தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/இளஸ் மனஸ்! (58)

இளஸ் மனஸ்! (58)

இளஸ் மனஸ்! (58)


PUBLISHED ON : செப் 05, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 05, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்பு பிளாரன்ஸ் ஆன்ட்டி,

நான், 16 வயது பெண்; போன வருடம் தான் பருவமடைந்தேன். மஞ்சள் நீராட்டு விழா கூட நடத்தினார் தந்தை. பிளஸ் 1 படிக்கிறேன். வகுப்பில், 68 மாணவியருடன், 22 மாணவர்களும் உள்ளனர்.

பருவமடைந்த சில மாதங்களிலேயே, உடல் ரீதியாக பெருத்த மாற்றம் கண்டேன். அதுவரை, ஆண்கள் பக்கம் திரும்பாத என் கவனம், தலைகீழாக மாறியது. முழுக்க முழுக்க ஆண்களை திரும்பி பார்க்க வைத்தது. வகுப்பு மாணவர்கள், அழகர்களாக தென்பட்டனர்.

ஐஸ் விற்பவரை கண்டாலும் ஈர்ப்பு; ஆட்டோ ஓட்டுபவரைக் கண்டாலும் ஈர்ப்பு. கேலி செய்யும் ஆண்கள் மீது, கோபம் வரவில்லை. அந்த பேச்சில் சிரித்து மகிழ்கிறேன். யாராவது என்னை, 'அழகு' என்று வர்ணித்தால், கற்பனை வானில் மிதப்பேன்.

விழித்திருக்கும் நேரமெல்லாம், மேக்கப் போட்டுக் கொள்கிறேன். விரோதியாக தெரிகின்றனர் பெற்றோர். நான்கு தோழியர் கூடிவிட்டால் ஆண்கள் பற்றிய கதைப்புதான்.

சினிமா நடிகர்களை ரகசியமாக ரசிக்கிறேன். இவை எல்லாம், தவறான திசைக்கு கொண்டு போகும் என்று உள்ளுணர்வு சொல்கிறது; ஆனாலும், கட்டுப்படுத்த முடியவில்லை. என் மயக்கத்தையும், குழப்பத்தையும் போக்குங்க.

அன்பு மகளே...

பொதுவாக, 13 வயதில் பருவம் அடைகின்றனர் பெண்கள். 'பிட்யூட்டரி' என்ற சுரப்பி, சுரக்கும், எல்.எச்., ஹார்மோனும், எப்.எஸ்.எச்., ஹார்மோனும், 'ஈஸ்ட்ரோஜென்' என்ற ஹார்மோன் சுரப்பை ஊக்குவிக்கின்றன. ஈஸ்ட்ரோஜென் தான், பருவமடைதல், மாதவிலக்கு சுழற்சி, கர்ப்பமடைதல், மெனாபாஸ் போன்றவற்றை தீர்மானிக்கிறது.

பெண்களுக்கு, ஈஸ்ட்ரோஜென் தவிர, புரஜெஸ்ட்ரானும், சிறிதளவு ஆண் ஹார்மோனான டெஸ்ட்ரோஜென்னும் சுரக்கின்றன. இந்த சுரப்புகளால், பருவமடைந்த பெண்களுக்கு, பால் உறுப்புகள் வளர்ச்சி அடைகின்றன. இடுப்பிலும், தொடையிலும் கொழுப்பு சேர்கிறது. சினைப்பை, சினைக்குழாய் மற்றும் பெண்ணுறுப்பு முழு வளர்ச்சி அடைகிறது.

மாதாந்திர மாதவிலக்கு சுழற்சி சீராகுகிறது.

ஈஸ்ட்ரோஜென் குறைவாக சுரந்தாலும் பிரச்சனை; அதிகமாக சுரந்தாலும் பிரச்சனை.

இனி உன் பிரச்சனைக்கு வருவோம்.

பார்க்கும் ஆண்கள் எல்லாம் பேரழகர்களாக தெரிவது, ஹார்மோன் சுரப்பு செய்யும் செப்படி வித்தை. மனதில் ரயில் ஓடுவதும், வயிற்றுக்குள் வண்ணத்துப்பூச்சி பறப்பதும், பாலின கவர்ச்சியால் ஏற்படுவது தான். இந்த வயதில் தான், பல பெண்கள் தலைகுப்புற கவிழும் நிலை ஏற்படுகிறது. டீன் ஏஜை கடப்பது, உயர்ந்த சிகரங்களுக்கு இடையே, கயிறு கட்டி நடப்பதற்கு சமம்.

தமிழ் சினிமா பார்ப்பதையும், தொலைக்காட்சி தொடர் பார்ப்பதையும் அறேவ நிறுத்து. குடும்பத்தில் அம்மாவிடேமா, பாட்டியிடேமா மனம் விட்டு பேசு. அவர்களது, டீன் ஏஜ் அனுபவங்களை கேட்டு தெரிந்து கொள்.

கொழுப்பு சத்துள்ள உணவுகளை உட்கொள்ளாதே. காமம் பற்றி பேசும் தோழியரை தவிர். எப்போதும் தனிமையில் இராதே. மனதை நிலைபடுத்த யோகா, தியானத்தில் ஈடுபடு. தினமும் காலை, 15 நிமிடங்கள் கண்ணாடி முன் நின்று, 'ஆண்கள் விஷயத்தில் நிலை தடுமாறாதே மனமே' என, சுயமாக உறுதிமொழி எடுத்து பழகு. அது, சுய வசியம் செய்வதாக அமையும்.

தன்சுத்தம் பேணு. துவைத்த, சுத்தமான உள்ளாடைகளை அணி. கண்ணியமான ஆடை அணிய கற்றுக்கொள். சங்கீதம் கேள் அல்லது சங்கீதம் கற்றுக்கொள். இரவு, 10:00 மணி முதல் காலை, 6:00 வரை கட்டாயம் துாங்கு.

படுக்கைவிரிப்பு, தலையணை உறைகளை அடிக்கடி மாற்று. தலைகேசத்தை அழுந்த சீவாதே. வாரம் ஒருமுறை எண்ணெய் தேய்த்து குளி. சாதனை பெண்களின் வாழ்க்கை சரிதங்களை வாசி. ஆடம்பரத்துக்கு ஏங்காதே. டீன் ஏஜ் என்பது இளமையில் வரும் ஒரு புயல்காற்று. அதில் மீன் பிடிக்க எண்ணாதே. கவனம் பிசகாதே.

- பிரார்த்தனைகளுடன், பிளாரன்ஸ்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us