேட்டபடியே இருக்க, அவர்களை தோடுகளாக்கி, காதில் அணிந்தார் சிவபெருமான் என்கிறது புராண கதை.
கப்பலில் வேலை செய்யும் ஆண்கள் கடல் பயணத்தின் போது விபத்தில் இறந்தால், அவர்கள் உடலை அடையாளம் கண்டுபிடிக்க, காதணி அணியும் வழக்கம் இருந்தது. மகிழ்ச்சி பிரியர்களான, 'ஹிப்பி' என்ற குழுவினர், ஒரு அடையாளத்துக்காக, காதில், காதணி அணிந்தனர்.
ஆண்கள் அணியும் கடுக்கன்களில், நுாற்றுக்கணக்கான வகைகள் உள்ளன.
அவை...
* ஹூப் மாடல்
* வட்ட வடிவ பாலி மாடல்
* ஒரே கல் வைத்த ஸ்டட் மாடல்
* அகலமான ஹ்யூஜி ஹூப் மாடல்
* அலாய் பாலி இயர் ரிங்ஸ்
* ஓம் வடிவ கம்மல்
* சிலுவை கம்மல்
* ட்ராகன் கோல்ட் சர்ஜிகல் ஸ்டட்
* ருத்திராட்சங்கொட்டை தொங்கும் கம்மல்
* கை துப்பாக்கி வடிவ கம்மல்.
இது போல் இன்னும் பல உண்டு.
'ஒற்றைக்காதில் கடுக்கன் அணிவது நல்ல சிந்தனையை கெடுக்கும். வாழ்க்கையில், தரித்திரத்தை ஏற்படுத்தும்; பயங்கர கோபக்காரன் ஆக்கும்...' என்கின்றனர் இந்து மத அறிஞர்கள்.
இரண்டு காதுகளிலும், கடுக்கன் அணிவது நோய் எதிர்ப்பு சக்தியையும், ஞாபக சக்தியையும் கூட்டும்; காது குத்தல் சக்தி மண்டலத்தை துாண்டும்; உயிர் தன்மையில், சமநிலை ஏற்படுத்தும்; மன உறுதி கிடைக்கும்.
என் தனிப்பட்ட அபிப்ராயம் என்ன தெரியுமா...
ஆண்கள் ஒற்றைக் காதிலோ, இரண்டு காதுகளிலும் சேர்த்தோ கடுக்கன் அணிவது கூடவே கூடாது என்பதே. கல்லுாரிகளிலோ, வேலை பார்க்கும் இடத்திலோ, திருமணத்திற்கு பின், கடுக்கன் அணிய மனைவி தடை உத்தரவு விதித்தால், ஆண்கள் நிறுத்தி விடப்போகின்றனர். அதையெல்லாம் விடு, நாம் படிப்பை கவனிப்போம்.
- அள்ளக்குறையா அன்புடன், பிளாரன்ஸ்.