PUBLISHED ON : ஆக 22, 2020

அன்பு மிக்க பிளாரன்ஸ்...
அழகு நிலையம் நடத்தும், 40 வயது பெண் நான். கணவர், கூரியர் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிகிறார். எங்கள், 18 வயது மகன் பிளஸ் 2 படிக்கிறான். அடுத்து பிறந்த மகளுக்கு, 11 வயதாகிறது; 6ம் வகுப்பு படிக்கிறாள்.
மாமியார் சித்திரவதையால், 12 வருடங்கள் மிகவும் அவதிப்பட்டேன். அது, 1000 வருடம் கொடுமையான அனுபவத்துக்கு சமம். மகள் பிறப்பதற்கு, 20 நாட்களுக்கு முன், பாத்ரூமில் வழுக்கி விழுந்து இறந்தார் மாமியார். 'கேவலமான சர்வாதிகாரி ஒழிந்தார்' என மகிழ்ந்திருந்த எனக்கு, மகள் வடிவில் இடி வந்தது.
அப்படியே, என் மாமியார் சாயலில் பிறந்தாள் மகள். வளர்ந்த போது நடை, உடை பாவனை, குரல், விருப்பம் என, எல்லாம், அச்சு அசலாக அவர் போலவே உள்ளது. எதாவது கேட்டால் முறைப்பாள். என் இதயம் ஸ்தம்பித்து விடும். 100 கொலைகள் செய்த சைக்கோ பார்வை போல் இருக்கும்.
என்னை அம்மா என கூப்பிட மாட்டாள். பெயர் சொல்லித்தான் அழைப்பாள். ஒரு நாள் நைசாக, 'பாத்ரூமில் பாசி படர வைத்து, பாட்டியை நீ தானேக் கொன்ன...' என்றாள்; விக்கித்து போனேன்.
சந்தேகமே இல்லை; என் மாமியார் தான், மறுபிறவி எடுத்து வந்திருக்கிறார்; அவரது பழி வாங்கலில் இருந்து தப்பிக்க, எதாவது- உபாயம் சொல்லம்மா!
ப்ரியமுள்ள அம்மா,
உயிர்கள் பிறப்பது, குரோமசோம்களின் விளையாட்டால் தான். நாம் உடல், 100 புள்ளி வைத்த கோலம் என்றால், அதில் ஒன்று, கொள்ளு தாத்தா, மற்றொன்று, எள்ளு பாட்டி என, இருக்கும்.
உங்கள் கணவரிடம், மாமியாரின் மரபு அணு இருக்கிறது. அப்படி என்றால், நீங்கள் கூட்டு சேர்ந்து உருவாக்கிய, மகளிடம், மாமியாரின் சாயல் இருக்கும்தானே. மறுபிறவி என்பது இன்னும் விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்படாத விஷயம்.
'அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்' என்பர். அதனாலேயே, மகள் பார்க்கும் சாதாரண பார்வை கூட, வெகுவாய் அச்சமூட்டுகிறது.
உரிமையில், செல்லமாய் பெயர் சொல்லி அழைக்கிறாள் மகள். எனக்கு தெரிந்த, 80 சதவீத சிறுவர், சிறுமியர், பெற்றோரை பெயர் சொல்லி தான் அழைக்கின்றனர். பெற்றோரும் இதை வெகுவாக ரசிக்கவே செய்கின்றனர்.
பொதுவாக, மாமியார் - மருமகள் உறவு, இந்தியா- - பாகிஸ்தான், அமெரிக்கா- - சீனா, தென்கொரியா- - வடகொரியா போல, முட்டி மோதிக்கொண்டுதான் நிற்கும். அவரவர் கோணத்தில் பார்த்தால், அவரவர் பக்கமே நியாயம் இருப்பதாக தெரியும்.
இறந்து போன மாமியாரை கேட்டால், என் மருமகள் போலொரு கொடுமைக்காரியை இவ்வுலகம் பார்த்திருக்காது என்று சொல்லியிருப்பார்.
சரி... விஷயத்துக்கு வருவோம். நீங்கள் செய்ய வேண்டியவை:-
* மாமியார் தொடர்பான புகைப்படங்களை மறைவிடத்தில் பதுக்கி வைக்கவும். சதா அவரைப் பற்றி யோசிக்க வேண்டாம்; மகளுடன் தொடர்புபடுத்தி பேசுவதை நிறுத்தவும்.
* 'பாத்ரூமில் பாட்டி வழுக்கி விழுந்தது ஒரு விபத்து; அந்த விபத்தில் யாருக்கும் தொடர்பில்லை...' என தன்னிலை விளக்கம் கொடுக்கவும்
* 'அம்மாவை முறைச்சு பாக்கும் போது, உன் அழகிய முகம் அசிங்கமாய் தெரியுது; சாந்தமாக பாரு...' என கூறி திருத்தவும்
* மாமியார், இடது வகிடு எடுத்து தலைவாரி இருந்தால், மகளுக்கு, நடு வகிடு எடுத்து தலைவாரவும். மாமியாரின் சாயலை காட்டாத நவீன ஆடைகளை அணிவிக்கவும்
* எல்லாவற்றையும் மீறி, மாமியார் தான் மறுபிறவி எடுத்து வந்திருப்பதாக உறுதியாக நம்பினால், 'மாமியாரே! நீங்க இப்ப என் மகள். இந்த பிறவியிலாவது பகையை மறந்து அன்பாக இருங்கள். நம் உறவின் குறைகளை, இந்த பிறவியில் நிவர்த்தி செய்து கொள்வோம்...' எனக் கூறவும்.
மனித உயிர்களின் தொடர்ச்சியில் ஒளிந்திருக்கும் மர்மத்தை பரம்பொருளே அறியும்.
- என்றென்றும் அன்புடன், பிளாரன்ஸ்.
